நெருக்கடியிலும் பாகிஸ்தானில் முதலீடு செய்து லாபமீட்டிய வெளிநாட்டவர்

  • கரிஷ்மா வாஸ்வானி
  • ஆசிய வணிக செய்தியாளர்

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் கயீதா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் கொன்றுவிட்டதாக 2011 மே இரண்டாம் தேதி, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.

பட மூலாதாரம், MATTIAS MARTINSSON

படக்குறிப்பு,

மடியஸ் மார்டிசென்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் அருகே ஒரு வீட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் வெளிவந்ததும், பாகிஸ்தானின் தவறு பட்டவர்த்தனமானது.

பாகிஸ்தான் மீது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தவறான தகவல்கள் வருவது வழக்கமானது தான். இருந்தாலும் இந்தமுறை பாதிப்பு அதிகமாகிவிட்டது.

தெற்காசியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாகிஸ்தானின் அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, பாகிஸ்தானின் நாணயம் பலவீனமாக இருப்பதோடு, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்தும் குறைவுதான்.

வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்களின் கடைசி தெரிவாகவே பாகிஸ்தான் இருக்கிறது. ஆனால், மடியஸ் மார்டிசெனுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு.

2011 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் முதல் வெளிநாட்டு சமபங்கு நிதியை (ஈக்விடி ஃபண்ட்) மடியஸ் அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் அவருக்கு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில், அவரும், அவரின் கூட்டாளிகளும் ஒரு மில்லியன் டாலர்களை முதலீடு செய்தார்கள்.

முதலீடு மற்றும் பரஸ்பர நிதிச் சந்தையில் சர்வதேச நிதி வருவது முற்றிலும் புதிதாக இருந்தது. வெளிநாட்டுச் சந்தையின் செயல்பாட்டை பொருத்து இதில் லாபம் கிடைக்கும். நாணய மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கங்கள், சர்வதேச நிதியை பாதிக்கும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.

அந்த அபாயத்தை சவலாக எதிர்கொண்ட மடியஸின் முதலீடு இன்று 100 மில்லியன் டாலர்களாக பெருகிவிட்டது.

''அது மிகவும் கஷ்டமான நேரமாக இருந்தது'' என்று ஸ்டாக்ஹோமில் இருந்து தொலைபேசியில் பேசிய ஸ்வீடனைச் சேர்ந்த மடியஸ் சொல்கிறார்.

மிகவும் குறைவாகவே பேசும் மடியஸின் கருத்துப்படி, பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, பொருளாதார முதலீடுகள் மிகவும் மோசமாகி பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

பட மூலாதாரம், Getty Images

''பாகிஸ்தானின் ஒரு ராணுவ நிலையையே அமெரிக்க ராணுவம் தகர்த்துவிட்டது. அதன்பிறகு, நேட்டோ நாடுகளுக்கான வழங்கு பாதையை பாகிஸ்தான் மூடிவிட முடிவெடுத்த சமயத்தில், பங்குச் சந்தை பத்து சதவிகித வீழ்ச்சியடைந்தது'' என்கிறார் மார்டிஸன்.

பிற செய்திகள்:

தன்னை நிரூபித்த மார்டிஸன்

இருந்தாலும் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் இருந்து அவர் வெளியேறவில்லை.

இந்த வீழ்ச்சிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு, பங்குச் சந்தையை நிலைநிறுத்துவதற்கான பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டது. வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், தாயகத்தில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் வரி விலக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதனால் பங்குச்சந்தை சிறிதளவு சுதாரித்ததாக கூறும் மார்டிசன், மூன்று மாதங்களுக்குள் 50 மில்லியன் டாலர்கள் நிதியை திரட்டிவிட்டதாக சொல்கிறார்.

கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடும்போது, அப்போதுதான் மிக அதிக முதலீடு பாகிஸ்தானுக்குள் வந்ததை மார்டிசன் சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தானின் வெற்றியுடன் இணைந்த மார்டிசனின் வெற்றி

தன்னை நிரூபித்துவிட்டதை கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு மார்டிசன் உணர்ந்தார். 2017 ஜூன் முதல் நாளன்று, எம்.எஸ்.சி.ஐ எமர்ஜிங் மார்கெட்ஸ் இன்டக்ஸில் பாகிஸ்தான் நுழைந்த்து.

தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொண்ட பாகிஸ்தான், அதனை பரவலாக்கி வருவதற்கான அடையாளம் இது. முதலீட்டாளர்கள் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

இந்தியா, சீனா, பிரேசில் உட்பட 23 உயர் வளர்ச்சி பொருளாதார நாடுகளால் உருவாக்கப்பட்ட எம்.எஸ்.சி.ஐ எமர்ஜிங் மார்கெட்ஸ் இன்டக்ஸில் பாகிஸ்தானின், கே.எஸ்.ஈ, சிறப்பாக செயல்படுகிறது.

ஒருவர் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் கடந்த ஜனவரி மாதம் 100 டாலர்கள் முதலீடு செய்திருந்தால், அது இன்றைய தேதிக்கு 164 டாலராக அதிகரித்திருக்கும். இதே அளவு முதலீட்டை எம்.எஸ்.சி.ஐ-இல் செய்திருந்தால் அது 137 டாலராக தான் அதிகரித்திருக்கும்.

பாகிஸ்தானின் இந்த பங்குச் சந்தை வெற்றியுடன் மார்டிசனின் வெற்றியும் இணைந்திருக்கிறது.

வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் பாகிஸ்தான் இணைவது ஒரு சாதனையாகும். இதனால், அந்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இந்த வளர்ச்சி விகிதம் என்பது, வெளிப்படைத்தன்மையினால் ஏற்பட்டது. பாகிஸ்தான் இந்த குறியீட்டின் ஒருபகுதியாக இருந்தபோதிலும், வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதன் தாக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது

2008 ஆம் ஆண்டின் இறுதியில், பங்குச் சந்தை குறியீடுகள் எதிர்பாராத திடீர் சரிவை கண்டதால், நான்கு மாதங்களுக்கு மூட நேர்ந்தது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் போனது.

பங்குச் சந்தையை மீட்க தீவிர முயற்சிகள்

கராச்சி பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர் நதிம் நக்வி கூறுகிறார், ''2008ஆம் ஆண்டு நாங்கள் இண்டெக்ஸில் இருந்து வெளியே வரநேர்ந்தது. அந்த சமயத்தில், நாட்டில் இருந்து முதலீடுகள் வெளியேறாமல் தடுக்கவேண்டியிருந்தது. பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு, பங்குச்சந்தையை மீட்டெடுத்தோம்.

2012 ஆம் ஆண்டில் பாகிஸ்தான், ஸ்டாக் எக்சேஞ்ஜ் சட்டத்தை இயற்றியது. 2008 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக நதீம் சொல்கிறார்.

பட மூலாதாரம், AFP

சீனாவின் செல்வாக்கு

கடந்த சில ஆண்டுகளாகப் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (ஜி.டி.பி) அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பாகிஸ்தானின் மத்திய வர்க்கத்தினர் தான். பாகிஸ்தானில் 'ஒரு பாதை ஒரு சாலை' (One Belt One Road) திட்டத்தில் சீனா அதிக அளவு முதலீடு செய்திருக்கிறது.

46 பில்லியன் டாலர்கள் செலவில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்காக (சி.பி.ஈ.சி), சாலைகள், துறைமுகங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை பாகிஸ்தானில் கட்டும் பணிகளில் சீனா, ஈடுபட்டுள்ளது.

இது வெறும் தொடக்கம் தான் என்று கூறும் நக்வி, எதிர்வரும் ஓரிரு ஆண்டுகளில் இதன் விளைவுகள் தெளிவாகத் தெரியும் என்று சொல்கிறார். பாகிஸ்தான் பொருளாதாரத்தில் துரித வளர்ச்சியடையும் என்று கூறுகிறார்.

பாகிஸ்தான் பங்குச் சந்தையில் சீன நாட்டினரின் முதலீடு அதிகரித்துவருகிறது. தற்போது, பாகிஸ்தான் பங்குச் சந்தையில் சீனர்களின் முதலீடு 40 சதவிகிதமாக உள்ளது.

பாகிஸ்தானின் மத்திய வர்க்கத்தினருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதால், செலவு செய்வதையும் அவர்கள் அதிகரித்துள்ளனர். எதிர்வரும் ஐந்து-ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம் ஆறு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கவேண்டும் என்று நக்வி கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்