'சென்னை சில்க்ஸ் கட்டடம் விரைவில் இடிக்கப்படும்': நிதியமைச்சர் ஜெயக்குமார்

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி இன்னும் சில மணி நேரங்களில் துவங்கும் என மாநில நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் புதன்கிழமையன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் அப்போது இருந்த 11 பேரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

இதற்குப் பிறகு துவங்கிய தீயணைக்கும் பணிகள் விடிய விடிய நடைபெற்றன. இந்நிலையில் இன்று அதிகாலையில் கட்டடத்தின் ஒரு பகுதி நொறுங்கிவிழுந்தது.

இந்நிலையில், இன்று காலையில் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஜெயகுமார், சென்னை சென்ட்ரல் பகுதியிலிருந்து எந்திரங்கள் வரவழைக்கப்படவிருப்பதாகவும் அவற்றை வைத்து அந்தக் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கான செலவு சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடமிருந்து பெறப்படும் என்றும் அவர் கூறினார். மூன்று நாட்களில் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

உஸ்மான் சாலையில் உள்ள கடைகள் இரண்டாவது நாளாக இன்றும் அடைக்கப்பட்டிருந்தன.

விபத்திற்குள்ளான இந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டது என வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 மாடிகளைக் கட்ட அனுமதி வாங்கிவிட்டு 7 மாடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி நீதிமன்றத்திடம் தடையாணை பெற்றிருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான பிற செய்திகள்:

தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

சென்னையில் பெரும் தீ விபத்து; கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராட்டம்

சென்னை துணிக்கடையில் பல மணி நேரமாக எரியும் தீ (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்