நால்வர் மரணத்திற்கு பின் முகாமுக்கு அனுப்பப்பட்ட கோவை யானை

  • 2 ஜூன் 2017

கோவை மதுக்கரை அருகே வெள்ளூர் கிராமத்தில் காணப்பட்ட 18 வயது மதிக்கத்தக்க காட்டு யானை தாக்கியதில் நான்கு நபர்கள் உயரிழந்துள்ளனர், அந்த யானை தற்போது அரசு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption மதுக்கரை மகாராஜ் யானை ( கோப்புப்படம்)

கடந்த இரண்டு தினங்களாக வெள்ளூர் பகுதியில் வலம் வந்த யானை 12 வயது சிறுமி உட்பட நான்கு நபர்களை வெள்ளியன்று அதிகாலை தாக்கி கொன்றது என்றும் அந்த குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகை உடனடியாக அளிக்கப்பட்டுள்ளது என்றும் பிபிசிதமிழிடம் பேசிய கோவை வனசரக அதிகார ராமசுப்ரமணியம் தெரிவித்தார்.

குமிக்கி யானைகளின் துணையுடன், சுமார் ஆறு மணிநேர போராட்டத்திற்கு பின், காட்டு யானை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தற்போது ஆனைமலை வன சரணாலயத்திற்கு அந்த யானை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் ராமசுப்ரமணியம் குறிப்பிட்டார்.

கோவை நகரம், மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி விரிவடைந்து வருவதன் தொடக்கம்தான் இந்த நான்கு மரணங்கள் என்கிறார் வன உயிர் ஆர்வலர் ஓசை காளிதாஸ்.

''யானை அல்லது மனிதன் ,யார் இறந்தாலும் அது இழப்புதான். அந்த காட்டு யானை உணவு அல்லது தண்ணீர் அல்லது என்ன தேவைக்காக வெள்ளூர் கிராமத்திற்கு வந்தது என்று தெரியவில்லை. வெள்ளூர் மக்களும் அங்கு யானை நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று நம்பியதால் மட்டுமே அதை அலட்சியப்படுத்தியுள்ளனர்,'' என்றார்.

Image caption மதுக்கரை மகாராஜ் யானை இறந்த சம்பவத்திற்கு மதுக்கரை மக்கள் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி பதாகை

''யானையால் தாக்கப்பட்டு இறந்துபோகும் மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கிட்ட கோவை வனத்துறை 1994-2004 வரை 23ஆக இருந்த மரணங்கள், 2004-2014வரை 99 என பதிவாகியது என்று கணக்கிட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ''என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'மதுக்கரை மகாராஜ்' என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட யானை, பிடிபட்ட இரண்டு நாட்கள் கழித்து இறந்துபோனது. அதனால் இந்த முறை காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

காற்றில் கலந்த கவிக்கோ ; அப்துல் ரஹ்மான் காலமானார்

சஹாரா பாலைவனம்: தாகத்திற்கு 44 பேர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்