துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்

குழந்தை பருவம் மற்றும் அப்பாவித்தனத்தின் இழப்பை காட்டும் ஓவியங்கள். மூடப்பட்ட வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தின் வன்முறையை பேசும் சித்திரங்கள், தற்போதைய பயங்கரவாதத்தையும் எதிர்காலத்திற்கான அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன.

தெளிவான நிறங்களை கொண்ட இந்த சித்திரங்கள் ரத்தம் மற்றும் தீயை பிரதிபலிக்கும் சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டிருக்கிறது. வல்லமை கொண்ட கறுப்பு வண்ணம், வானத்தையும், பூமியையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இருளவில்லை, ஆனால் இருளை நோக்கிச் செல்லும் தோற்றம்.

படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA/AFP/Getty Images

இந்தக் கலைப்படைப்புகளின் கர்த்தாக்கள் யார்? இந்திய அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும், நீண்ட காலமாக மோதல்கள் நீடித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த பள்ளிச் சிறார்கள் வரைந்த சித்திரங்கள் இவை. தற்போது, பெரியவர்களின் வன்முறையால் பாழ்படுத்தப்பட்ட அவர்களின் குழந்தைப் பருவத்தையே சித்திரங்கள் சித்தரிக்கின்றன.

ஒரு முகலாய பேரரசர் மகிழ்ச்சியடைந்து, "மண்ணில் சொர்க்கமாக" வீடுகளை உருவாக்கியது, புல்வெளிகள், நீரோடைகள், பழத்தோட்டங்கள் மற்றும் மலைகள் போன்றவை அவர்களது கைவண்ணங்களில் வெளிப்படவில்லை. கல் வீசும் எதிர்ப்பாளர்கள், துப்பாக்கி ஏந்திய துருப்புக்கள், எரியும் பள்ளிகள், இடிந்து விழுந்த தெருக்கள்,துப்பாக்கி சண்டைகள், அதீத ஆர்வத்துடன் கொலைகளை செய்வது ஆகியவையே பிஞ்சுக் குழந்தைகளின் சித்திரங்களின் கருப்பொருளாக மீண்டும்-மீண்டும் வெளிப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை BILAL BAHADUR
Image caption பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்வீசும் பள்ளி, கல்லூரி மாணவிகள்

அமைதியற்ற அந்தப் பகுதியின் சென்ற ஆண்டு கோடைக்காலம் ரத்தக்களறியாக இருந்தது.

காஷ்மீரில் செல்வாக்குமிக்கவராக இருந்த புர்ஹான் வானி கடந்த ஜூலை மாதம் இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டதை அடுத்து, முஸ்லீம்களின் ஆதிக்கம் நிறைந்த பள்ளத்தாக்குப் பகுதியில் நிகழ்ந்த மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த, பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதில் பலர் கண் பார்வையை இழந்தனர். 15 வயதுக்கு குறைவான 1200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மோதல்களில் காயமடைந்தனர். "பல இளைஞர்களின் கண் பார்வை முற்றிலுமாக பறிபோனது வேறு சிலருக்கு ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது".

படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA/AFP/Getty Images

குழந்தைகள் விளையாட வேண்டிய வீதிகளில் தலைவிரித்தாடிய வன்முறைகளால்,பள்ளிகள் மூடப்பட்டன. மாதக்கணக்கில் குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். நண்பர்களையும், விளையாட்டுக்களையும் இழந்த அவர்களின் குழந்தைத்தனம் வன்முறைக்கு பலியானது மிகப்பெரிய சோகம்.

வீடுகளுக்கு வந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள், வீட்டிலேயே நடைபெற்ற தேர்வுகளுக்கு பெற்றோரே கண்காணிப்பாளர்கள்! பள்ளியில் தேர்வு நடத்த முடியாத ஒரு பள்ளியோ மாணவர்களுக்கான தேர்வை சிறிய உள்ளரங்க மைதானத்தில் நடத்தியதை நினைத்துப் பார்த்தால் அங்கு நித்தமும் நிலவிவரும் வன்முறைகளின் கொடூரமும், குழந்தைகளின் நிலையும் புரியும்.

படத்தின் காப்புரிமை ROUF BHAT/AFP/Getty Images)

குளிர்காலத்தில் மீண்டும் பள்ளித் திறக்கப்பட்டாலும், பல மாணவர்கள் எரிச்சலுடனும், பதட்டமாகவும், தெளிவற்றும் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசு பணியாளர்கள்,வர்த்தகர்கள், பொறியியல் வல்லுனர்கள், வங்கியாளர்கள் என பலதரப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நிலைமையும் ஒன்றுபோல் தான் இருந்தது.

வெளிறிப்போயும், பேயடித்தது போலவும் குழந்தைகள் காணப்பட்டதாக முன்னணி பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் சொல்கிறார்.

பள்ளிக்கு வந்த குழந்தைகள், அழுதுக்கொண்டே ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர். அடைகோழியாய் வீடுகளில் பாதுகாக்கப்பட்ட குழந்தைகள் ஆசிரியர்களிடம் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? ஏன் பள்ளிக்கூடத்தை மூடினீர்கள் என்பது தான்! மாணவர்களின் ஒரு வரி கேள்விக்கு விடை சொல்லமுடியாமல், ஆசிரியர்கள் மெளனமாக நிற்க நேர்ந்த கனத்த கணம் அது.

சில குழந்தைகள் வித்தியாசமாக நடந்துக் கொண்டார்கள். காரணமே இல்லாமல் கத்தினார்கள், மேசை-நாற்காலிகளை உடைத்தனர், வன்முறையை வெளிப்படுத்திய அவர்களின் செயல்களைக் கட்டுக்குள் கொண்டு வர என்ன செய்வது? அவர்களின் ஆறாக் கோபத்தை ஆற்ற ஆலோசகர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் ஆலோசகர்கள் பெரிய பங்கு வகித்தார்கள்.

சுமார் 300 குழந்தைகள் பள்ளியின் அரங்கில் உட்கார வைக்கப்பட்டு காகிதமும், வண்ணங்களும் கொடுத்து சித்திரங்களை தீட்டச் சொன்னோம். சித்திரங்களில் அவர்களின் சீற்றங்கள் வெளிப்பட்டன.

'உளவியல் ரீதியான நிவாரணம்'

"முதல் நாள் அவர்களுக்கு தோன்றியதை மட்டுமே வரைந்தார்கள், ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அது அவர்களுடைய வலுவான உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்தி உளவியல் ரீதியான நிவாரணம் வழங்கியது".

பெரும்பாலான குழந்தைகள் பென்சில்கள் மற்றும் வெளிர் நிறங்களைக் கொண்டே சித்திரம் தீட்டினார்கள். தலைப்புகள், வார்த்தைகள், பேசும் பலூன் குறியீடுகளைக் கொண்டு படங்களின் மீதே எழுதினார்கள் பலர்.

தீப்பிடித்து எரியும் பள்ளத்தாக்கு, கலகம் சூழ் கடைத்தெரு, அனல் தகிக்கும் சூரியன், வானில் பறவைகள் என பொருத்தமற்ற பின்னணியில் ஓவியங்களை வரைந்தார்கள். தழும்புகளால் நிறைந்த இளம் முகங்கள், பெல்லட் குண்டுகளால் பார்வையிழந்த பரிதாபமான கண்கள் என முரண்பாடான கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளிப்பட்டன.

"என்னால் உலகத்தையோ, நண்பர்களையோ மீண்டும் பார்க்க முடியாது. நான் குருடாக இருக்கிறேன் "என்று ஒரு உயிரோட்டமான படம் கூறுகிறது.

குழந்தைகளின் சாம்ராஜ்ஜியத்தில் இறப்பே கிடையாது என்று ஒரு கவிஞர் சொன்னார். ஆனால், காஷ்மீரில் குழந்தைகளின் சாம்ராஜ்ஜியத்தில் ரத்தம் தோய்ந்த மனிதர்களே நீண்ட காலமாக வசிக்கின்றனர். தெருக்களில் சடலங்கள் கிடப்பதும்,மனிதர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவதையும் பெரும்பாலும் எல்லா குழந்தைகளின் படங்களுமே பிரதிபலிக்கின்றன.

"இது காஷ்மீரின் அழகான மலைகள், இது சிறுவர்களின் பள்ளிக்கூடம். இடதுபுறத்தில் இருக்கும் ராணுவ வீரர், அவருக்கு எதிரில் விடுதலை கோரி கல் எரியும் போராட்டக்காரர்கள்" என ஒரு பள்ளிச் சிறுவன் தனது ஓவியத்திற்கு விளக்கமளிக்கிறான்.

"போராட்டக்காரர்கள் கற்களை வீசியெறிந்தால், ராணுவத்தினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவார்கள். துப்பாக்கிச்சூட்டில் ஒரு பள்ளி மாணவன் இறந்து போகிறான், அவரது நண்பன் தனியாக நிற்கிறான்"

தொடரும் மற்றொரு கருப்பொருள் விரும்பத்தகாத கனவு "எரியும் பள்ளிகள்". எரியும் பள்ளியில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள், உதவி கோரி அலறுகிறார்கள். எங்கள் பள்ளியை, எங்களை, எங்கள் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள்.

வேறு சிலர் கோபமாக இருக்கிறார்கள், அரசியல் பேசுகிறார்கள். விடுதலைக்கு ஆதரவான வரையப்பட்ட படங்கள், காஷ்மீரை காப்பாற்றுங்கள் என்று அடையாளக் குறிப்புகள் சொல்கின்றன.

புர்கான் வானிக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிரான வாசகங்களையும் காட்டும் அவர்களின் படங்களில் காஷ்மீர் ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கிறது.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் இருக்கும் மற்றுமொரு கிராமத்தில் உள்ள குழந்தைகள், தங்கள் வீடுகளின் மேல் இந்தியக்கொடிகள் பறப்பதை வரைந்திருப்பதை ஒரு முன்னணி ஓவியர் கவனித்தார்.

பகையான அண்டைவீட்டார்

முகம் சுளிக்கும் ஒரு மனிதனின் முகம், கசப்பை உருவகபப்டுத்தும் வகையில் இரண்டு வகையான தோற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி மற்றும் எதிரிகளாய் சண்டையிடும் இரு அண்டை நாடுகளிடையே அகப்பட்டுக் கொண்ட நிலத்தின் சோகத்தை இது பிரதிபலிக்கிறது.

பென்சிலில் வரையப்பட்ட, மகனுக்காக காத்துக் கொண்டிருக்கும் தாயின் வரைபடம் இதயத்தை பிளப்பதாக இருக்கிறது. இக்காலக்கட்டத்தில் இணையம் மற்றும் மொபைல் போன் சேவைகள் முடக்கப்பட்டதால் குழந்தைகள் தங்கள் ஏமாற்றத்தை தெரிவிக்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்ட் தெரபிஸ்ட் (கலைகளின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வைத்து, மனதின் எண்ணங்களை புரிந்துக் கொண்டு மனோதத்துவரீதியாக சிகிச்சையளிப்பது) டெனா லாரன்ஸ் பள்ளத்தாக்கில் வசிக்கும் இளைஞர்களுக்கு சில கலைப் பாடங்களை நடத்தினார். அவர்களின் ஓவியங்களில் கறுப்பு வண்ணத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள். ஓவியங்களில் பெரும்பாலானவை "கோபம், ஆத்திரம் மற்றும் மனச்சோர்வை" பிரதிபலித்தன.

காஷ்மீரி கலைஞர் மசூத் ஹுசைன், கடந்த நான்கு தசாப்தங்களாக 4 முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கலந்துக் கொள்ளும் கலைப் போட்டிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

"அவர்கள் அமைதியில் இருந்து வன்முறைக்கு மாறிவிட்டனர்.

செவ்வானம், சிவப்பு மலைகள், நெருப்பில் எரியும் ஏரிகள், பூக்கள் மற்றும் வீடுகள் என வன்முறையை பிரதிபலிக்கும் சிவப்பு நிறத்தை, இயற்கையுடன் பொருத்திவிட்டனர். துப்பாக்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிச்சண்டை, வீதிகளில் உயிரிழக்கும் மக்கள் என வன்முறையால் ஏற்படும் தோற்றத்தை இயல்பானதாக எடுத்துக் கொள்ள தொடங்கிவிட்டார்கள்" என்று சொன்னார்.

பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளின் கலைப்படைப்பு அவர்களின் கூட்டு மன அதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக, ஸ்ரீநகரைச் சேர்ந்த மனநல மருத்துவர் அர்ஷத் ஹுசைன் கூறுகிறார்.

"குழந்தைகள் சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அது உண்மையல்ல, சுற்றியுள்ள எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு, தங்களுக்குள் தக்கவைத்துக்கொள்வார்கள்" என்கிறார் அவர்.

"இந்த கலைப்படைப்புகள் வீட்டில் குடும்பத்தினருடன் வசிப்பவர்களுடையது. குடும்பத்துடன் இல்லாமல், தெருக்களில் வசிக்கும் குழந்தைகளை பற்றி கற்பனை செய்து பாருங்கள். வன்முறைக்கு நெருக்கமாக உள்ள அவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்?"

9/11 தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குழந்தைகள் வரைந்த "அழுகின்ற குழந்தைகள், ஒசாமா பின்லேடனால் தரைமட்டமான இரட்டை கோபுரம் தீப்பிடித்து எரிவது, செந்தழல் வானம், ஐ லவ் யூ நியூயார்க் என்ற வாசகம் எழுதிய உடை அணிந்திருக்கும் பயந்த சிறுமி" சித்திரங்களை நினைவூட்டுவதாக இருக்கிறது.

காஷ்மீர் மாநில குழந்தைகளின் தேவதைக் கனவுகள், அச்சமூட்டும் விசித்திரமான கனவுகளாக விரைவில் மாற்றமடைந்து விட்டாலும் இன்னும் நம்பிக்கை, நீறு பூத்த நெருப்பாய் ஒளிந்துக் கொண்டிருக்கிறது.

எங்கள் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கட்டும், எங்களுக்கு கல்வியூட்டுங்கள்… இந்த பிரச்சனைகளை காரணமாக கொண்டு எங்கள் எதிர்காலத்தை இருட்டடிப்பு செய்துவிடாதீர்கள் என்ற கோரிக்கை ஒரு குழந்தையின் சித்திரத்தின் மூலமாக வெளிப்பட்டு நம் சிந்தையை தூண்டுகிறது.

நிலைமையை சுமுகமாக்குவதற்கான காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. காஷ்மீர் மலைச் சரிவுகளில் இருந்து உதிக்கும் சூரியன் சிகப்பு நிறத்தை விடுத்து, பொன்நிறமாக ஒளிரட்டும், குழந்தைகளின் மனச்சோர்வு சூரியனை கண்ட பனிபோல் விலகட்டும், அங்கும் விடிவெள்ளி முளைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

காஷ்மீர் குறித்த பிற செய்திகள்:

ராணுவ அதிகாரிக்கு விருது: பீதியின் பிடியில் காஷ்மீர் `மனித கேடயம்'

காஷ்மீர்: சிப்பாய்களின் உடல்களை பாகிஸ்தான் சிதைத்ததாக இந்தியா குற்றச்சாட்டு

காஷ்மீரின் “கல்வீசும் பெண்கள்” (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்