‘கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்னடையச் செய்யும் மோதி அரசின் நடவடிக்கைகள்’

  • 28 மே 2017

(பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்றாண்டுகளைப் `'பூர்த்தி செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி, தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் சிலரும், பகுப்பாய்வாளர்களும் பிபிசிதமிழ்.காம் பக்கங்களில் தங்கள் கருத்துகளை எழுதுகின்றனர். அந்தக் கட்டுரைத் தொடரில் பொருளாதாரத்துறைத்துறையில் மோதி அரசின் நடவடிக்கைகள் என்பது குறித்து பொருளாதார வல்லுநர் பேராசிரியர் சீனுவாசன்எழுதியுள்ள கட்டுரை இன்று இடம் பெறுகிறது. இத்தொடர்களில் வெளியாகும் கருத்துகள் கட்டுரையாளர்களுடைய சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசு பதவியேற்ற ஒரே ஆண்டில் திட்டக்குழுவை கலைத்தது.

திட்டக்குழு என்பது அதிகாரத்தை மையப்படுத்தும் ஒரு அமைப்பு என்றும், அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதா திட்டக்குழு?

1950, 1960-களில் இந்த வாதம் சரியானது என்றாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் திட்டக்குழுவின் செயல்பாடு வெகுவாக மாறியது.

தேசிய வளர்ச்சி குழுவில் எல்லா மாநிலங்களையும் உறுப்பினர்களாக கொண்ட ஓர் அமைப்பில்தான் ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நிதி குழுவைப்போல திட்டக் குழுவிலும் காட்கில்-முகர்ஜி பார்முலாபடி மாநில திட்டத்திற்கான நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.

திட்டக்குழு கலைப்பு

மாநிலங்களின் ஆலோசனையை ஏற்று மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி வழங்குவதிலும் பல மாற்றங்களை செய்ய மத்திய அரசு 2013-ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்னவென்றால் பொருளாதார திட்டமிடல் என்பதே சந்தை பொருளாதாரத்திற்கு எதிரானது. எனவே அதனை மூடுவது என்ற முடிவை எடுத்தது.

திட்டக் குழுவை கலைத்தபிறகு மத்திய அரசிடம் பொருளாதார கொள்கை சார்ந்த அதிகாரம் குவியவில்லையா என்ற கேள்வியை எழுப்புவோம்.

நிதி ஆயோக்

திட்டக் குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கி அதில் எல்லா மாநில முதலமைச்சர்களும் உயர்மட்ட குழு உறுப்பினர். நிதி ஆயோக் கூட்டாட்சி தத்துவத்தின் உதாரணம் என்று பா.ஜ.க. கூறியது.

ஆனால், இதில் உள்ள நிரந்தர உறுப்பினர்களை மத்திய அரசே தன்னிச்சையாக நியமித்துக்கொண்டது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கிய மோதி அரசு

நிதி ஆயோக் கூட்டாட்சியின் உதாரணமாக இருக்க நாட்டின் நான்கு பகுதிகளிலும் துணைக் குழுக்களை அமைக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு இன்று வரை அதனை செய்யவில்லை.

நிதி ஆயோக் கூட்டங்கள் நடத்தப்படும் முறையும் அதில் எடுக்கப்படும் முடிவுகளும் அதிகாரத்தை பரவலாக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.

ஆனால் திட்ட குழுவை கலைத்தது முதல் மத்திய அரசின் பொருளாதார சமூக செலவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளன.

எனவே திட்டகுழுவை கலைத்தது கூட்டாட்சியை முன்னெடுத்து செல்ல அல்ல, அரசின் செலவுகளை குறைத்து தனியார் பங்களிப்பை அதிகரிக்கத்தான் என்பது தெளிவாகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்கள் உட்பட அனைத்தும் மாநிலங்களும் இந்த மாற்றத்திற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒப்புக்கொண்டது, அவர்கள் பா.ஜ.கவின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்தனர் என்றே சொல்லவேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணான ஜிஎஸ்டி வரி

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியை இப்போது பெரும் உத்வேகத்துடன் பா.ஜ.க. அரசு முன்னெடுத்து செல்கிறது.

இதுவும், சந்தை பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் இன்னொரு வரி அமைப்பு. இதிலும் கூட்டாட்சித் தத்துவம் பின்னடைவை சந்திக்கின்றது.

பொருள் உற்பத்தி, இறக்குமதி மீதான வரிகள் தவிர மற்ற வரிகளான விற்பனை வரி, கேளிக்கை வரி, வாகன வரி என்று எல்லா மறைமுக வரிகளும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன.

சந்தை பொருளாதாரத்தை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கிய பிறகு மாநிலங்களின் வரி அமைப்பில் உள்ள வேறுபாடுகளால் இந்தியா முழுமைக்கு வியாபாரத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் சிரமத்தை எதிர்கொண்டன.

எனவே, விற்பனை வரி முதல் அனைத்து மறைமுக வரிகளையும் ஒருங்கிணைத்து மதிப்பு கூட்டல் வரியாக மாற்ற 2000-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு முயன்று வருகிறது.

Image caption கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணான ஜிஎஸ்டி வரி

இந்த வரி அமைப்பு மாற்றத்தினால் ஏற்பாடு வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டதினால் VAT என்ற வரியை 2005 ஏறக்குறைய எல்லா மாநிலங்களும் நடைமுறைபடுத்தின.

இப்போது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இதில் எல்லா மாநிலங்களும் உறுப்பினர்கள்.

மத்திய அரசின் நிதி அமைச்சரும், துணை நிதி அமைச்சரும் உறுப்பினர்கள். இதில்தான் ஜிஎஸ்டி தொடர்பான எல்லா முடிவுகளும் எடுக்கப்படும்.

ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின்படி மத்திய அரசோ, மாநிலங்களோ தனிச்சையாக எந்த முடிவையும் எடுக்கமுடியாது.

எனவே ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் இங்கு முடிவுகள் எட்டபடுகின்றன என்று மத்திய அரசு கூறி, இதுவும் கூட்டாட்சி தத்துவத்தின் உச்சம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறது.

ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் தமிழகம் மற்றும் கர்நாடகம்

ஆனால், ஒவ்வொரு மாநிலமும் சொந்த லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் செயல்படுவதால் அது மத்திய அரசுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ

உதாரணமாக, கேரளா, மேற்கு வங்காளம் மத்திய அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டிருந்தாலும், ஜிஎஸ்டி வரியால் தங்கள் மாநில வரி வருவாய் உயரும் என்பதால் மத்திய அரசுடன் ஒத்துபோகின்றன. ஜிஎஸ்டி வரியினால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரம் , குஜராத் ஆகியவை மௌனமாக உள்ளன.

கர்நாடகாவும், தமிழ்நாடும் பெயரளவில் எதிர்க்கின்றன, ஆனால் மற்ற மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் அரசியல் சாதுரியம் இப்போது இந்த மாநிலங்களின் தலைமைக்கு இல்லை.

மற்ற சிறிய மாநிலங்களும் தங்கள் வரி வருவாய் உயரும் என்ற எதிர்பார்ப்பில் GSTயை ஆதரிக்கின்றன. ஆனால், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்திய பிறகு எழும் குழப்பங்கள் அந்தந்த மாநிலத்தில் பெரிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தும், அப்போது மீண்டும் கூட்டாட்சி தத்துவம் விவாதிக்கப்படும்.

ஆனால், அது காலம் கடந்து நிகழப்போவதால் எவ்வித பயனும் அளிக்காது.

கட்டுரையாளர் சீனுவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை இணைப் பேராசிரியர் ஆவார்.

பிற செய்திகள் :

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பால் தவித்த பயணிகள் : என்ன சொல்கிறது நிறுவனம்?

புதைத்தல், எரித்தல் போய் இப்போது பசுமை தகனம் !

இயற்கை சீற்றத்தால் இலங்கையில் 2 லட்சம் பேர் பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்