பலன் தந்ததா மோதியின் மேக் இன் இந்தியா?

 • 31 மே 2017
படத்தின் காப்புரிமை Getty Images

வந்தேமாதரம் இசை, அதில் `மேக் இன் இந்தியா` என்ற சின்னம், அரங்கு நிறைந்த வெளிநாட்டினரிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோதி.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகளை வழங்குவதற்காக `மேக் இன் இந்தியா` (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவை "உற்பத்தி மையமாக்கும்" முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்", என்று முழங்கினார் பிரதமர் நரேந்திர மோதி.

'இந்திய தொழிற்துறை உற்பத்தியை அதிகரிப்பதுதான் `மேக் இன் இந்தியா` திட்டத்தின் நோக்கம்.

ஆனால், 2014 மே மாதம், மோதி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு 4.6 சதவிகிதமாக இருந்த தொழிற்துறை உற்பத்தி, மூன்று ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் 2.7 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

2014 ஆண்டில் 11.1 சதவீதமாக இருந்த நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி மிகப்பெரிய வீழ்ச்சியடைந்து, தற்போது 0.8 சதவீதமாக சரிந்துவிட்டது.

ஆனால் வெளிநாட்டு மூலதன வரத்தை பொருத்தவரை, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தைவிட அதிகரித்திருக்கிறது. 2011-12 இல் 117 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த மூலதன முதலீடு, 2014-16 இல் 149 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.

மத்திய அரசின் `மேக் இன் இந்தியா` கனவுத் திட்டத்தின்கீழ், உள்நாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படவேண்டும்.

பிரதமர் மோதியின் கனவு நனவானதா?

பொருளாதார நிபுணர் சுஜான் ஹாஜ்ரா சொல்கிறார், "இதை இரண்டு விதமாக பார்க்கலாம். இந்தத் திட்டம் என்ன எண்ணத்துடன் தொடங்கப்பட்டது, எந்த அளவு வேலை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு புறம், மற்றொரு புறம், அடிப்படை நிலையில் எப்படி வேலை செய்யப்பட்டுள்ளது என்றும் கணிக்கவேண்டும்."

படத்தின் காப்புரிமை Getty Images

கட்டமைப்புத் துறையோ, உற்பத்தித் துறையோ முன்னேற்றம் அடையவில்லை, அதற்கு வெளிப்புற மற்றும் உட்புற காரணிகள் இருக்கின்றன என்று பட்டியலிடுகிறார் சுஜான் ஹாஜ்ரா.

வெளிக்காரணிகள்

 • கட்டுமான துறையில் அதிக திறன்
 • உலகம் முழுவதும் உற்பத்தித்துறை உச்சக்கட்டத்தில் உள்ளதால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தை கிடைப்பதில்லை. 2007-08 இல் உலக அளவில் நிலவிய பொருளாதார மந்த நிலையால் பாதிப்பு

உள்நாட்டுக் காரணிகள்

 • வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதில் வர்த்தகர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது (வங்கிகள், தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களின் அளவு மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது)
 • இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைப்பது இப்போதும் மிகவும் கடினமானதாகவும், சிக்கலானதாகவுமே உள்ளது. இந்தியாவில் புதிய தொழில்களை துவங்குவதற்கு அனுகூலமான வாய்ப்பு இருக்கிறதா? உலக வங்கியின் 'எளிதாக தொழில் துவங்குவதற்கான வாய்ப்பு-ஒரு கணக்கெடுப்பு' புள்ளிவிவரங்களின் படி, இந்தியா 130வது இடத்தில் இருக்கிறது.
Image caption ஆதாரம் உலக வங்கி

மத்திய அரசு தன்னுடைய கொள்கைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தினாலும், தொழில் தொடங்கும் மாநிலத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால் பஞ்சாப் போன்ற சில மாநிலங்கள் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தொழில் துவங்க வசதியான நகரங்களின் பட்டியலில் லுதியானா பல இடங்கள் முன்னேறியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் - நரேந்திர மோதி

"மேக் இன் இந்தியா திட்டத்தின் முன்னேற்றம் தொடர்கிறது" என்கிறார் கேர் ரேட்டிங்கை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீடு குறைந்து வருவதாக அவர் கூறுகிறார்.

காரணங்கள்

 • வங்கிகளில் குறிப்பாக அரசு வங்கிகளில் இருந்து கடன் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது.
 • வருவாய் அதிகரிக்கவில்லை, ஆனால் விலைவாசி அதிகரித்துவிட்டது.
 • விலை அதிகரிப்பால் நுகர்வோரிடம் செலவு செய்ய பணம் இல்லை என்பதால் தேவைகளும் குறைந்துவிட்டன.
 • தொழில் துறைத் திறன் வெறும் 70 சதவீகிதமே பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்தபட்சம் 85 சதவீதமாக இருக்க வேண்டும்.
Image caption ஆதாரம்: ரிசர்வ் வங்கி

ஏற்கனவே இருக்கும் தொழிற்துறையினரின் திறனே முழுமையாக பயன்படுத்தப்படாதபோது, புதிதாக தொழில் துவங்குவதற்கு இது ஏற்ற காலமல்ல.

"உணவுப் பொருள் போன்றவற்றின் விலை உயரும்போது, தங்கள் வருமானத்தில் இருந்து அடிப்படைத் தேவைகளான உணவு போன்றவற்றிற்கு செலவு அதிகமாவதால், கம்ப்யூட்டர், டி.வி., பிரிட்ஜ் போன்ற அத்தியாவசியமில்லாத பொருட்களில் செலவு செய்வதை மக்கள் குறைத்துக் கொள்வார்கள்" என்று விலை உயர்வு, தேவையை பாதிப்பதைப் பற்றி விளக்குகிறார் சப்னவிஸ்.

பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பதற்காக, கட்டமைப்புத் துறைக்கான செலவுகளை அரசு குறைத்துவிட்டதால், உள்கட்டமைப்பு துறையின் தேவை குறைந்துவிட்டது.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் விலக்கம், தேவைகளில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது

படத்தின் காப்புரிமை Getty Images
 • 'மோதி அரசின் பிற திட்டங்களை போன்றது தான் மேக் இன் இந்தியா திட்டமும், அதாவது மிகைப்படுத்தப்படும் ஒரு திட்டம்' என்று சொல்கிறார் நிதியமைச்சரின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும், பிரபல பொருளாதார நிபுணருமான மோகன் குருசுவாமி.
 • 'சிறிய அளவில் மேக் இன் இந்தியா திட்டம் நன்றாக செயல்பட்டிருக்கலாம், ஆனால், இதனால் பெரிய அளவிலான தாக்கம் எதுவும் இல்லை' என்கிறார் குருசுவாமி.
 • மோதி அரசே இந்தத் திட்டம் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை என்கிறார் அவர்.
 • 'பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, முந்தைய ஒப்பந்தங்களைப்போல், அந்த நிறுவனத்தின் வேலையை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான ஷரத்தை ஏன் ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை?' என்று கேள்வி எழுப்புகிறார் குருஸ்வாமி.

பணவிலக்க நடவடிக்கையின் பொருளாதார விளைவு

அரசியல் ரீதியாக பணவிலக்க நடவடிக்கை வெற்றிபெற்றதாக இருந்தாலும், அது உலகிற்கு தவறான செய்தியை கொடுத்தது. எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், அமைப்பில் இருந்து திடீரென்று 85 சதவிகித ரொக்க நோட்டுகளை விலக்கிக் கொள்வது என்பது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைப்பதை மோதி அரசின் மிகப்பெரிய குறையாக குறிப்பிடும் மோகன் குருசுவாமி, இதனால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகச் சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கனரக தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு வரமுடியாததற்கு காரணம்? 'முழுமையாக தகுதிவாய்ந்த (பயிற்சி பெற்ற) தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறை' என்கிறார் மோகன் குருசுவாமி.

பல இடங்களில் சீர்திருத்தம்

 • இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்து தொழில்துறையை எளிமைப்படுத்தியது.
 • நிலுவையில் இருக்கும் பல முக்கியமான திட்டங்களுக்கு (3-ஜி போன்ற) புத்துயிரூட்டியது
 • மின்சாரம் வழங்கல் முன்பை விட அதிகமாக்கியது
 • மாநிலங்களில் கொள்கை சீர்திருங்களுக்கான முயற்சி மற்றும் தனியார் துறையை ஊக்குவிக்கும் முயற்சி

'சிங்கப்பூரில் பொருட்களை உற்பத்தி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வந்த தனது நிறுவனம், இரண்டாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் தனது உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி, 200 முதல் 250 பேருக்கு வேலை கொடுத்திருப்பதாக' சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிவரும் டீப் ஐடெண்டிட்டியின் தலைவர் பெனிலிட்ஸ் நாடார் சொல்கிறார்.

"வரி மற்றும் நாணய பரிமாற்றத்தால் இந்தியாவில் எங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் காரணமாக எங்களுடைய உற்பத்திப் பொருட்களின் விலையில் 20 முதல் 30 சதவிகிதம் குறைந்துள்ளது" என்று சொல்கிறார் பெனிலிட்ஸ் நாடார்.

தற்போது, வெளிநாடுகளில் சைபர் பாதுகாப்பு பொருட்களை விறபனை செய்யும் நாடாரின் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் தனது தயாரிப்புகளை களம் இறக்கியுள்ளது.

பிற செய்திகள்:

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

மோதி அரசின் 3 ஆண்டு: மூன்றே வார்த்தைகளில் ஏவுகணை வீசிய இணையப் போராளிகள்!

‘கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்னடையச் செய்யும் மோதி அரசின் நடவடிக்கைகள்’

`முன்னேற்றத்தை மையப்படுத்திய மோதி அரசின் அணுகுமுறை'

மோதி அரசின் 3 ஆண்டு ஆட்சி: வேலைவாய்ப்பு வீழ்ச்சி?

இதையும் படிக்கலாம்:

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற மாணவர் தாக்கப்பட்டது ஏன்?

மாட்டிறைச்சிக்கு தடை போட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை?

பீர் கடையைத் திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கிய உ.பி பெண் அமைச்சர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்