ரஜினியின் புதிய படத்தின் பெயர் 'காலா': காரணம் என்ன? இயக்குனர் பா. ரஞ்சித் பேட்டி

  • 25 மே 2017

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்படத்திற்கு காலா எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயரை இன்று வியாழக்கிழமை காலையில் அறிவிப்போம் என இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது டிவிட்டர் வலைத்தளத்தில் முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதே போன்று இந்த திரைப்படத்தின் படத்தின் பெயர் 'காலா' என்று தனுஷ் டிவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் ரஜினியின் 164-ஆவது திரைப்படமாகும்.

படத்தின் காப்புரிமை TWITTER/DHANUSH
Image caption தனுஷ் வெளியிட்ட டிவிட்டர் செய்தி

இந்நிலையில் இத்திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் கதாப்பாத்திரத்தின் பெயர் கரிகாலன். கரிகாலனின் சுருக்கம்தான் 'காலா'. இந்த பெயர் புரியவேண்டுமென்பதற்காக காலா கரிகாலன் என்று தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

ரஜினியுடன் இணையும் நட்சத்திரங்கள் யார்?

''காலா திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுவிட்டனர். இத் திரைப்படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும்'' என்று ரஞ்சித் மேலும் தெரிவித்தார்.

''இத்திரைப்படம் முழுக்க முழுக்க மும்பை வாழ் தமிழர்களை பற்றிய திரைப்படம்'' என்று தெரிவித்த ரஞ்சித், கபாலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் என் மீது வைத்த நம்பிக்கையால்தான், இப்படம் எனக்கு கிட்டியுள்ளது. அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்'' என்று ரஞ்சித் தெரிவித்தார்.

Image caption கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்

கரிகாலன் என்ற பெயர் சோழப் பேரரசர் கரிகாலனை குறிக்கிறதா என்று கேட்டதற்கு, ''இப்பெயர் சோழ பேரரசரைக் குறிக்கலாம். சில அரசியல் தலைவர்களையும் குறிக்கலாம். ஆனால், இந்த திரைப்படத்தில் அவர் பெயர் கரிகாலன் என்பதையே குறிக்கிறது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியலில் நுழையப் போவதாக கூறப்படும் செய்திகள் குறித்துதான் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் பா. ரஞ்சித் தெரிவித்தார்.

மே மாதம் 28-ஆம் தேதியன்று காலா படப்பிடிப்பு தொடங்குகிறது என்று தெரிவித்த இயக்குனர் பா. ரஞ்சித், திரைப்படம் எப்போது வெளிவரும் என்பது போன்றவை படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

ரஜினி, ராதிகா ஆப்தே நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்:

ரஜினி ஸ்டைல்: அரசியலில் எடுபடுமா?

வவுனியா விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு

`கபாலி' மலாய் மொழி பதிப்பில் கிளைமாக்ஸ் மாறியது ஏன்

பிற செய்திகள் :

பீரும், ஒயினும் அரை கிளாஸ் குடித்தாலும் ஆபத்து!

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்