மோதி அரசின் மூன்றாண்டுகள் : 'தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல்'

(பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்றாண்டுகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி, தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் சிலரும், பகுப்பாய்வாளர்களும் பிபிசிதமிழ்.காம் பக்கங்களில் தங்கள் கருத்துகளை எழுதுகின்றனர். அந்தக் கட்டுரைத் தொடரில் எழுத்தாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிபொதுச் செயலாளரான ரவிக்குமார் எழுதியுள்ள கட்டுரை இன்று வெளியாகிறது. இத்தொடர்களில் வெளியாகும் கருத்துகள் கட்டுரையாளர்களுடையவையே. பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

படத்தின் காப்புரிமை RAVIKUMAR
Image caption ரவிக்குமார் துரை

திரு நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அஸாம் மாநிலத்தில் அதற்கான கொண்டாட்டத்தை ஆரப்பித்துள்ள பாஜக , தான் பலவீனமாக இருக்கும் தொகுதிகளைக் குறிவைத்து வேலை செய்யத் திட்டமிட்டுள்ளதன் மூலம் 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலுள்ள 131 தனித் தொகுதிகளில் 66 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. 1991-க்குப் பிறகு எந்தவொரு கட்சியும் அந்த அளவு 'ரிசர்வ்' தொகுதிகளில் வெற்றிபெற்றதில்லை.

தலித்துகளின் வாக்குகளை பெற்ற பாஜக

தனித் தொகுதியில், வெற்றியை தலித் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால், 2014 ல் பாஜகவுக்கு சுமார் 24 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2009 தேர்தலின்போது அது 12% தலித் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

தலித்துகளின் ஆதரவால்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க முடிந்தது என்பதால், தலித் மக்களிடம் பாஜக நன்றியோடு நடந்துகொள்ளும், அவர்களது மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption தலித்துகளின் வாக்குகளை பெற்று பாஜக பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்த பாஜக

ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சுதந்திர இந்திய வரலாற்றில் தலித் மக்கள் மிக அதிகமான இன்னல்களை சந்திக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உருவெடுத்துள்ளது.

அதிகரிக்கும் வன்கொடுமைகள்

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பின் நாடு முழுவதும் தலித் மக்கள்மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக 39323 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. பாஜக ஆட்சிக்கு வந்தபின் 2014 ல் அது 47064-ஆக உயர்ந்துவிட்டது. 2015 ல் அது 45003-ஆக இருந்தது.

பாஜக ஆளும் மாநிலங்களிலெல்லாம் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்தன. ராஜஸ்தான் மாநிலத்தில் 2013 ஆம் ஆண்டில் தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் 6475. அது 2014 ல் 8028-ஆக அதிகரித்தது.

பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான மத்திய பிரதேசத்தில் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டில் 2945 ஆக இருந்தது. அது 2014 ல் 4151 ஆக உயர்ந்துவிட்டது. சட்டீஸ்கர் மாநிலத்தில் 2013 ல் தலித்துகளுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 242 மட்டும்தான், ஆனால் 2014ல் அது 1066 ஆக உயர்ந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தலித் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக குஜராத்தில் நடந்த போராட்டம்

2013 ல் இந்தியா முழுவதும் 676 தலித்துகள் கொலை செய்யப்பட்டனர். 2014 ல் கொலையுண்ட தலித்துகளின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்தது. 2013 ல் 2073 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர், 2014 ல் அந்த எண்ணிக்கை 2233 ஆக உயர்ந்துவிட்டது.

தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் அளவு மாற்றம் மட்டுமல்ல பண்பு மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

தலித்துகள் மிகவும் கொடூரமாக, பொது இடத்தில் வைத்துத் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

குஜராத் மாநிலம் உணா என்னுமிடத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததாகச் சொல்லி நான்கு தலித் இளைஞர்கள் கடைவீதியில் வைத்துக் கடுமையாகத் தாக்கப்பட்டது அதற்கொரு உதாரணம்.

பசு பாதுகாப்பாளர்கள் என சொல்லிக்கொள்ளும் வகுப்புவாதிகளின் இலக்காக முஸ்லிம்கள் மட்டுமின்றி தலித்துகளும் உள்ளனர்.

மறுக்கப்படும் நிதி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் பட்டியலினத்தோர் துணைத் திட்டத்தின் கீழ் (எஸ்சிஎஸ்பி) தலித் மக்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதியின் அளவைக் குறைத்தது பாஜக தலித்துகளுக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.

மத்திய பட்ஜெட்டின் திட்ட மதிப்பீட்டில் 16.6% அளவு நிதியை தலித்துகளுக்கு ஒதுக்கவேண்டும் என்பதுதான் பட்டியலினத்தோர் துணைத் திட்டத்தின் அடிப்படை.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption திட்டக்குழுவை கலைத்து நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கிய பாஜக அரசு

2016-17 பட்ஜெட்டின் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு 550010 கோடி.

அதில் 16.6% ஐக் கணக்கிட்டால் 91301.66 கோடி வருகிறது. அந்தத் தொகையை ஒதுக்குவதற்குப் பதில் பாஜக அரசு ஒதுக்கிய தொகை 38832.63 கோடி மட்டும்தான்.

அந்த ஒரு ஆண்டில் மட்டும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய தொகையில் 52469.03 கோடி ரூபாயை ஒதுக்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு வஞ்சித்தது.

2017-18 பட்ஜெட்டில் அதைப்போலவே 46786.59 கோடி ரூபாய் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் பாஜக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படவேண்டிய தொகையில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறது.

எஸ்சிஎஸ்பி யின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி இப்போது அந்தத் திட்டமே பாஜக அரசால் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.

திட்டக் கமிஷனைக் கலைத்துவிட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கும் பாஜக அரசு, திட்டக் கமிஷனோடு எஸ்சிஎஸ்பி திட்டத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption வெமுலாவின் அம்மா

கல்வி உரிமைமீதான தாக்குதல்

பாஜக ஆட்சியில் தலித்துகளின் கல்வி மீது மிகப்பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புக்கான நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2013-14 ல் 882 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டது. 2017-18 ல் பாஜக அரசு ஒதுக்கியிருப்பதோ வெறும் 50 கோடி ரூபாய்தான்.

ஏற்கனவே, ஏராளமான தலித் மாணவர்களின் படிப்பு, பள்ளிக்கல்வியோடு முடிந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு வழங்கிவரும் பள்ளிக்கல்விக்கான உதவித் தொகைக்கான நிதியைக் குறைப்பது அவர்களின் படிப்பை ஆரம்பக் கல்வியோடு முடித்துவைத்துவிடும்.

உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்கள் எத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதற்கு ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் முதலானவர்களின் தற்கொலைகளே சான்று பகரும்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption முத்துகிருஷ்ணன் மரணம்

பாஜகவின் நாடகம்

தலித் மக்களை இப்படி ஒருபுறம் வஞ்சித்துக்கொண்டு இன்னொருபுறம் அவர்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காக அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி பாஜக நாடகமாடி வருகிறது.

பிரதமர் மோடி மும்பையில் அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்கும், அம்பேத்கர் உயிர்நீத்த இல்லத்தில் ஒரு மாநாட்டு அரங்கம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் அம்பேத்கர் வகித்த பாத்திரத்தைப் புகழ்ந்ததோடு நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்புச் சட்ட நாள் என கடைபிடிக்கப்போவதாக அறிவிப்புச் செய்தார்.

அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டிப் பாராளுமன்றத்தில் பேசும்போது " நமது அரசியல் சட்டம் ஒரு மகத்துவம்மிக்க ஆவணம். அதை இயற்றியவர் அம்பேத்கர். இன்று சட்ட வல்லுனர்கள் குறைபாடில்லாத சட்டம் ஒன்றை இயற்ற தடுமாறுகிறார்கள். அம்பேத்கரின் சிந்தனைகள் அனைத்து தலைமுறையினருக்கும் எல்லா காலங்களிலும் பொருந்தக்கூடியவை" என்று புகழாரம் சூட்டினார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption ரோஹித் வெமுலாவின் தற்கொலை தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன

"பாத்திரம் கழுவிய தாய் ஒருத்தியின் பிள்ளை இந்த நாட்டின் பிரதமராக வரமுடிந்ததென்றால் அந்தப் பெருமையெல்லாம் அம்பேத்கரையே சாரும் " என்று முழங்கினார்.

எந்த வாக்கு வங்கி அரசியலை பிரதமர் மோடி சாடுகிறாரோ, அதே வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் இந்த வாய்ப் பந்தல்களை அவர் போட்டுக்கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

தொடர்பான செய்திகள்:

தலித் விரோத பொருளாதார கொள்கை

தலித் மக்களுக்கு எதிராக பாஜக அரசு எடுத்துவரும் குறிப்பான நடவடிக்கைகளால் மட்டுமின்றி, அதன் பொருளாதார கொள்கைகளாலும் தலித்துகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பிரதமர் மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் நசிந்து அமைப்புசாரா தொழிலாளர்களாக வேலை செய்துகொண்டிருந்த லட்சக் கணக்கான தலித்துகள் வேலை இழந்தனர்.

விவசாயத் துறைமீது மோடி அரசு தொடுத்துள்ள தாக்குதல் கிராமப் புறத்தில் நிலத்தையே நம்பியிருக்கும் கூலிவிவசாயிகளான தலித்துகளை பிழைப்புதேடி நாடோடிகளாக அலையவைத்துள்ளது.

Image caption அம்பேத்கரின் படத்துக்கு மலர் தூவிய பிரதமர் மோதி

கடந்த மூன்று ஆண்டுகளில் பாஜக அரசு பொருளாதார தாராளவாதத்தையும் கலாச்சார அடிப்படைவாதத்தையும் வெற்றிகரமாக ஒன்றிணைத்துள்ளது.

வளங்களையும் அதிகாரத்தையும் ஒரு சில பெருமுதலாளிகளின் கைகளில் குவித்திருக்கிறது; அடித்தள மக்களை ஓட்டாண்டிகளாக்கிக்கொண்டே ஆசை வார்த்தைகளால் அவர்களை ஏய்த்துவருகிறது.

ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி இப்போது ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகளைக்கூட உருவாக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் பலவீனம்

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருப்பதும்,தேர்தல் களத்தில் இடதுசாரிகளின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வருவதும், பதவி கிடைத்தால் போதும் என்று தலித் தலைவர்கள் பாஜகவோடு கைகோர்ப்பதும், தலித் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளன.

ஆளும் கட்சியின் ஆசை வார்த்தைகளையும் மீறி பிரதமர் மோடியின் மீதான ஈர்ப்பு இப்போது மங்கத் தொடங்கிவிட்டது, மத்தியதர வர்க்கத்தின் வகுப்புவாதமயக்கம் தெளிய ஆரம்பித்துவிட்டது , ஆனால் 2014 ல் காங்கிரஸுக்கு மாற்று பாஜக தான் என மக்கள் நினைத்ததைப்போல இப்போது பாஜகவுக்கு மாற்று இந்தக் கட்சிதான் என்று சொல்வதற்குத் தகுதியாக எந்தவொரு கட்சியும் கண்முன்னே இல்லை.

2019 லும் பாஜக தானா?

பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துக் கூறுவதோடு ஒரு மாற்று பொருளாதார, அரசியல் திட்டத்தோடு தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியை காங்கிரஸ் முன்னெடுக்கவேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை காங்கிரஸ் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பாஜகவை காங்கிரசால் வீழ்த்த முடியுமா?

அண்மையில் திருமதி சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆனால், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதால் மட்டும் பாஜகவை காங்கிரஸால் வீழ்த்திவிட முடியாது.

வாக்கு வங்கி அரசியலுக்காக அல்லாமல் உண்மையாகவே தலித் மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுப்பதற்கான திட்டத்தை காங்கிரஸ் வகுக்கவேண்டும்.

தற்போது பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளும் சாதிய அணுகுமுறையைக் கைவிட்டு தலித்துகளோடு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும்.

இவற்றைச் செய்யாவிட்டால் 2019 லும் பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்க முடியாது.

(கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் பொதுச் செயலாளர் , விடுதலை சிறுத்தைகள் கட்சி)

இதையும் படிக்கலாம்:

பிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

பலன் தந்ததா மோதியின் மேக் இன் இந்தியா?

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற மாணவர் தாக்கப்பட்டது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்