பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி மீது குற்றச்சாட்டு பதிவு

  • 30 மே 2017
படத்தின் காப்புரிமை PTI-PIB
Image caption அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிடிஐ செய்தி முகமை தகவல்களின்படி, இந்தத் தலைவர்களின் மேல்முறையீட்டை லக்னெள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று நிராகரித்தது.

எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் பிற தலைவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறிவிட்டது.

நீதிமன்ற விசாரணையின்போது, அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

இவர்களைத் தவிர, பாரதீய ஜனதா கட்சியின் வினய் கட்டியார், இந்துத்துவா பிரசாரகர் சாத்வி ரிதம்பரா ஆகியோரும் ஆஜராகினர்.

இவர்கள் ஆறு பேருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் உத்தரவாதத் தொகையுடன் பிணை வழங்கப்பட்டது.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதியன்று பாரதீய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான கர சேவகர்களால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம், அங்கு ராமர் ஆலயம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை இன்றும் தொடர்கிறது.

பாபர் மசூதிக்கு சேதம் ஏற்படாது என்று அப்போதைய முதலமைச்சர் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தாலும், அவரால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது.

அத்வானியை சந்தித்த யோகி ஆதித்யநாத்

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் சதி குற்றச்சாட்டை, அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான விசாரணையை தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக இரண்டு வெவ்வேறு விசயங்களில் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லக்னெள சென்ற அத்வானியை, உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த வழக்கில் தினசரி விசாரணை நடத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சென்ற மாதம் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும், அத்வானி, ஜோஷி மற்றும் மற்றவர்களுக்கு எதிராக நான்கு வாரங்களில் குற்றச்சாட்டு பதிவு செய்யவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டது.

அத்வானி மற்றும் இருபது பேரின் மீது சட்டப்பிரிவு 153 ஏ, 303 மறும் வேறு சில சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

சட்டப்பிரிவு 120 பி (B) யின் கீழ், குற்றவியல் சதி வழக்கும் இவர்கள் மீது போடப்பட்டிருந்தாலும், அதை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விலக்கியது, அதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றமும் ஆதரவளித்திருந்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு: "நாங்கள் வெளிப்படையாகவே செய்தோம்"

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற புதிய ஆலோசனை தீர்வு தருமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்