மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

  • 29 மே 2017

(பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்றாண்டுகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி, தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் சிலரும், பகுப்பாய்வாளர்களும் பிபிசிதமிழ்.காம் பக்கங்களில் தங்கள் கருத்துகளை எழுதுகின்றனர். அந்தக் கட்டுரைத் தொடரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி சென்னிமலை எழுதியுள்ள கட்டுரை இன்று வெளியாகிறது. இத்தொடர்களில் வெளியாகும் கருத்துகள் கட்டுரையாளர்களுடையவையே. பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

ஜோதிமணி சென்னிமலை

நரேந்திர மோதி அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன.

இந்தக் காலகட்டத்தை, இந்த அரசை அதன் செயல்பாடுகள் அடிப்படையில் மதிப்பிடுவது தவிர்க்க முடியாதது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சில முக்கிய வாக்குறுதிகளை மோதி அளித்தார். அதனடிப்படையில் அரசை மதிப்பிடுவதே நியாயமானது:

1. நல்ல நாட்கள் வரப்போகின்றன

2. அனைவராலும், அனைவருக்குமான வளர்ச்சி

3. வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள்

4. வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை நூறு நாட்களுக்குள் கொண்டுவருவோம் ( பா.ஜ.கவின் மதிப்புப்படி 80,000 கோடி ரூபாய் கறுப்புப் பணம்- அதிலிருந்து பதினைந்து லட்சம் ரூபாய் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் போடப்படும்).

5. ஊழலை ஒழிக்க லோக்பால் அமைக்கப்படும்.

6. விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுக்கு மேல் 50% அதிகரித்து, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.

விஞ்சும் ஏமாற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இன்போசிஸ், டாடா, விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

அரசு தனது பதவிக் காலத்தின் பாதி நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் இவற்றில் எதை நிறைவேற்றியிருக்கிறது அல்லது நிறைவேற்றுவதற்கான முயற்சியையாவது செய்திருக்கிறது என்பதை மதிப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

வருடத்திற்கு வெறும் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியிருக்கின்றன.

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ஆதரவின்மை, உற்பத்தி குறைவு, புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாதது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உள்நாட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது, பணமதிப்பு நீக்கம் போன்றவை ஏற்கனவே இருந்த கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள் :

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% பங்களிப்பு செய்துவந்த தகவல் தொழில்நுட்பத் துறை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது.

இன்போசிஸ், டாடா, விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

இந்தச் சூழலில் மத்திய அரசு, மாடுகளுக்கு ஆதார் அட்டை கொடுப்பதுபற்றித் தீவிரமாக சிந்தித்து வருகிறது!

எவ்வளவு பொறுப்புள்ள அரசாங்கம்!

விவசாயிகளை அசட்டை செய்யும் மோதி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அவ்வளவு வேலைப்பளு மிகுந்த பிரதமருக்கு நடிகர்கள், நடிகைகள், பெருநிறுவன முதலாளிகள், பிரபலமானவர்களைச் சந்திப்பதற்கு மட்டும் நேரமிருக்கிறது!

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் வரலாறு காணாத வறட்சியால் நிலைகுலைந்து போயுள்ளன.

விவசாயிகளின் தற்கொலை நாட்டையே உலுக்கி வருகிறது.

கடன் பிரச்சனைதான் விவசாயிகளை பெரும்பாலும் தற்கொலையை நோக்கி தள்ளக்கூடியது.

இந்த நெருக்கடியான நேரத்தில் அரசு விவசாயிகளுடன் நிற்கிறது என்கிற நம்பிக்கையை முதல் கட்டமாக ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாய நெருக்கடிகளுக்கான நிரந்தரத் தீர்வல்ல என்றபோதிலும் தற்கொலையின் பிடியிலிருந்து விவசாயிகளை காப்பாற்றும் ஒரு உடனடி நிவாரணம்.

எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு இதைத்தான் செய்தது.

ஆனால் மோதி அரசுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஐந்தரை லட்சம் கோடிகள் வரை வரி தள்ளுபடி செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை!

மேலும் தேர்தலின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்குறுதி, உற்பத்தி செலவுக்கு மேல் 50% வைத்து, கூடுதலான குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தருவது.

ஆனால், தற்போது அவ்வாறு தர இயலாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கையை விரித்துவிட்டது.

இந்தியாவின் மனசாட்சியை உலுக்கிய தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டத்தின் போது பிரதமர் விவசாயிகளை சந்திக்கக்கூட மறுத்துவிட்டார்.

அவ்வளவு வேலைப்பளு மிகுந்த பிரதமருக்கு நடிகர்கள், நடிகைகள், பெருநிறுவன முதலாளிகள், பிரபலமானவர்களைச் சந்திப்பதற்கு மட்டும் நேரமிருக்கிறது!

ஊழல் மீது எங்கே நடவடிக்கை ?

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR
Image caption ஒரு நேர்மையான அரசு எதற்கு ஊழலை கண்காணிக்கும் அமைப்புகளைப் பார்த்துப் பயப்படவேண்டும்?

கடந்த தேர்தலின்போது ஊழல் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தது.

காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது A-Z வரையிலான ஊழல் குற்றச்சாட்டுகளை நரேந்திரமோடி அடுக்கினார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் ஏன் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை!

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் உடனடியாக லோக்பால் அமலுக்கு வரும், ஊழல் ஒழிக்கப்படும் என்று மேடைக்கு மேடை முழங்கினார். என்ன ஆனது?

ஊழலை ஒழிப்பதற்குப் பதிலாக ஊழலை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் அமைப்புகளை மோடி அரசு ஒழித்துக்கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள் :

தகவல் அறியும் உரிமைச் சட்டம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழலை வெளிக்கொணர்வோர் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் என்று காங்கிரஸ் அரசு ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கிய அனைத்து சட்டங்களும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, முடக்கப்பட்டுவிட்டன.

லோக்பால் சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அதற்கு உறுப்பினர்களை நியமிக்க வேண்டியதுதான் மோடி அரசு செய்ய வேண்டிய பணி.

ஆனால் உச்சநீதிமன்றத்திலேயே லோக்பாலை அமைக்கமுடியாது என்று சொத்தைக் காரணத்தை முன்வைத்து வாதாடி உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தைப் பெற்றது.

ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் லோக்பாலைக் கிடப்பில் போட்டுவிட்டது.

ஒரு நேர்மையான அரசு எதற்கு ஊழலை கண்காணிக்கும் அமைப்புகளைப் பார்த்துப் பயப்படவேண்டும்?

மீட்கப்படாத கறுப்புப் பணம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்ச ரூபாய் வந்துசேராவிட்டாலும் பரவாயில்லை. 80,000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் என்ன ஆனது ?

ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் கொண்டுவரப்பட வேண்டிய கறுப்புப்பணம் பற்றி மூன்றாண்டுகள் ஆகியும் பேச்சே இல்லை.

பனாமா பேப்பர் குறித்து பாகிஸ்தான் கூட அந்நாட்டின் பிரதமர் மீது விசாரணை நடத்துகிறது.

ஆனால் இன்றுவரை மோதி அரசு பட்டியலைக்கூட வெளியிட மறுக்கிறது.

பனாமா பட்டியலில் இருப்பதாக நம்பப்படும் நடிகர் அஜய் தேவ்கன் போன்றோர் பிரதமர் மோதிக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்!

நம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்ச ரூபாய் வந்துசேராவிட்டாலும் பரவாயில்லை. 80,000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் என்ன ஆனது ?

அதைக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தெரிந்துகொள்கிற உரிமை மக்களுக்கு இருக்கிறதல்லாவா?

இன்றுவரை எதிர்க்கட்சிகள் எவ்வளவோ கேட்டும் வெள்ளை அறிக்கைகூட வெளியிட மறுக்கிறது அரசு.

அப்படியானால் யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறது?

" அனைவராலும், அனைவருக்குமான வளர்ச்சி "அவல நகைச்சுவையென காற்றில் உறைந்துகிடக்கிறது.

மாட்டிறைச்சியின் பெயரால் மனித உரிமை மீறல்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

மாட்டிறைச்சியின் பெயரால் இஸ்லாமியர்களும், தலித்துகளும், பழங்குடியினரும் கொடூரமான தாக்குதல்களுக்கும், கொலைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

பசு காப்பாளர்கள் என்ற பெயரில் அரசு ,ஆர் எஸ் எஸ் சார்ந்த துணை அமைப்புகளின் குண்டர்களை களத்தில் இறக்கிவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

மன்மோகன் சிங்கை பேசாத பிரதமர் என்று விமர்சனம் செய்த மோதி இது குறித்து ஒருவார்த்தை கூட பேசுவதில்லை.

உனா சம்பவத்திற்குப் பிறகு மக்களின் கொந்தளிப்பை உணர்ந்து மாநில அரசுகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், இதுகுறித்த கோப்புகளை தயாரிக்கவேண்டும் என்று ஒருமுறை சொன்னார்.

அதற்குப் பிறகு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் , தலித்துகள் மீதான தாக்குதல் இன்னும் மோசமாக கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதுதான் வலிமையான பிரதமருக்கு அழகா?

இப்பொழுது இந்த பசு பாதுகாப்பு விவசாயிகளையும், பல்வேறு இனங்களின் உணவுப் பழக்கத்தையும், நம்பிக்கைகளையும், சடங்குகளையும்,சம்பிரதாயங்களையும்கூட விட்டுவைக்கவில்லை.

இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் தாக்கும்போது மௌனித்துக் கிடந்தவர்களின் மனசாட்சியை உரசிப்பார்க்கிறது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் புதிய அறிவிப்புகள்!

மூக்கணாங்கயிறு இல்லாமல் மாடு,எருமை வளர்க்கும் புதிய புரட்சிகள் நடந்தேறி வருகின்றன!

கருப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் எல்லாவற்றையும் ஒரே அஸ்திரத்தில் வீழ்த்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்ட பணமதிப்பு நீக்கம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தொழில்களை,வேலைவாய்ப்புகளை, சாதாரண மக்களை ஒழித்துவிட்டது.

எண்ணமுடியாத அளவு, இந்திய உழைக்கும் மக்களின் கறுப்புப்பணம் ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கிறது.

இன்னும் எண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்!

சாதாரண மக்கள் வேகாத வெயிலில் மாதக்கணக்கில் கால்கடுக்க நின்றதும், நூற்றுக்கணக்கானவர்கள் பலியானதுமான சோகம் எளிதில் மறக்கக்கூடியதில்லை!

பாகிஸ்தானின் தொடரும் தாக்குதல்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

"தலைக்குத் தலை" என முழக்கமிட்ட மோதியின் ஆட்சியில்தான் பாகிஸ்தான் யூரி, பதன்கோட் என்று இராணுவ நிலைகளின் மீது தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

இந்திய இராணுவ வீரர்களின் தலைகள் வெட்டி வீசப்படுகின்றன. இன்னொருபுறம் நக்சல்கள் வெறியாட்டம் போடுகிறார்கள்

தமிழகத்தில், காஷ்மீரில், கேரளாவில் ,குஜராத்தில் அரசுக்கு எதிராக விவசாயிகளும், தலித்துகளும், மாணவர்களும் போராடி வருகிறார்கள்.

இதுபோதாதென்று இந்தியப் பொருளாதாரம், போலி கணக்கீடுகளையெல்லாம் மீறி கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

தேசிய முதலீட்டுக் குறியீடு 8 சதவீதமும், வங்கி சேமிப்பு விகிதம் 2 சதவீத புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

வங்கிக் கடன் விகிதம் மைனஸ் ஏழு சதவீதம் புள்ளிகள் (-7%) வீழ்ச்சியடைந்துள்ளது.

புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் மொத்த மூலதன உருவாக்கம் முதன்முறையாக பூஜ்யத்திற்கும் கீழிறங்கி -0.2% ஆக உள்ளது.(2014-2015 ல் 4.9%)

மாட்டின் ,மதத்தின் பெயரால் வெறுப்பும், பிரிவினையும் தலைவிரித்தாடும் தேசத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

நல்ல நாட்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரசின் தோல்விகளை மறைப்பதற்காக மாடுகளையும் , மதத்தையும் முன்னிறுத்தி சமூகத்தில் தொடர்ந்து பிளவுகளை உருவாக்கினால் என்றென்றைக்குமாக நல்ல நாட்களை நாம் இழந்துவிட நேரிடும்.

ஒற்றுமையும், அமைதியுமே கடந்த காலத்தில் 8-9% வளர்ச்சியையும், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியது என்பதை அரசு நினைவில் கொள்ளவேண்டும்.

2014 க்கு முன்பு உண்மையிலேயே இந்தியாவில் நல்ல நாட்கள் இருந்தன.

பல்வேறு இனங்கள்,மதங்கள், மொழிகள்,கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் பரஸ்பரம் அன்போடும், சகிப்புத் தன்மையோடும், அமைதியோடும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது.

எங்கே அந்த நல்ல நாட்கள்?

மிச்சமிருக்கும் இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு புதிதாக நல்ல நாட்களை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை.

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் பழைய நல்ல நாட்களையாவது விட்டுவைக்கட்டும்.

காவி மயமாகும் கல்வி, பிரிவினையின் கொடு நிழலும், வன்முறையின் இரத்தக் கறையும் படிந்த சமூகம், செயலற்ற அரசு இவை இந்தியாவை இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கு அல்ல பதினான்காம் நூற்றாண்டிற்கே அழைத்துச் செல்லும்.

அரசு தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள, வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.

அதற்கு தவறுகளை, தோல்விகளை முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அரசின் தோல்விகளை மறைப்பதற்காக மாடுகளையும் , மதத்தையும் முன்னிறுத்தி சமூகத்தில் தொடர்ந்து பிளவுகளை உருவாக்கினால் என்றென்றைக்குமாக நல்ல நாட்களை நாம் இழந்துவிட நேரிடும்.

(கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

தொடர்புடைய கட்டுரைகள்:

நல்ல காலம் யாருக்கு? மக்களுக்கு அல்ல!

‘கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்னடையச் செய்யும் மோதி அரசின் நடவடிக்கைகள்’

மோதி அரசின் 3 ஆண்டு ஆட்சி: வேலைவாய்ப்பு வீழ்ச்சி?

மோதி அரசின் 3 ஆண்டு: மூன்றே வார்த்தைகளில் ஏவுகணை வீசிய இணையப் போராளிகள்!

பிற செய்திகள் :

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

பெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்