சர்ச்சைகள்: ஐந்து நீதிபதிகள்

  • 2 ஜூன் 2017

இந்திய நீதித்துறை அரசியல் விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகியே இருக்கும். ஆனால், நீதிபதிகள் சிலரின் கருத்துகள் அல்லது தீர்ப்புகள் சில சமயங்களில் பரவலான விவாதங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

படத்தின் காப்புரிமை MARKANDEY KATJU..FACEBOOK
Image caption நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

நாட்டின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்கலாம் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா பதவியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்று பரிந்துரைத்தார்.

இந்த பரிந்துரை, நாளிதழ்கள், தொலைகாட்சி, சமூக ஊடகங்களில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதுபோன்ற பரபரப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்திய ஐந்து நீதிபதிகளின் அறிக்கைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்

1.நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

உச்ச நீதிமன்ற நீதிபதியான கட்ஜு, இந்திய பிரஸ் கவுன்சிலின் (பி.டி.ஐ) தலைவராகவும் பதவி வகித்தவர்.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளால் பிரபலமானவார் மார்கண்டேய கட்ஜூ. 90 சதவிகித இந்தியர்கள் முட்டாள்கள் என்று அவர் ஒருமுறை விமர்சித்திருந்தார்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யுங்கள், என்று ஒரு முறை கூறியிருந்தார் மார்கண்டேய கட்ஜூ

"90 சதவிகித இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களுக்கு மூளையே கிடையாது. அவர்களை சுலபமாக ஏமாற்றிவிடமுடியும். வெறும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால், டெல்லியில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிடமுடியும்" என்று மற்றொரு முறை அவர் குறிப்பிட்டார்.

ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருபவர் மார்கண்டேய கட்ஜூ.

படத்தின் காப்புரிமை PTI
Image caption நீதிபதி டி.எஸ்.தாக்கூர்

2. நீதிபதி டி.எஸ்.தாக்கூர்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் நியமனம் குறித்து பிரதம மந்திரி நரேந்திரமோதியிடம் கோரிக்கை வைத்தவர்.

நீதித்துறையை பலப்படுத்தும் முயற்சிகளில் பிரதமர் கவனம் செலுத்தவேண்டும், குறிப்பாக நீதிபதிகள் நியமனத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பல முக்கிய விசயங்கள் குறித்தும் பிரதமர் பேசுவது நல்லது தான், ஆனால் நீதித்துறை பற்றிய பிரச்சனைகளையும் பேசவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லி முதலமைச்சர்கள் மற்றும் மாநில நீதிபதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசிய நீதிபதி தாக்கூரின் குரல் கமறிவிட்டது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption நீதிபதி கர்ணன்

3. நீதிபதி கர்ணன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டிருக்கும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு, ஐந்தாண்டு தண்டனை வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

நீதிபதிகள் பலரும், மூத்த சட்டத்துறை அதிகாரிகளும் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி, பிரதமர் நரேந்திர மோதிக்கும், வேறு உயரதிகாரிகளுக்கும் நீதிபதி கர்ணன் கடிதம் எழுதினார்.

நீதித்துறை மற்றும் நிர்வாக பணியில் அவர் ஈடுபடுவதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சட்ட அமர்வு தடைவிதித்தது.

தலைமை நீதிபதி மற்றும் பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறைதண்டனை அறிவித்த நீதிபதி கர்ணன், நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சட்ட அமர்வு கருதியது. பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை பிறப்பித்த சட்ட அமர்வு, நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவிட்டது.

தொடர்புடைய கட்டுரைகள்:

நீதிபதி கர்ணன் - ஏன் இத்தனை சர்ச்சைகள்?

நீதிபதி கர்ணனின் சொந்த கிராமத்தில் கருப்பு கொடி போராட்டம்

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா

4. நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா

ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா, பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரைத்திருந்தார். இதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

'பசுவைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கவேண்டும்' என்று, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிப் பதவியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி மகேஷ் சந்திர சர்மா பரிந்துரைத்தார். மேலும், 'மயில் பிரம்மச்சாரி' என்று கூறிய அவரது கருத்தும் சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

5. நீதிபதி பிரதிபா ராணி

டெல்லி, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமாருக்கு பிணை வழங்கியபோது, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா ராணி கூறிய கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஜே.என்.யூ வளாகத்தில் சில மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்போது மாணவர்கள் எழுப்பிய முழக்கத்தில் பிரதிபலிக்கும் சிந்தனைகளை, பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்குமான அடிப்படை உரிமை என்றோ, இதை பாதுகாக்க வேண்டும் என்றோ உரிமை கொண்டாட முடியாது என நீதிபதி பிரதிபா ராணி கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை EPA

"இது இத்தகைய மாணவர்களைப் பாதித்துள்ள நோய். தொற்று நோய் போலப் பரவுவதற்கு முன்பே, இதைக் குணப்படுத்துவோ, கட்டுப்படுத்தவோ வேண்டும்" என்று நீதிபதி பிரதிபா ராணி தெரிவித்திருந்தார்.

சில மாணவர்களுக்கு 'தேச-விரோத மனப்பான்மை' என்னும் நோய் கண்டிருப்பதாகவும், அதை குணப்பபடுத்த 'ஆண்டிபயாடிக்' மருந்து போதுமானதாக இல்லை என்றால் 'அடுத்தகட்ட சிகிச்சை'க்குச் செல்லலாம் என்றும் நீதிபதி பிரதிபா ராணி கூறியிருந்தார்.

நோய் முற்றி ஆறாத புண் ஏற்பட்டுவிட்டால் அறுவை சிகிச்சை செய்து கையையோ காலையோ வெட்டியும் நோயை குணப்படுத்தலாம் என்றும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா ராணி கூறியிருந்தார்.

இதையும் படிக்கலாம்:

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் 'பலே உத்தி' : ஆய்வு

இலங்கையில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த வன உயிரினங்கள்

சென்னையில் பெரும் தீ விபத்து; கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்