கருணாநிதியின் ஆறு தசாப்த சட்டமன்ற வாழ்க்கை - சில குறிப்புகள்

  • ஆர் முத்துக்குமார்
  • எழுத்தாளர்

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலைத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த திமுக, 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.

படக்குறிப்பு,

60 ஆண்டு கால சட்டமன்ற சாதனையாளர்

நாகப்பட்டினத்தை விரும்பிய கருணாநிதியைக் குளித்தலைக்கு அனுப்பினார் அண்ணா.

அந்தத் தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 15 பேரில் கருணாநிதியும் ஒருவர்.

திமுக சட்டமன்றக் கொறடாவானார். அன்று தொடங்கி கருணாநிதிக்குக் கட்சியில் ஏறுமுகம்தான்.

முக்கிய முடிவுகளில் கருணாநிதியின் கருத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

1962 தேர்தலின்போது கடந்தமுறை வென்ற 15 பேரையும் தோற்கடிக்க வியூகம் வகுத்தார் காமராஜர்.

அதில் 14 பேர் தோற்றுப் போயினர், தஞ்சாவூரில் போட்டியிட்ட கருணாநிதியைத் தவிர.

ஐம்பது உறுப்பினர்கள் கொண்ட திமுக சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவர் கருணாநிதி. கட்சி நடத்திய போராட்டங்களில் எல்லாம் கருணாநிதியின் பங்களிப்பு காத்திரமாக இருந்தது.

உறவுக்குக் கை, உரிமைக்குக் குரல்

படக்குறிப்பு,

மாநில முதல்வருக்கு சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமை 1969ல் பெற்றார் கருணாநிதி

அதன் காரணமாகவே, 1967 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தபோது கருணாநிதியைப் பொதுப்பணித்துறை அமைச்சராக்கினார் அண்ணா. திடீரென அண்ணா அகாலமரணம் அடைந்தபோது அவருக்குப் பதிலாக கருணாநிதி முதல்வரானார்.

அதுநாள்வரை காங்கிரஸ் எதிர்ப்பு, மத்திய அரசின் மீதான விமரிசனம் என்ற அளவில் செயல்பட்ட திமுகவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம்.

உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்றார் கருணாநிதி.

மத்திய, மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய ராஜமன்னார் கமிட்டி அமைத்தார். சுதந்தர தினத்தன்று ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவதே வழக்கம்.

ஆனால் கருணாநிதியின் முயற்சியால் மாநில முதல்வர் கொடியேற்றும் உரிமை வந்தது.

தொடர்புடைய பிற கட்டுரைகள்

காங்கிரஸ் உடைந்து, இந்திரா அரசு பெரும்பான்மை இழந்தபோது, அந்த அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தார் கருணாநிதி.

பிறகு 1971 தேர்தலில் திமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அப்போது திமுக வென்ற இடங்கள் 183.

அத்தனை இடங்களை அதற்கு முன்னரும் பின்னரும் எந்தவொரு கட்சியும் பெற்றதில்லை.

சாதனைகளும், சர்ச்சைகளும்

சாதனைகளும் சர்ச்சைகளுமாகவே நகர்ந்தது கருணாநிதி ஆட்சி. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்சா ஒழிப்புத்திட்டம் என்று செயல்பட்ட அதேவேளையில் புதிய சர்ச்சை மதுவிலக்கு வழியாக வந்தது. நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மதுவிலக்கை ரத்துசெய்தார் கருணாநிதி.

அது மிகப்பெரிய விமரிசனத்தைக் கிளப்பியது.

இத்தனைக்கும் மறு ஆண்டே மதுவிலக்கை மீண்டும் கொண்டுவந்துவிட்டார். ஆனாலும் அவர் மீதான விமரிசனங்கள் இன்றளவும் தொடர்கிறது.

படக்குறிப்பு,

எம்ஜியாருடன் கருணாநிதி , அண்ணா

கருத்து வேறுபாடு காரணமாக, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனிக்கட்சியைத் தொடங்கினர். அதே வேகத்தில், கருணாநிதி அரசு மீது ஊழல் புகார் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதைக் கொண்டுதான் பின்னாளில் கருணாநிதி மீது சர்க்காரியா விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

கட்சி உடைந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.

பிற்படுத்தப்பட்டோர் நலன்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்டநாதன் கமிஷனை அமைத்தார் கருணாநிதி.

தொடர்புடைய பிற கட்டுரைகள்

அதன் நீட்சியாக, 25% இருந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 31% ஆக உயர்த்தினார். மேலும், பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டையும் 16%-ல் இருந்து 18%ஆக உயர்த்தினார். சமூக நீதி வரலாற்றில் இது முக்கியமான முன்னேற்றம்.

காவிரி நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க நடுவர் மன்றம் வேண்டும் என்று கோரி திமுக அரசே வழக்கு தொடர்ந்து, பின்னர் இந்திராவின் வாக்குறுதியை நம்பி அந்த வழக்கைத் திரும்பப்பெற்றதும், கச்சத்தீவு தாரை வார்ப்பைக் கடுமையாக எதிர்த்த அதேவேளையில், கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் எந்தவொரு வழக்கையும் போடாமல் விட்டதும் கருணாநிதியின் மீது தொடரும் சர்ச்சைகள்.

நட்பில் சிக்கல்கள்

மாநில சுயாட்சி என்று பேசத் தொடங்கியது முதலே கருணாநிதி - இந்திரா நட்பில் சிக்கல்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

அந்த மோதல்களை நெருக்கடி நிலை ஊதிப் பெரிதாக்கின. எமர்ஜென்சியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. அதன் நீட்சியாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356வது பிரிவின் கீழ் கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது.

அத்தோடு, கருணாநிதி உள்ளிட்டோர் மீது நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது இந்திரா அரசு.

நெருக்கடி நிலையில் அதிகம் வதைக்குள்ளான கட்சி திமுக. ஆனால் அடுத்து வந்த தேர்தல்களில் அந்தக் கட்சிக்குத் தோல்வியே மிஞ்சியது.

கருணாநிதி வகித்த முதல்வர் பதவி எம்.ஜி.ஆரிடம் சென்றது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும்வரை முதல்வர் நாற்காலி கருணாநிதி பக்கம் வரவே இல்லை.

என்றாலும், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக் கேள்வி எழுப்புவது, விமரிசிப்பது, சட்டமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுப்பது என்று வீரியமிக்க எதிர்க்கட்சி அரசியலைச் செய்தார் கருணாநிதி.

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி

எம்.ஜி.ஆரை வீழ்த்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்த கருணாநிதி, எமர்ஜென்சி கசப்புகளை எல்லாம் விழுங்கிக்கொண்டு, 1980 மக்களவைத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார்.

நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார்.

அந்தக் கூட்டணி அபார வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர் உயிருடனும் உறுதியுடனும் இயங்கிய காலத்தில் கருணாநிதி பெற்ற ஒரே வெற்றி இதுதான்.

தொடர்புடைய பிற கட்டுரைகள்

மீண்டும் பிரதமரானார் இந்திரா. அப்போதுதான் சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் கருணாநிதி மீது தொடரப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப்பெறப்பட்டன. பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி - இந்திரா கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

எம்.ஜி.ஆர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அரசின் மீதான விமரிசனங்களை அவையில் பதிவுசெய்தது, திருச்செந்தூர் ஆலய அதிகாரி கொலைவழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட எம்.ஜி.ஆர் அரசு தயங்கியபோது, அந்த அறிக்கையை ரகசியமாகப் பெற்று பத்திரிகைகளில் வெளியிட்டது, கொலைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியபோது நீதிகேட்டு நெடும்பயணம் சென்றது என்று தொடர்ச்சியாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே, தனது கட்சியையும் உயிரோட்டத்துடன் வைத்திருந்தார் கருணாநிதி.

எண்பதுகளின் மத்தியில் ஈழத்தமிழர் விவகாரம் மோசமடைந்தபோது, இனப்படுகொலைக்கு எதிராக கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.

1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணத்தின் மூலம் கருணாநிதி-எம்.ஜி.ஆர் எதிர் அரசியல் முடிவுக்கு வந்தது.

பிறகு நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. மீண்டும் முதல்வரானார் கருணாநிதி.

ஈழப் பிரச்சனை

படக்குறிப்பு,

வி.பி.சிங்குடன் கருணாநிதி

சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் ஆட்சியில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்று மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, பெண்ணுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்.

தமிழகத்தில் ஈழப்போராளிகளுக்கு கருணாநிதி அரசு ஆதரவளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு பத்மநாபா படுகொலை வலுசேர்த்தது. கருணாநிதி அரசைக் கலைக்கக்கோரின எதிர்க்கட்சிகள்.

அந்தக் கோரிக்கையை வி.பி.சிங்குக்குப் பிறகு பிரதமரான சந்திரசேகர் நிறைவேற்றினார்.

ஆட்சி கலைக்கப்பட்ட அனுதாபத்தோடு 1991 தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி.

ஆனால் ராஜீவ் கொலை ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தியது.

முக்கியமாக, திமுக தான் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி, துறைமுகம் தொகுதியில் கருணாநிதியைத் தவிர.

தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தப் பதவியையும் ராஜினாமா செய்தார்.

படக்குறிப்பு,

பிரிந்தார் வைகோ

ஐந்தாண்டு காலத்துக்கு எதிர்க்கட்சி அரசியலையே நடத்தவேண்டிய சூழல். போதாக்குறைக்கு, கட்சிக்குள் பிளவு வேறு. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ மதிமுகவைத் தொடங்கினார்.

ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி திமுக ஆட்சியில் அமர்வதற்கான வாயிலைத் திறந்துவிட்டது. 1996 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் முதல்வரானார் கருணாநிதி.

சர்ச்சைக்குரிய பாஜக கூட்டணி

மக்கள் நலத்திட்டமாக உழவர் சந்தை, முற்போக்குத் திட்டமாக சமத்துவபுரம் என்று நகர்ந்துகொண்டிருந்த கருணாநிதியின் அரசியல் வாழ்வில் ஒரு திடீர் திருப்பம்.

பண்டாரம், பரதேசி என்று கருணாநிதியால் விமரிசிக்கப்பட்ட பாஜகவுடன் 1999ல் கூட்டணி அமைத்தார்.

படக்குறிப்பு,

பாஜகவுடன் சர்ச்சைக்குரிய கூட்டணி

தேர்தல் ரீதியாக அந்த முயற்சிக்கு வெற்றிகிடைத்தாலும், ஆரம்பகாலம் தொட்டு சிறுபான்மையினர் ஆதரவுக்கட்சியாக, மதச்சார்பின்மை பேசும் கட்சியாக அறியப்பட்ட திமுகவின் வரலாற்றில் இதுவொரு நெருடல் முடிவுதான்.

ஐந்தாண்டுகளுக்கு பாஜகவோடு கூட்டணி அமைத்திருந்த திமுக, திடீரென அங்கிருந்து விலகி, காங்கிரஸ் பக்கம் வந்தது. மதச்சார்பற்ற அணியின் அவசியம் உருவாகியிருப்பதாகச் சொல்லி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற வானவில் கூட்டணியை உருவாக்கி வெற்றி பெற்றது திமுக.

2006 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியே வெற்றிபெற்றது. மீண்டும் கருணாநிதி முதல்வரானார்.

அப்போது அவர் அமைத்தது மைனாரிட்டி அரசுதான். அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், பாமக, இடதுசாரிகளின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் நீடித்தது கருணாநிதி அரசு.

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களுள் சமச்சீர்க் கல்வித் திட்டம், தமிழ் செம்மொழி, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் என்று இயங்கிவந்த கருணாநிதி அரசுக்கு இலங்கை இறுதி யுத்தம் கடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியது.

தொடர்புடைய பிற கட்டுரைகள்

கொதிநிலையில் ஈழம்

போரை நிறுத்தக்கோரி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதமும் விமரிசனத்துக்கு உள்ளானது.

ஈழப்பிரச்னை கொதிநிலையில் இருந்தபோது நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குப் பெரிய சேதாரமில்லை.

மீண்டும் மத்திய அரசில் திமுகவினர் இடம்பெற்றனர். ஆனால் 2011 தேர்தல் கடும் சவாலைக் கொடுத்தது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்த ஆவணங்கள் வெளியானதும், அவற்றை ஈழ ஆதரவு அமைப்புகள் மக்களிடம் கொண்டுசென்றதும் திமுகவுக்கு நெருக்கடியை உருவாக்கின.

போதாக்குறைக்கு, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளும் சேர்ந்துகொண்டது.

தேர்தலுக்கு முன்பு மக்களை வாட்டிய மின்வெட்டுப் பிரச்னை தேர்தல் களத்தில் திமுகவை வதைத்தது. எல்லாம் சேர்ந்து 2011 தேர்தல் களத்தில் திமுகவைத் தோல்வியில் தள்ளின.

ஈழப்பிரச்னை காரணமாக காங்கிரஸ் உறவை முறித்துக்கொண்டு 2014 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி. அதேசமயம், தேமுதிகவைக் கூட்டணிக்குக் கொண்டுவர முடியவில்லை. வேறு வழியின்றி சிறுகட்சிகளுடன் அமைத்த கூட்டணி நூறு சதவிகிதத் தோல்வியைத் தந்தது.

ஆனாலும் 2016 சட்டமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொண்டு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டார் கருணாநிதி.

அதுநாள்வரை திமுகவின் ஈர்ப்பு சக்தியான கருணாநிதி முதுமை, உடல்நிலை காரணமாகப் பிரசாரத்துக்குப் போக முடியாத நிலையில், நமக்கு நாமே என்ற பெயரில் பிரசாரப் பயணம் தொடங்கினார் முக.ஸ்டாலின்.

2016 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியின் முதன்மையாக இலக்கு, தேமுதிக. ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. கூட்டணிக்கு வாருங்கள் என்று விஜயகாந்துக்குப் பகிரங்க அழைப்புவிடுத்தார் கருணாநிதி.

ஆனால் கடைசிவரை தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை. வேறுவழியின்றி காங்கிரஸ் மற்றும் சில சிறுகட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது திமுக.

தேர்தல் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ராஜ தந்திரியாக அறியப்பட்ட கருணாநிதிக்கு இது முக்கியமான பின்னடைவு.

தேர்தலின் முடிவில் திமுகவுக்குத் தோல்வியே மிஞ்சியது. என்றாலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குப் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக அமர்ந்தது.

திமுக ஆகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் தற்போதைய சட்டமன்றத்திலும் மு.கருணாநிதி உறுப்பினராகத் தொடர்கிறார். இந்தியாவில் வேறெந்தத் தலைவருக்கும் கிடைத்திராத வைரவாய்ப்பு கருணாநிதிக்கு மட்டுமே வசப்பட்டிருக்கிறது!

(கட்டுரையாளர், ஆர். முத்துக்குமார். எழுத்தாளர். "திராவிட இயக்க வரலாறு", "தமிழக அரசியல் வரலாறு" உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.)

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்