காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் ஒரு சிப்பாய் கொலை

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில், சனிக்கிழமை அதிகாலையில், தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் சம்பவம் ஒன்றில், குறைந்தது ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் வன்முறைக்கு எதிராக போராடும் மக்கள்(கோப்புப்படம்)

வேறு 5 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுக்கு இலக்கானார்கள் என்று அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

இதை ராணுவத்துக்கான பேச்சாளர் கர்னல் ராஜேஷ் காலியா உறுதிப்படுத்தினார்.

இந்தத் தாக்குதல் ஸ்ரீநகருக்குத் தெற்கே 40 மைல் தொலைவில் உள்ள காஜிகுண்ட் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அருகே நடந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய ஆட்சிக்கு எதிராக மீண்டும் தீவிரவாத வன்முறையும் வீதிப் போராட்டங்களும் வெடித்திருக்கின்றன.

போராளிகளுக்கு எதிரான ஒரு புதிய தந்திரத்தை வரையறுக்க இந்தியா ராணுவத்தின் தலைமை அதிகாரிகள் ஸ்ரீநகரில் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் வந்துள்ளது.

காஷ்மீரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக் குகைக்கு ஜூன் மாத இறுதியில் தொடங்க இருக்கும் இந்துப் புனித யாத்திரை சுமுகமாக நட்த்தப்படுவதை உறுதி செய்ய, தாக்கிக் கொல்லப்படவேண்டிய ஒரு டஜன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ராணுவம் அவர்களைத் தேடியழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குறைந்தது 200 தீவிரவாதிகளாவது இருப்பார்கள் என்று போலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் நம்புகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய ராணுவத்தால் வீசப்பட்ட பெல்ட் குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீர்வாசி

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த ஒரு சுருக்கமான மோதல் சம்பவத்தில் தீவிரகளின் பிரபல தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீர் கொதிநிலையிலேயே இருந்துவருகின்றது.

புர்ஹான்வானி கொலைசெய்யப்பட்டதற்குப் பிறகு, குறைந்தது 100 போராட்டக்கார்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு கடந்த இலையுதிர்காலம் வரை பல மாதங்கள் மூடப்பட்டிருந்தது.

குளிர்கால மாதங்களில் நிலவிய ஒரு சிறிய இடைவெளிக்குப் பின், ஏப்ரல் மாதத்தில் காலியாக இருந்த ஒரு இந்திய நாடாளுமன்ற தொகுதியை நிரப்ப அதிகாரிகள் இடைத்தேர்தலை நடத்திய சமயத்தில் போராட்டங்கள் மீண்டும் தொடங்கின.

வாக்களிப்பதற்கு தகுதியானவர்களில் வெறும் ஏழு சதவீத வாக்காளர்கள் மட்டும் ஓட்டு போட்டனர்.

ஆயுதமேந்திய வன்முறையுடன் பிரிவினைவாத எதிர்ப்புக்களை உறுதியாக கையாள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மே 27ம் தேதியன்று என்கௌன்டரில் புர்ஹான்வானியின் நெருங்கிய உதவியாளர் சப்ஸார் பத் கொல்லப்பட்ட போது, புதிதாகப் போராட்டங்கள் வெடித்தன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய ராணுவத்தால் வீசப்பட்ட பெல்ட் குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீர் சிறுவன்

சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களை தூண்டிவிட்டு,வெளிப்படையாக இயங்கும் பிரிவினைவாத குழுக்கள் மூலம் தீவிரவாத வன்முறைக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம், காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பதட்டத்தை ஏற்படுத்துகிறது என்று இந்திய அரசாங்கம் வலியுறுத்துகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் வன்முறைக்கு எதிராக போராடும் மக்கள்(கோப்புப்படம்)

சனிக்கிழமையன்று, இந்தியாவின் முதன்மையான புலனாய்வு நிறுவனம் என்ஐஏ(NIA) பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் பெரும் வர்த்தகர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது

பாகிஸ்தான் தொடர்புகள் வழியாக, சட்டவிரோத நிதி பரிமாற்றங்கள் நடத்திய சம்பவங்கள் தொடர்பில் குறைந்தபட்சம் மூன்று பிரிவினைவாதத் தலைவர்கள் ஏற்கனவே விசாரணைக்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த ஒரு ஊடகம் ஒரு புலனாய்வு செய்தியில் சில தலைவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக அளவில் பணம் பெறுவதை அவர்கள் ஒப்புக்கொள்வதாக வெளியான செய்தியை அடுத்து இந்திய அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்