டெல்லியில் சிறுநீர் கழிப்பதை தடுத்த ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக் கொலை

  • 29 மே 2017

டெல்லியின் வடக்கு பகுதியில் 32 வயது ரவிந்தர் குமார் என்னும் பேட்டரி ரிக்க்ஷா ஓட்டுநர், சாலையில் சி்றுநீர் கழிக்க வந்த நபர்களை தடுத்ததால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Image caption கொலை செய்யப்பட்ட ரவிந்தர் தனது மனைவியுடன்

ரவிந்தர், டெல்லியின் குரு டெக் பஹதூர் மெட்ரோ நிலையத்திற்கு வெளியே சிறுநீர் கழிக்க வந்த இரண்டு நபர்களை தடுத்ததால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நியூ கிஷோர் மார்க்கெட் காலனியில் அமைந்துள்ள ரவிந்தரின் இல்லம், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 150 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.

ரவிந்தருக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது; அவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்தார்.

சனிக்கிழமை மதியம் சுமார் 1.30 மணிக்கு ரவிந்தரும் அவரின் நண்பர்கள் பிரமோத் மற்றும் அரிஃப் ஆகியோரும் அந்த மெட்ரோ நிலையத்திற்கு அருகில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சிறிது தூரத்தில், மது அருந்திய நிலையில் கையில் பீர் பாட்டிலுடன் இரண்டு பேர், பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முயன்றனர்.

"நாங்கள் அவர்களை தடுக்க முயன்றோம். நாங்கள் இங்கு உணவருந்திக் கொண்டிருக்கிறோம், நீங்கள் வேறேங்காவது சிறுநீர் கழியுங்கள் என்று கூறினோம் ஆனால் அவர்கள் எங்களை தவறாக பேசினாரகள்" என்கிறார் பிரமோத்.

அதில் ஒருவர் மாலை திரும்பி வரப்போவதாக அச்சுறுத்தி சென்றார். ஆனால் அது அத்துடன் முடிந்துவிட்டதாக நினைத்த ரவிந்தர் தனது வேலையை தொடர்ந்தார்.

பின் இரவு 8.30 மணிக்கு ரவிந்தர் தனது பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு டஜன் நபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அடிக்க தொடங்கினர்.

அப்போது அவருடன் மற்றொரு ரிக்க்ஷா ஓட்டுநர் மனோஜும் உடனிருந்தார். "அவர்கள் செங்கல் மற்றும் துணியில் கற்களை சுற்றி அதை ஆயுதமாக பயன்படுத்தி ரவிந்தரை தொடர்ந்து தாக்கினார்கள்" என கூறுகிறார் மனோஜ்.

"ரவிந்தருக்கு உடம்பில் அனைத்து பாகங்களிலும் காயம் ஏற்பட்டது. நான் உதவி கோருவதற்காக எனது வீட்டிற்கு ஓடி வந்தேன் ஆனால் அதற்குள் அவர்கள் சென்றுவிட்டனர்." என்றார் மனோஜ்.

ஐஸ் கீரிம் கடைக்காரர் கலுராமும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். "கூட்டத்தில் ஒருவன் தான் புராடியிலிருந்து வருவதாகவும், மற்றொருவன் தான் சாத்நகரிலிருந்து வருவதாகவும் கூறியதாக" கண்களில் அச்சம் நீங்காமல் தெரிவிக்கிறார் அந்த ஐஸ் கி்ரீம் கடைக்காரர்.

தாக்குதலை யார் தடுக்க வந்தாலும் அவர்களையும் விட்டுவிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து உதவி கிடைத்த போது ரவிந்தர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஆனால் போகும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.

"ரவிந்தர் ஒரு நல்ல மனிதர் அனைவரிடத்திலும் நன்றாக பழகுவார்" என பக்கத்து வீட்டு காரரனான பூபென்ந்தர் கூறுகிறார்.

"அவரின் மனைவி மற்றும் தாய் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அனைவரும் சென்ற பிறகு அவரின் மகன் திரும்பி வரப்போவதில்லை என்ற தருணத்தில் அவர்கள் பெரும் துயருக்கு ஆளாவார்கள்" என கண்ணீருடன் அவர் தெரிவிக்கிறார்.

Image caption ரவிந்தரின் வீடு

இந்த சம்பவம், அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

"நாங்கள் சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டு எங்கள் பிழைப்பை நடத்தி வருகிறோம். அதில் சிலர் பேட்டரி ரிக்க்ஷா ஓட்டுகிறோம். சிலர் காய்கறிகளை விற்பனை செய்கிறோம். ரவிந்தருக்கு ஏற்பட்ட நிலை அனைவருக்கும் ஏற்படக்கூடும் " என மற்றொரு அண்டை வீட்டுக்காரர் தெரிவிக்கிறார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்களையும் தாக்கலாம் என்ற அச்சத்தில், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

டெல்லி அருகே காரை மடக்கி 4 பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்