அரசியல் நெருக்கடியில் தமிழக நிர்வாகம் முடக்கமா?

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துவரும் நிலையில், தமிழக அரசு அதனை எதிர்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கியது.

அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் எந்தவித அரசுப் பணிகளும் நடக்கவில்லையென்றே கூறலாம்.

அவரது மறைவுக்குப் பிறகுப் பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா பதவியில் இருந்தபோது ஏற்க மறுத்த மதுரவாயல் - துறைமுகம் இணைப்புச் சாலை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கினார்.

அதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வரானார்.

வறட்சி நிலை

அதற்குப் பிறகு, மாநிலம் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

முதலாவதாக, கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் வறட்சியை தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டு, நிவாரண உதவிகளை அரசு அறிவித்து.

ஆனால், மாநில அரசு அறிவித்த நிவாரண உதவிகள் போதாது, தங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென்று கோரி தில்லிவரை சென்று தமிழக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தற்போதுவரை இந்தப் பிரச்சனையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இதற்கு முன்பாக, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நிலையிலும் அது தொடர்பாக அ.தி.மு.க. அரசு பெரிய கண்டனங்களையோ, கருத்தையோ பதிவுசெய்யாமல் மவுனம் காத்தது.

இதற்குப் பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க, நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தபோது அது தொடர்பாக இரண்டு சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றியது.

ஆனால், அந்தச் சட்டங்களுக்கு தற்போதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு பலத்த சர்ச்சைக்கிடையில் நீட் தேர்வும் நடந்து முடிந்துவிட்டது.

தேர்வுக்கு இரு நாட்களுக்கு முன் வரை மாணவர்கள் குழப்பத்திலேயே இருந்தனர்.

மருத்துவ உயர்கல்வி படிப்புகளிலும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதிலும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.

பிற செய்திகள்:

படத்தின் காப்புரிமை Getty Images

நடைபெறாத உள்ளாட்சித் தேர்தல்கள்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவசரம் அவசரமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன.

இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லையெனக் கூறிய நீதிமன்றம், மீண்டும் தேர்தலை நடத்த காலக்கெடு விதித்தது.

ஆனால், தற்போதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்படவில்லை.

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் சிறப்பு அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டுவருகின்றன. நீதிமன்றம் பலமுறை கூறியும் அரசு அந்தத் தேர்தலை நடத்த முன்வரவில்லை.

பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டாலும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஏதும் நடத்தப்படாமலேயே முடிக்கப்பட்டது.

மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு சட்டப்பேரவையில் ஏற்கப்பட்டால் மட்டுமே புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் துவக்க முடியும்.

இது தொடர்பாக தி.மு.க. பல முறை கோரியும் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, மானியக் கோரிக்கைகளை விவாதிக்க அரசு முன்வரவில்லை.

"மானியக் கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்றுவது ஒரு மாநில அரசின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. அப்போதுதான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால், அதுவே இந்த அரசில் நடக்கவில்லையெனும்போது, அரசு எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். பிழைத்திருப்பதற்கான செயல்பாடுகளில் மட்டுமே இந்த அரசு ஈடுபட்டுவருகிறது" என்கிறார் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Image caption சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்று தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சூரஜ்

மாட்டிறைச்சி சர்ச்சையிலும் அதிமுக அரசு மௌனம்

இதற்கிடையில், இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு பல்வேறு கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு விதித்தது.

நாடு முழுவதுமே எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக எதிர்ப்புக் குரல்களை எழுப்பிய நிலையில், தமிழக அரசு தற்போதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாநிலங்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை மட்டும், மத்திய அரசின் இந்த விதிமுறைகளில் தங்களுக்கு ஒப்புதல் இல்லையெனத் தெரிவித்தார்.

ஆனால், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படும் சந்தைகள் முடங்கியிருப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்:

டாஸ்மாக் எதிர்ப்பு

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றதும் 500 மதுக்கடைகளை மூடுவது, பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்குவது, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்தர உதவித்தொகையை இருமடங்காக அதிகரிப்பது உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்தத் திட்டங்களும் இன்னும் முழுமூச்சில் செயல்படுத்தப்பட ஆரம்பிக்கவில்லை.

ஆனால், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டதும் உடனடியாக வேறு இடங்களைத் தேட ஆரம்பித்த மாநில அரசு மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்தக் கடைகளைத் திறந்துவருகிறது.

பல இடங்களில் இது தொடர்பாக பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

சரக்கு மற்றும் சேவை வரி சர்ச்சை

மேலும், மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மிக அதிகமாக இருப்பதாக உணவகங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. திரையுலகும் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துவருகிறது.

ஆனால், மாநில அரசு இந்த விவகாரத்தில் அமைதிகாத்துவருகிறது.

மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தற்போதுள்ள வடிவில் இந்த வரிவிதிப்பை ஏற்க எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

இதற்கிடையில் பல முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இருந்தபோதும் தமிழகம் கோருவதுபோல மத்திய அரசின் வறட்சி நிவாரண உதவி, நீட் தேர்விலிருந்து விலக்கு போன்றவற்றை மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

கல்வித்துறை மட்டும் சுறுசுறுப்பு

விதிவிலக்காக, பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் பல புதிய மாற்றங்களையும் திட்டங்களயும் அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுத்திவருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்று 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், சுமார் 1,600 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார் என்பதையே மாநில அமைச்சர்கள் சாதனையாக குறிப்பிட்டுவருகின்றனர்.

மேலும், பல வருடங்களுக்கு முன்பாகத் துவங்கப்பட்டு தற்போது செயல்பாட்டிற்குவரும் மெட்ரோ ரயில் திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி ஆகியவற்றையும் மாநில அரசு தனது சாதனையாக விளம்பரம் செய்துவருகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :