'தினம் ஒரு அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் கல்வித்துறை உயருமா?': மு.க. ஸ்டாலின்

  • 25 மே 2017

அதிமுக அரசின் பள்ளிக் கல்வித்துறை திடீரென ஒரு அரசாணையை, அதுவும் மிக அவசரமாக வெளியிட்டுள்ளதன் நோக்கம், 'கல்வித்தரத்தை உயர்த்துவதா அல்லது நாங்களும் செயல்படுகிறோம்" என வெளி உலகிற்கு காட்டிக் கொள்ளவா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/M.K.STALIN
Image caption 'தினம் ஒரு அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் கல்வித்துறை உயருமா?':

இது தொடர்பாக மு.க,ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அதிமுக அரசு தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோத்தாரி கல்விக்குழுவின் அறிக்கையில், "முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள கல்வியின் தரம் மேல்நிலைக் கல்விக்கு முக்கியம். மேல்நிலைக் கல்வியின் தரம் பல்கலைக்கழக கல்விக்கு முக்கியம்", என்று கூறியிருப்பதை வசதியாக மறந்துவிட்டு, "ஏதோ 11-ஆவது வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாதது மட்டுமே மாணவர்களை பாதிக்கிறது" என்று பிரச்சாரம் செய்வது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்" என்ற நோக்கத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தால், அதை வரவேற்க திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், மாணவர்கள், பெற்றோர்களின் சிரமங்களை உணராமலும், கோத்தாரி கல்விக்குழுவே கவலைப்பட்ட "பொதுத்தேர்வு" பற்றியும் ஆலோசிக்காமல் ஒரு முடிவை எடுக்கும்போது, பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் அதை சுட்டிக்காட்டுவது திமுகவின் பொறுப்பு என்றே கருதுகிறேன்." என மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.

"தினமும் ஒரு அறிவிப்பு" என்பதுதான் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற அளவோடு இந்த முயற்சிகள் அமைந்துவிடாமல், தொடர்ந்து மூன்று வருடம் பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டிய மன அழுத்தத்தைப் போக்க என்ன வழி? மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க என்ன வழி? பள்ளிகளின் தரத்தை படிப்படியாக தேசிய அளவிலான கல்வித்தரத்திற்கு உயர்த்துவதற்கு என்ன வழி? போன்றவை குறித்து சிறந்த கல்வியாளர்கள் கொண்ட குழுவினை அமைத்து, பள்ளிக் கல்வியை, சீர்திருத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை PA

இதற்கிடையே, இதே விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் என தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வுகள் எழுத வேண்டும் என்கிற நிலை, அவர்களுக்கு மிகுந்த அழுத்தத்தையும் வேதனையையும் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

பொதுவாகவே தமிழக பள்ளிக் கல்வி துறையில் மாற்றம் வேண்டும் என்றே பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறினாலும், அதிமுக அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இனி 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு

முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமையன்று, தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என கூறி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அரசாணைப்படி, இனி 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மூன்று மணி நேரத்திற்கு பதிலாக இரண்டரை மணி நேரம் மட்டுமே நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முறையே 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும், ஆகவே அவை மொத்தமாக 1200 மதிப்பெண்கள் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒருவேளை தேர்ச்சி பெறாவிட்டாலும், கல்லூரிகளில் கடைபிடிக்கப்படும் முறையை போல 12-ஆம் வகுப்புக்கு மாணவர்கள் படிக்க தொடரலாம் என்றும், தோல்வியுற்ற பாடங்களுக்கான தேர்வுகளை மாணவர்கள் தனியாக எழுதி பின்னர் தேர்ச்சி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.சி.க்கு இணையாக தமிழகத்தின் கல்வி பாடத் திட்டங்கள் மாற்றப்படும் என இந்த அரசாணை வெளியீடு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பாடத்திட்டங்களுக்கான வரைவு தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டைய மாநிலங்களின் பள்ளிக் கல்வி பாடத்திட்டங்களோடு ஒப்பிட்டும்தான் இது தயார் செய்யப்படுவதாக செங்கோட்டையன் அப்போது கூறினார்.

கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், 2018-19-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கும், 2019-20-ஆம் கல்வியாண்டில் 2, 7, 10, 12 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் 2020-21 ஆம் கல்வியாண்டில் 3, 4, 5, 8 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிக் கல்வி பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

தேசிய தரத்திற்கு இணையாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அப்போது உறுதியளித்தார்.

நாடு தழுவிய தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், கல்வி தரத்தை மேம்படுத்தவும் தான் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறிய செங்கோட்டையன், கல்வி பயிற்றுவிப்பவர்களின் திறனை மேம்படுவத்த அனைத்து விதமான திட்டங்களும் தீட்டப்படும் என்று கூறினார்.

பிற செய்திகள் :

பீரும், ஒயினும் அரை கிளாஸ் குடித்தாலும் ஆபத்து!

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்