மாடுகளை இறைச்சிக்காக விற்க தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

  • 30 மே 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய அரசு மாடுகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த மே 23ஆம் தேதியன்று விதித்தது.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான எஸ். செல்வகோமதி என்பவர் மத்திய அரசு கொண்டுவந்த கால்நடை விற்பனை குறித்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடர்ந்தார்.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் அஜ்மல்கான் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை நீதிபதிகள் முரளிதரன், சி.வி. கார்த்திகேயன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய மத வழக்கப்படி மிருகங்களைக் கொல்வது குற்றமல்ல என மிருகவதைத் தடைச் சட்டத்தின் 28வது பிரிவு கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கை அவர் தொடர்ந்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், மிருகங்களை கொல்வதையோ, கொல்வதற்காக விற்பனை செய்வதையோ மிருக வதைத் தடைச் சட்டம் தடைசெய்யாத நிலையில், அரசு தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இறைச்சிக்காக மாடுகளை விற்பதைத் தடைசெய்யக்கூடாது என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

மத்திய அரசின் இந்த விதிமுறை, அரசியல் சாசனத்தின் 25வது பிரிவு வழங்கியுள்ள மதசுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமையன்று பிற்பகலில் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கால்நடைகளைப் பாதுகாக்கவே இந்த விதி கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக விரிவான பதிலைத் தாக்கல்செய்ய தகுந்த அவகாசம் வழங்காமல் இடைக்கால உத்தரவு எதையும் நீதிமன்றம் வழங்கக்கூடாது என்றும் கூறினார்.

இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக தங்கள் பதிலை நான்கு வாரங்களுக்குள் தாக்கல்செய்ய வேண்டுமெனக் கூறி மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்கலாம்:

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்

சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்