ஜி.எஸ்.டி வரி: 18 பொருட்களுக்கு வரியை திருத்த தமிழகம் கோரிக்கை

இந்தியாவில் ஜூலை மாதம் 1ம் தேதி அமலாகவுள்ள ஜி.எஸ்.டி (GST) என்று அறியப்படும் புதிய சரக்கு மற்றும் சேவை வரியில் கருப்பட்டி, கோவையில் தயாராகும் வெட் கிரைண்டர், மசாலா பொடிகள், ஊறுகாய் உள்ளிட்ட பல அன்றாட பயன்பாட்டில் உள்ள 18 நுகர்வோர் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை திருத்தி அமைக்குமாறு தமிழக நிதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தற்போதுவரை நடைமுறையில் உள்ள 'வாட்'(VAT) வரி, சுங்கவரி போன்ற பலவிதமான மத்திய அரசின் வரிகள் நீக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களுக்கு ஒரே மாதிரியான வரி நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

இந்த வரிவிதிப்பின்படி 1,200 பொருட்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதில் 5,12,14 மற்றும் 28 சதவீத வரி விதிப்பு என நான்கு அளவுகளில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமை வகித்த ஜி.எஸ்.டி தொடர்பான கூட்டத்தில், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது கோதுமை, மைதா, கடலைமாவு மற்றும் பிற மாவுகளுக்கு வரி விலக்கு அளித்திட வேண்டும் என்றும் தமிழகத்தில் குடிசைதொழில் முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை கரும்பு வெல்லத்திற்கு இணையாக வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும் என்றார் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கோவையில் தயாரிக்கப்படும் வெட் கிரைண்டரானது புவியியல் அங்கீகாரம்பெற்ற ஒரு பொருளாகும். இதற்கு 28 வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் பெரும்பாலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கீழ் உள்ளதால், இவை மத்திய கலால் தீர்வைக்கு உட்படுவதில்லை.

இத்தொழிலுக்கான பெரும்பாலான மூல உள்ளீடுகள் 18 சதவீத வரிக்கு உட்படுவதால், வெட் கிரைண்டர் மீதான வரியினையும் 18-ஆக குறைக்கப்பட வேண்டும் என்றார் ஜெயக்குமார்.

அதே போல உணவகங்களுக்கும், மதுபானங்கள் வழங்காத குளிர்சாதன வசதியுள்ள சாதாரண உணவகங்களுக்கும் வேறுபடுத்தி 18சதவீததிற்கு பதிலாக 12 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என்றார் தமிழக நிதி அமைச்சர்.

தொடர்புடைய கட்டுரைகள்:

ஜி.எஸ்.டியில் பூஜ்ஜியம் வரி விதிக்கப்படும் பொருட்கள் என்ன?

''ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைப்படத்துறை சின்னாபின்னமாகும்'' : கமல் ஹாசன்

தங்க நகைகள் மீதான வரிவீதத்தை பொறுத்த வரையில், கையினால் தயாரிக்கப்பட்ட நகைகள் மற்றும் இயந்திரம் கொண்டு தயாரிக்கப்பட்ட நகைகளை வேறுபடுத்தி வரி விதிக்க வேண்டும்.

கையினால் தயாரிக்கப்படும் நகைகள் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த தங்க வேலை செய்வதில் ஈடுபட்டுள்ளதால், இதற்கு 5 சதவீத வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் அல்லது பெயரளவிலான ஒரு வீதத்தில் வரி விதித்திட வேண்டும் என்றார் ஜெயக்குமார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அன்றாடம் பயன்படுத்தப்படும் குடிநீர் கேன்கள் (பபுல் டாப்) மற்றும் சிறிய பாக்கெட்களில் நிரப்பி விற்கப்படும் தண்ணீருக்கும் வித்தியாசம் உள்ளதால், அந்த இரண்டிற்கும் வரிவிதிப்பில் வித்தியாசம் தேவை என்றார்.

பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் பாகங்களுக்கு 18 சதவீதிற்கு பதிலாக 5சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

இதற்கு முன்னப்பாக நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் வாயிலாக, அடிப்படை உணவு வகைகள், உதாரணமாக, பால், உப்பு, அரிசி போன்றவை பூஜ்யம் வரி என்ற வரம்பிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்