இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

இந்தியாயின் மிக நீண்ட பாலமாக, அசாம் மாநிலத்தை அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோடு இணைக்கும் வகையில்9.15கிலோமீட்டர் நீளமான பாலத்தை லோஹித் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PRONIB DAS

இந்த பாலத்தை பாஜகவின் ஆட்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவுபெற்ற தினத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார்.

1962ல் இந்தியா-சீனா இடையே நடந்த எல்லைப் போரில், சீனா பெருமளவில் ஆக்கிரமித்த பகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தை அசாமுடன் இந்த நீண்ட பாலம் இணைக்கிறது என்பது இதன் முக்கிய அம்சம்.

அருணாச்சல பிரதேசத்தை தன்னுடைய பகுதி என சீனா இன்றும் கூறி வருவதுடன், அதை 'தென்னக திபெத்' என்று கூறுகிறது.

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா சமீபத்தில் வந்திருந்த போது, அவரது வருகைக்கு, சீனா எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமின்றி, அங்கு இந்திய ராணுவம் எந்தவித உள்கட்டமைப்பை கட்டியெழுப்புவதையும் எதிர்த்து வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP

''1962ல் நடந்த போருக்கு பிறகு, இருபது ஆண்டுகளாக அருணாச்சல பிரதேசத்தில் கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. சாலை வசதியை பயன்படுத்தி, சீனா மீண்டும் இந்தியாவை தாக்கும் என்று பலர் முட்டாள்தனமாக நம்பினார்கள். ஆனால் நாம் தற்போது சரியான பாதைக்கு வந்திருக்கிறோம் ,'' என மேஜர் ஜெனரல் ககன்ஜித் சிங் கூறினார்.

''சீனாவுடன் நாம் சண்டையிட வேண்டியிருந்தால், நமது துருப்புகள் மற்றும் பொருட்களை அனுப்ப இந்த லோஹித் பாலம் மிகவும் தேவை. இது சிறந்த விஷயம்,'' என்றார் அவர்.

ஒரு பெரிய எல்லை மாகாணத்தில் உள்கட்டமைப்புகளை பலம் பொருந்தியாக மாற்றுவதற்காக இந்தியா மேற்கொண்ட முயற்சிகளில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டோலா பகுதியை அசாமில் உள்ள - சாதியா பகுதியுடன் இணைப்பதற்கு லோஹித் நதி மீது கட்டப்பட்டுள்ள இந்த 9.15 கிலோமீட்டர் பாலம் ஒரு பகுதியே ஆகும்.

கனரக சரக்கு விமானங்களுக்கான தரையிறங்கும் ஒரு சங்கிலி தொடர் வசதியை மேம்படுத்தும் பணியும் வேகமாக நடந்துவருகின்றது. இது இந்தியாவின் விமான வசதி திறனை அதிகரிக்கும். இது யுத்தத்திற்கு துருப்புக்களை அணிதிரட்ட முக்கியமான வசதியாகும்.

படத்தின் காப்புரிமை DASARATH DEKA

இது இந்தியாவின் போர்விமான தூக்கு திறனை மேம்படுத்தும். இத்திறன் நாட்டின் உட்புறத்திலிருந்து போர் முனைக்கு படைகளை அனுப்ப முக்கியமாகத் தேவைப்படுவது. அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான, இந்திய உள்துறை இணை அமைச்சர், கிரேன் ரிஜுஜு, தனது மாநிலத்தில் 100 சதுர கிமீக்கு 18.65 கிமீ அளவுக்குத்தான் சாலை வலையமைப்பு வசதி இருப்பதாகவும், இது இந்தியாவின் சராசரியான, 100 சதுரகிமீக்கு 84 கிமீ என்பதைவிட மிகவும் குறைவு என்றும் கூறுகிறார்.

''சீனா இன்னும் ஆக்ரோஷம் அடைந்துவரும் வேளையில், நாம் நமது பிராந்தியத்தை பாதுகாக்க நமது உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தருணம் இது,'' என்று ரிஜுஜு தெரிவித்தார்.

சீனாவுடன் உள்ள நீண்ட எல்லையை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி இந்த உள்கட்டுமானம் என்ற கருத்தை இந்தியாவின் உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் ஆதரித்தார்.

நாம் அமைதியை விரும்புகிறோம். ஆனால் அந்த அமைதி கௌரவத்துடன் வரவேண்டும். நாம் பலவீனமானவர்கள் என்று யாரும் நினைப்பதைத் தடுக்கக் கூடிய வல்லமை நமக்கு வேண்டும்``, என்று அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளை காக்கும் இந்திய-திபெத்திய எல்லை காவல் துறையினரின் கொடி ஏற்றும் நிகழ்வின் போது குறிப்பிட்டார்.

அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி, யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அந்த யதார்த்தம் மாறாது, என்று, தலாய்லாமாவை டவாங் என்ற புத்த மடாலயம் அமைந்திருக்கும் நகருக்கு அழைத்துச் சென்ற போது, தெரிவித்தார் அமைச்சர் ரிஜுஜு.

இந்தியா இரண்டு மலை ராணுவப் படை பிரிவுகளை உருவாக்கியுள்ளது. மேலும் அது தாக்கும் பிரிவு ஒன்றையும் உருவாக்கிவருகிறது. இது எல்லாம் சீனாவுக்கு எதிரான தனது தற்பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சி.

``ஆனால் துருப்புகளை விரைவாக நகர்த்த தேவையான சாலைகளும் , பாலங்களும் இல்லாவிட்டால், படை பலம் இருந்து பலன் இல்லை. துருப்புகளை, அவைகள் வைத்திருக்கும் பலமான ஆயுதங்களுடன் போர்முனைகளுக்கு விரைவாக நகர்த்துவதுதான் வெற்றிக்கு முக்கிய காரணி`` என்றார் ககன் ஜித் சிங்

டோலா- சாதியா பாலம், 60 டன் போர் டாங்கிகளை தாங்கும் திறன் கொண்டது என்று ஒரு ராணுவ பொறியியலாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த பாலத்தின் திறப்பு விழாவை பற்றி உள்ளூர் மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

''ஆறு நதிகள் பிரம்மபுத்ராவில் சங்கமிக்கும் ஒரு புள்ளியில் இந்த பாலம் அமைக்கப்படுவது நினைத்துபார்க்கமுடியாத ஒன்று,''என உள்ளுர்வாசியான குஞ்ஜன் சஹாரியா பிபிசியிடம் தெரிவித்தார்.

'இது ஒரு ராணுவ விஷயம் மட்டும் அல்ல, இது அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்று நான் உறுதியளிக்கிறேன்,''என அசாம் மாநிலத்தின் முதல்வர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

இந்த பாலம் ஆற்றின் இரு பக்கங்களிலும் உள்ள மக்களின் பயண நேரத்தை எட்டு மணிநேரமாக குறைக்கும்.

''இது எங்களுக்கும், ராணுவத்திற்கும் சிறந்த வசதி,'' என சதியாவின் திம்பிஷ்வர் கோகோய் பிபிசியிடம் கூறினார்.

இதையும் படிக்கலாம் :

கரிகாலனாக ரஜினிகாந்த்; 'காலா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்

மதுக்கடைகளை எதிர்த்துப் போராடும் பெண்கள் படும்பாடு

ஒற்றை காலில் நிற்பதால் ஆற்றலை சேமிக்கும் ஃபிளமிங்கோ பறவைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்