'கழிப்பிடங்கள் இங்கே - தண்ணீர் எங்கே?' மோதி தொகுதியில் பொதுக்கழிப்பறைகள் நிலை

  • 1 ஜூன் 2017

வடஇந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி - அலகாபாத் நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் ஒரு சிறிய குறுகலான சாலையில் சென்றால் நாகேபூர் கிராமத்துக்கு சென்றடையலாம்.

Image caption பிரதமர் மோதி தத்தெடுத்த கிராமத்தில் கழிப்பிட வசதி எப்படி?

கிட்டத்தட்ட 12000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோதியால் தத்தெடுக்கப்பட்ட இரண்டாவது கிராமமாகும்.

நாகேபூர் கிராமம் மிகவும் ஏழ்மையான ஒரு கிராமம் என்பதும் சாதி ரீதியாக பிரிந்து நிற்கும் ஒரு கிராமம் என்பதையும் புரிந்துகொள்ள வெகு நேரமாகாது.

இங்குள்ள சில வீடுகள் செங்கல் மற்றும் சிமெண்டால் கட்டப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வீடுகள் மண் மற்றும் கூரையிலானவை.

ஒரு அடர்ந்த ஆலமரத்தின் கீழே அமர்ந்திருந்த 5 பேர், மாநிலத்தின் புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசியல் குறித்து விவாதித்து கொண்டிருந்தனர்.

கடந்த சில நிமிடங்களாக அமைதியற்று காணப்பட்ட எங்களின் வாகன ஓட்டுநர் இறுதியாக, ''எங்கே சிறுநீர் கழிக்க வேண்டும்?'' என்று கேட்டார்.

இதனை கேட்டதும், ஒரு வறட்சியான புன்னகையுடன் காலியாக இருந்த இடத்தை ஒரு கிராமவாசி சுட்டிக்காட்டினார்.

ஆலமரத்தின் கீழே அமர்ந்திருந்த கிராமவாசிகளில் ஒருவரான பப்லு குமார் கூறுகையில், ''13 குடும்ப உறுப்பினர்கள் கொண்ட நான்கு வீடுகளுக்கு ஒரு தற்காலிக கழிப்பறைதான் இருக்கிறது. அதனால் மலம் கழிக்க வெற்றிடங்களை தேடி போவதை தவிர வேறு வழியில்லை'' என்று தெரிவித்தார்.

இவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து 100 மீட்டர்கள் தொலைவில் உள்ள கிராம கிணற்றில் ஏராளமான பெண்கள் தங்களின் வாளிகள் மற்றும் கேன்களை நிரப்ப வரிசையில் காத்திருக்கின்றனர்.

Image caption துர்நாற்றம் வீசும் கிணறுதான் கிராம மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது

கிணற்று நீரில் ஒரு துர்நாற்றம் வீசுகிறது. ஆனால், இது மட்டும்தான் கிட்டத்தட்ட 20 குடும்பங்களுக்கு பருகுவதற்கு உள்ள நீர் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அஞ்சு என்ற இக்கிராமப் பெண் தனது கை குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு குளிப்பதற்கும், சமையல் வேலைக்காகவும் விரைவாக சில வாளிகள் தண்ணீர் எடுத்துச் செல்ல கிணற்றுக்கு விரைகிறார்.

கழிப்பறைகளை பயன்படுத்தாதது ஏன்?

''இதுதான் எங்கள் கிராமத்தில் இருக்கும் நீர். எங்கள் வீடுகளுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக்காலான கழிப்பறையை பயன்படுத்த வேண்டுமானாலும் இக்கிணற்று நீரைத்தான் எடுத்து வரவேண்டும். அதனால்தான் நாங்கள் அதனை பயன்படுத்துவதில்லை'' என்று அஞ்சு பிபிசியிடம் தெரிவித்தார்.

சன்ஸாத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா திட்டத்தின்கீழ் இக்கிராமத்தை பிரதமர் மோதி தத்தெடுத்த பின்னர், கடந்த ஒரு வருடத்தில் இக்கிராமத்தில் குறைந்தது இதுபோன்ற 200 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இவையெல்லாம் கட்டப்படுவதற்கு முன்னர், 2014-ஆம் ஆண்டில் தனது கனவுத் திட்டமான தூய்மை இந்தியா பிரச்சார திட்டத்தை பிரதமர் மோதி அறிவித்தார்.

Image caption வெள்ளை மற்றும் நீல நிற ஃபைபர் கழிப்பறை

இத்திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கம் 2019-ஆம் ஆண்டுக்குள் திறந்த வெளி கழிப்பறையற்ற இந்தியாவை உருவாக்குவதாகும்.

இது வரை, வீடுகளுக்கென 31 லட்சம் கழிப்பறைகளையும், ஏறக்குறைய 11 லட்சம் பொதுக் கழிப்பறைகளையும் கட்டியுள்ள அரசு இது குறித்து தங்களின் இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறது.

ஆனால், நாகேபூர் கிராமவாசிகள் இதனால் திருப்தியடையவில்லை. இந்த கழிப்பறைகளுடன் சேர்ந்து இருக்க வேண்டிய வசதிகள் கிடைக்காதது குறித்து பலரும் புகார் தெரிவித்தனர்.

பிரதமர் மோதி தத்தெடுத்த முதல் கிராமம்

2014-ஆம் ஆண்டில் சன்ஸாத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா திட்டத்தின்கீழ் நரேந்திர மோதி தத்தெடுத்த முதல் கிராமமான ஜெயபூர், நாகேபூர் கிராமத்தை விட்டு வெகு தொலைவிலில்லை.

நல்ல மற்றும் வழவழப்பான சாலைகள் இந்த கிராமத்தை சிறிது நேரத்தில் சென்றடைய உதவுகின்றன.

Image caption நாகேபூர் கழிப்பறைகள்

கிராமத்தின் நுழைவாயிலில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்க, தூய்மை இந்தியா வாசகத்துடன் கூடிய பிரதமர் மோதியின் ஆளுயர பதாகை கிராமத்தில் நுழைபவர்களை வரவேற்கிறது.

பிரகாசமான ஒரு புதிய பள்ளி, ஒரு முதலுதவி மையம் மற்றும் சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏடிஎம்கள் ஆகியவை வழியில் இருப்பதை நாம் காணமுடியும்.

அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிறு குடியிருப்புகளுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள வெள்ளை மற்றும் நீல நிற ஃபைபர் கழிப்பறைகளையும் காணமுடியும்.

இவற்றை உற்று நோக்கினால், இக்கழிப்பறைகளை குடியிருப்புவாசிகள் பூட்டி வைத்திருப்பதையும், பல மாதங்களாக , ஏன் ஆண்டுகளாக இவை பயன்படுத்தப்படாமல், சிலர் மாட்டுச்சாணங்களை சேமித்து வைக்க இவற்றை பயன்படுத்துவதையும் அறிய முடிகிறது.

Image caption கழிப்பறைகளை ஆக்கிரமித்துள்ள மாட்டுச்சாணங்கள்

நாகேபூர் கிராமத்தை விட பெரிய கிராமமான ஜெயபூர் கிராமத்தின் மக்கள் தொகை மூன்றாயிரம் ஆகும்.

நாம் சந்தித்த பலர், பிரதமர் மோதியால்தான் தங்களின் கிராமத்தின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறது என்றும், கிராமத்தின் உள்கட்டமைப்பு முன்னேறியுள்ளது என்றும் தாங்கள் கருதுவதாகத் தெரிவித்தனர்.

சிலர் இந்த புதிய கழிப்பறைகள் தங்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் என்று குறிப்பிட்டனர்.

Image caption அவலநிலையில் காணப்படும் கழிப்பிடங்கள்

ஆனால், இக்கூற்றுகளை சாமலா தேவி போன்ற சிலர் மறுக்கின்றனர்.

''கையடக்கமான இந்த கழிப்பறைகளில் போதுமான அளவு குழி இடம் இல்லாத காரணத்தால், விரைவில் வெளிப்புறம் மலம் விழுந்துவிடுகிறது. இதனால் இந்த இடத்தில் நாற்றம் எடுப்பதுடன், வியாதிகள் உருவாக்கவும் காரணமாகிறது. எனது குடும்பம் பெரியதாக ஆகிக் கொண்டிருப்பதால், எங்களின் தேவைகளும் அதிகமாகிறது. எங்களுக்கு இனிமேல் இவை தேவையில்லை'' என்று சாமலா தேவி தெரிவித்தார்.

Image caption கழிப்பிட வசதிகள் குறித்து புகார் தெரிவித்த கிராமப் பெண்கள்

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சஞ்சய் சிங் பிபிசியிடம் உரையாடுகையில், ''மோதிஜி எங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார். அதற்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எங்களுக்கு தண்ணீர் வசதி அளிக்குமாறு யாரவது அவரிடம் கூற முடியுமா? அவை இல்லாமல் நாங்கள் எப்படி கழிப்பறைகளை பயன்படுத்துவது?'' என்று வினவினார்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஜெயபூர் கிராமத்தின் தலைவரான நாராயண் பட்டேல் இது குறித்து பிபிசியிடம் பேசுகையில், 2014-ஆம் ஆண்டில் இக்கிராமத்தை மோதி தத்தெடுத்த்து மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றார்.

கழிப்பறை பராமரிப்பு மற்றும் வசதிகள் குறித்து தனது கிராமவாசிகள் தெரிவித்த புகார்களை மறுத்த அவர், ''இந்த கிராமத்துக்கு 600-க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை பிரதமர் மோதி கட்டித்தந்துள்ளார். இதனை பயன்படுத்துபவர்களே இதனை பராமரிக்க வேண்டும். சிலர் இதனை சரிவர பராமரிக்காத காரணத்தால்தான் இது ஊடகத்தின் பார்வைக்கு செல்கிறது'' என்று குறிப்பிட்டார்.

Image caption ஜெயபூர் கிராமத்தின் தலைவர்

தங்கள் நகரம் திறந்தவெளி கழிப்பிடங்களற்ற நகரமாக இந்தியாவில் பல நகரங்கள் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்திய சூழல் குறித்து உலக வங்கியின் அண்மைய மதிப்பீடு

இதற்கு முன்பு 1986-ஆம் ஆண்டிலேயே திறந்தவெளி கழிப்பிடங்களற்ற நாட்டை உருவாக்க மத்திய அரசின் கிராமப்புற சுகாதாரம் திட்டம் தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி நகரில் பிபிசியை சந்தித்த மகளிர் சமூகநல பணியாளர்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பிட வசதிகள் உண்டாக்கியது அவர்களின் சிரமங்களை பெரிதும் குறைத்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், உலக வங்கியின் அண்மைய மதிப்பீடு ஒன்று இச்சூழல் தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

'இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில் பாதி பேரும், நகர்ப்புற பகுதிகளில் 15 சதவீதம் பேரும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர்' என்று உலக வங்கி வெளியிட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்:

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்