தமிழக அரசின் `நீரா' பானம் சாத்தியமா?: சந்தேகம் எழுப்பும் தென்னை விவசாயிகள்

  • 25 மே 2017
படத்தின் காப்புரிமை Getty Images

டெல்லியில் பிரதமர் மோதியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில், தென்னை மரத்தில் இருந்து 'நீரா' பானத்தை தயாரிக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

'''நீரா' அறிவிப்பு செயல்பாட்டிற்குவர தமிழக அரசின் மதுவிலக்கு சட்டம் (1937) 11 மற்றும் 19ம் பிரிவுகளில் 'கள்' என்ற தலைப்பில் இருந்து நீராவை நீக்கவேண்டும். ''இந்த சட்டத்திருத்தத்திற்கான முயற்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்று அரசின் தென்னை வளர்ச்சி குழு அதிகாரி பாலசுதாஹரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

முதல்வரின் டெல்லி பயணத்திற்கு முன்னதாகவே நீரா தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். 'நீரா' உற்பத்தி செய்வதன்மூலம், ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டு வருமானம் சுமார் ரூ.15, 000 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

நீரா மலராத தென்னம்பாளையிலிருந்து எடுக்கப்படுகின்ற பதநீரை போன்ற நீர். புளிக்கவைக்கப்படாமல் பதப்படுத்தப்பட்டு இயற்கைத்தன்மையோடு விற்கப்படும். ஒரு பிரத்யேக கருவியை கொண்டு பாலிதீன் பைகளில் நீரா தென்னை மரத்திலிருந்து சேமிக்கப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசின் இந்த அறிவிப்புகள் மட்டுமே தென்னை விவசாயிகளுக்கு பயன் தராது, நடைமுறையில் வேலையை உடனடியாக தொடங்கினால் மட்டுமே நீரா விற்பனை சாத்தியம் என்கிறார் தமிழக தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சு.பரமசிவம்.

கேரளத்தில் நீரா உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான அரசு விழாவில் பங்கேற்று, அங்குள்ள விவசாயிகளுடன் நேரடி அனுபவங்களை கேட்டறிந்த பரமசிவம், தமிழகத்தில் நீரா விற்பனை செயல்பாட்டிற்கு வர குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும் என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''நீரா தயாரிக்க சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது 200 குழுக்களை மட்டுமே அமைத்துள்ளனர். அடுத்தகட்டமாக சட்டத்திருத்தம் விரைவாக கொண்டுவரப்படவேண்டும். ஒரு நீரா ஆலை தொடங்க குறைந்தது மூன்று கோடி ரூபாய் தேவை.

தேவையான நிதியை அளிக்க வங்கிகள் முன்வரவேண்டும். கேரளாவில் இதுபோன்ற சட்டத்திருத்தம், அரசு உதவி, பயிற்சி எல்லாம் விரைவாக நடந்தது. தமிழகத்தில் இதெல்லாம் கேள்விக்குறிதான்,'' என்கிறார் பரமசிவம்.

மக்களுக்கு நல்லது, தென்னை விவசாயிகளுக்கு நல்லது என்றால், அதை உடனடியக அரசு நிறைவேற்ற ஏன் காலதாமதம் செய்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் மதுவுக்கு எதிராகப் போராடும் திருச்சியைச் சேர்ந்த ஆனந்தியம்மாள்.

படத்தின் காப்புரிமை Getty Images

''நீரா உடலுக்கு கேடு இல்லை என்றால், அரசு உடனடியாக அனுமதி அளித்து, விவசாயிகளுக்கு தேவையான உதவியை அளிக்கலாம். நீரா பதநீரை போல மது இல்லாத பானம், சத்து நிறைந்தது என்று அரசு தெரிவித்தது. தமிழகத்தில் மதுவுக்கு எதிராக பெண்கள் போராடும் நேரத்தில் இது போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.,'' என்றார்.

நீரா பானத்திற்கு இருந்த தடையை போல பனைமர 'கள்' பானத்திற்கு உள்ள தடையும் விரைவில் நீக்கப்படவேண்டும் என்கிறார் விவசாயி நல்லுசாமி. '' அரசு மதுவை விற்பதற்கு பதிலாக, கள், பதநீர் மற்றும் நீரா பானங்களை அந்த கடைகளில் விற்கலாம்,'' என்கிறார் நல்லுசாமி.

இதையும் படிக்கலாம் :

மதுக்கடைகளை எதிர்த்துப் போராடும் பெண்கள் படும்பாடு

ஒற்றை காலில் நிற்பதால் ஆற்றலை சேமிக்கும் ஃபிளமிங்கோ பறவைகள்

'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

'பலி' ஆடுகளாகப் பரிதவிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்