காஷ்மீர் பெண்கள்: இயல்பு வாழ்க்கை கானல் நீரா?
- திவ்யா ஆர்யா, மாஜித் ஜஹாங்கீர்
- பிபிசி செய்தியாளர்கள்

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய நிர்வாகத்திற்குள் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த நபரை தி்ருமணம் செய்து கொண்டதால் தான் படும் துயரங்களை பிபி்சியின் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
நான் பாகிஸ்தானின் நிர்வாகத்தில் உள்ள `ஆஜாத்` காஷ்மீரை சேர்ந்தவளாக இருந்தாலும், எனக்கு இந்தியருடன் திருமணமானது.
இந்திய காஷ்மீர் பகுதியில் இருந்து, ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைவதற்காக வந்த ஒரு 'பயங்கரவாதி' யுடன் திருமணமானது.
2011 ஆம் ஆண்டு உமர் அப்துல்லா அரசு அறிவித்த 'சரணடையும் திட்டத்தின்' படி இந்தியா திரும்ப வேண்டும் என்ற கணவரின் பிடிவாதத்தால், குழந்தைகளுடன் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்கு வந்தேன்.
சொர்க்கமா, புதைகுழியா?
மண்ணின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் இந்த காஷ்மீர் எங்களுக்கு புதைகுழியாகிவிட்டது. இனிமேல் பாகிஸ்தானில் இருக்கும் எங்களது சொந்த காஷ்மீருக்கு செல்லவேமுடியாதா?
'இந்தியாவின் காஷ்மீரில் இருக்கும் மாப்பிள்ளையை ஒருபோதும் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள், அப்படியே திருமணமாகியிருந்தால், உடனே திருமண பந்தத்தில் இருந்து உடனே விலகிவிடுங்கள்.' என்பது தான் சுதந்திர காஷ்மீரில் இருக்கும் பெண்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்.
என் கணவரை தீவிரவாதி என்று சொல்லும் இந்திய அரசு, அவரை சட்டவிரோதி என்று முத்திரை குத்திவிட்டது. குடும்பத்தினரான நாங்கள் என்ன தவறு செய்தோம்? அவரை தீவிரவாதியாக மாற்றியது யார்? நாங்களா?
நான் அவரை திருமணம் செய்துகொண்டேன், பிறகு உலக வழக்கப்படி கணவருடன் வாழ்வதற்காக இங்கு அழைத்து வரப்பட்டேன். எங்களை ஏன் கட்டி வைத்திருக்கிறார்கள்?
இந்த ஐந்தரை ஆண்டுகளில் என்னுடைய ஊருக்கு ஒருமுறை கூட செல்ல முடியவில்லை, என் குடும்பத்தினரை பார்க்கவில்லை. என் அப்பா இறந்துவிட்டார் என்ற தகவல் கூட, ஓராண்டுக்கு பிறகுதான் எனக்கு தெரிந்தது.
என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் முஜாஃபராபாதில் இருக்கிறார்கள், அவர்களும் என்னைப்போலவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிகளை மணம் முடித்தவர்கள் தான், நாங்கள் இருவருமே காஷ்மீரை சேர்ந்தவர்கள் தானே? நாங்கள் என்ன பெரியவர்களை எதிர்த்தோ, காதலித்தா மணம் முடித்தோம்? பெற்றவர்களே மாப்பிள்ளைகளை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தாலும், இப்போது நாங்கள் பலிகடாக்களாக பரிதவிக்கிறோம்…
இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இருந்து விடுதலை தாகத்துடன் மிகச் சிறிய வயதிலேயே பாகிஸ்தானுக்கு வரும் இளைஞர்கள், சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிடுகிறார்கள்.
என் கணவரும் கடை வைத்து காய்கறி வியாபாரம் செய்துக்க்கொண்டிருந்தார். பெரியவர்கள் பார்த்து, ஏற்பாடு செய்த திருமணம் தான் என்னுவையது. 2011 ஆம் ஆண்டில் 'சரணடையும் திட்டத்தை' இந்திய அரசு அறிவித்ததும், பெற்றோர், சகோதர-சகோதரிகள், மற்றும் பிறரை சந்திக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
எங்களுக்கு இங்கு வர விருப்பம் இல்லை, என் பெற்றோரும், மற்றவர்களும் போகவேண்டாம் என்று தடுத்தார்கள். மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்று அனைவரும் அச்சப்பட்டார்கள், எச்சரித்தார்கள். அதை நான் நம்பவில்லை, ஆனால் என் குடும்பத்தினர் சொன்னதுதான் சரி, நான் இங்கு வந்திருக்கக்கூடாது.
என் கணவர் மிகவும் பிடிவாதம் பிடித்தார். அவருடைய குடும்பத்தினர் எங்களை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
திருமணம் ஆன பெண்ணிற்கு வேறு என்ன வழி? வர மறுத்தால் குடும்பம் உடைந்து போகும், குழந்தைகளின் எதிர்காலமும் வீணாகிப்போகும். சரி, இந்தியாவில் இருக்கும் காஷ்மீர் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் என்று அவருடன் வந்துவிட்டோம்.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதியன்று நாங்கள் நேபாளம் வழியாக காஷ்மீருக்கு வந்தோம்.
பிழையான மனக்கணக்கு
'சரணடையும் திட்டத்தின்படி' இந்தியா வருவதற்காக அறிவிக்கப்பட்ட நான்கு வழிகளில் இந்த பாதை கிடையாது என்றாலும் நாங்கள் இங்கு வருவதற்கு வேறு வாய்ப்பில்லாமல் தான் இதனைத் தேர்ந்தெடுத்தோம். காரணம், பாகிஸ்தான் அரசு, அந்த நான்கு வழிகள் வழியாகவும் இந்தியா வருவதற்கு எங்களை அனுமதிக்கவில்லை.
இத்தனைக் கஷ்டப்பட்டு, இந்திய காஷ்மீருக்கு வந்த பிறகு, சட்டவிரோதமாக எல்லை கடந்தோம் என்ற எங்களை கைது செய்தார்கள். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இங்கு வந்து ஒரு மாதம் இருந்துவிட்டு, என் சொந்த ஊருக்கு திரும்பி விடலாம் என்ற மனக்கணக்கில் தான் இங்கே வந்தேன், என் மனக்கணக்கு பிழையானதுடன், வாழ்க்கைக்கே விடை தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில், குழந்தைகளுடன் பரிதவித்து நிற்கிறேன். காவல்நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் இடையே அலைவதே வாழ்க்கையாகிவிட்டது.
இந்தியாவில் எங்களுக்கு என்ற அடையாளமும் இல்லை, அடையாள அட்டையும் கிடைக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு போய் வருவதற்கான பேச்சு எழும்போதெல்லாம், பாஸ்போர்ட் பிரச்சனை விஸ்வரூபமாக முன் நிற்கிறது. நாங்கள் சட்ட விரோதமானவர்கள் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறார்கள்.
பாகிஸ்தானுடன் நட்புக்கரம், மக்கள் பிரச்சனைகளுக்கு பாராமுகம்
நாங்கள் சட்டவிரோதமானவர்கள் என்றால், எங்களை திருப்பி அனுப்ப வேண்டியது தானே? ஏன் இங்கேயே வைத்திருக்கிறீகள்?
இந்தியா, பாகிஸ்தானுடன் ஒருபுறம் நட்புக்கரத்தை நீட்டுகிறது, மறுபுறம் எங்களைப் போன்ற பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்காமல் அலைக்கழிக்கிறது.
மக்களின் மீது நம்பிக்கையே இல்லை. எனக்கு இங்கு தோழிகள் இருந்தாலும், யாருடனும் மனதை மறைக்காமல் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. மனிதர்கள் வெளிமுகம் வேறாகவும், உள்ளம் மாறாகவும் இருக்கிறது.
இந்த ஐந்தரை ஆண்டுகளாக இங்கு இருந்தாலும், சிறையில் அடைக்கப்பட்ட உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. என் இளைய சகோதரனுக்கு திருமணம் ஆகிவிட்டதாம், அதுவும் எனக்கு மிகவும் தாமதமாகத் தான் தெரிந்தது.
கடந்த எட்டு மாதங்களாக, வாட்ஸ்-அப், இண்டர்நெட் மூலமாக 'காஷ்மீர் விடுதலை' பற்றிய முழக்கங்கள் முழங்குகின்றன. எனவே இங்குள்ள அரசு அவ்வப்போது இண்டர்நெட்டை தடை செய்தாலும் அதனால் எந்தப் பலனும் இல்லை.
இங்கு எப்போதும் வன்முறை தான் இருக்கிறது. ஒவ்வொரு கணமும், ஆபத்தானதாக இருக்கிறது. எப்போதும் கவலையாகவும், டென்சனாகவுமே இருக்கிறோம்.
இதற்கு முன்பு செய்தே இராத வயல் வேலைகளை செய்கிறேன், வேறு வழி? வலிக்கிறது மனம்.
மாறுபட்ட வாழ்க்கை முறை
இங்குள்ள சூழ்நிலை, பேச்சு வழக்கு, வாழ்க்கை முறை, எங்கள் ஊரில் இருந்து மிகவும் மாறுபட்டதாய் இருக்கிறது. இப்போது என் குழந்தைகள் காஷ்மீர் மொழியை கற்றுக் கொள்கின்றனர். அங்கிருந்து, குடும்பத்தினர், நண்பர்களை பிரிந்து வந்ததில் அவர்கள் மிகவும் சோகமாக இருக்கின்றனர்.
எங்கள் ஊரில், அதாவது `ஆஜாத்` காஷ்மீரில் இருந்து, வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட பெண்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்கள் தாய் நாட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்து போகிறார்கள்.
இந்தியாவுக்கு ஏன் வந்தோம்? இதுதான், நானே என்னைக் கேட்டு நொந்து கொள்ளும் ஒரே கேள்வி. இங்கு வரலாம் என்று சொன்னவர்கள் மீது கோபம் வருகிறது. ஏன் எங்களை ஏமாற்றி இங்கு வரவழைத்தீர்கள்?
எப்போதும் மறக்காத அளவுக்கு இவர்களை ஏதாவது செய்யவேண்டும் என்றா ஆத்திரம் மனதில் எழுகிறது. ஆனால், சற்று நேரத்தில் மனம் அமைதியடைந்து என்ன தோன்றுகிறது தெரியுமா? அதன் விளைவு என்ன? ஒன்றுமே இல்லை, எதுவும் மாறப்போவதில்லை…
இயல்பாக வாழவேண்டும் என்ற எங்கள் கனவு நிறைவேறுமா? இல்லை அது கானல் நீரா?
காஷ்மீர் தொடர்பான பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்