சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற மாணவர் தாக்கப்பட்டது ஏன் ?

  • 31 மே 2017

சென்னை ஐஐடியில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர், வலதுசாரி ஆதரவு மாணவரால் தாக்கப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து அவரது நண்பர், பிபிசியிடம் விவரங்களை வெளியிட்டார்.

Image caption சூரஜ்

மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கடும் விதிமுறைகளை விதித்து கடந்த மே 25ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) அன்று இரவு சில மாணவர்கள் மாட்டு இறைச்சி விருந்து ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விருந்தில் கலந்துகொண்ட சூரஜ் ராஜகோபாலன் என்ற மாணவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஐஐடி வளாகத்திலேயே தாக்கப்பட்டார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் (36) ஐஐடியில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் ஆராய்ச்சி மாணவராக இருந்துவருகிறார். அவர் இன்று மதியம் ஐஐடி வளாகத்தில் உள்ள 'ஜெயின் மெஸ்ஸில்' தனது நண்பருடன் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த பிஹாரைச் சேர்ந்த கடல்சார் பொறியியல் படிக்கும் மணீஷ் என்ற மாணவர் சூரஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

"மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டுவந்து, எப்படி சைவ உணவை மட்டும் சாப்பிடும் இந்த ஜெயின் மெஸ்ஸில் நீ சாப்பிடலாம் என்று கேட்டார் அவர். பிறகு, பின்னந்தலையில் அவரை அடித்தார். முகத்தில் குத்தினார்கள். இதில் அவரது வலதுகண் கடுமையாக பாதிக்கப்பட்டது" என சூரஜின் நண்பரான மனோஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

சூரஜைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்படும் மாணவர் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர் என மனோஜ் கூறினார்.

Image caption தாக்குதலுக்கு உள்ளான மாணவர்

சூரஜ் எந்த அமைப்பையும் சேர்ந்தவரல்ல என்றும் மாட்டு இறைச்சி விருந்தில் மட்டுமே அவர் பங்கேற்றார் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

தாக்கப்பட்ட சூரஜ் முதலில் ஐஐடி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தனியார் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து ஐஐடியின் பாதுகாப்புப் பிரிவிடமும் டீனிடமும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாம்:

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு : தமிழ்நாடு, கேரளாவில் மாட்டிறைச்சி விழாக்கள்

மாட்டிறைச்சிக்கு தடை போட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை?

பீர் கடையைத் திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கிய உ.பி பெண் அமைச்சர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்