இணைய வேண்டிய தருணம்: கருணாநிதி பிறந்த நாள் விழாவில் தலைவர்கள் பேச்சு

இணைய வேண்டிய தருணம்: கருணாநிதி பிறந்த நாள் விழாவில் தலைவர்கள் பேச்சு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவையில் வைர விழாவைக் குறிக்கும் வகையில் சென்னையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

கருணாநிதியின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையிலான விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த தி.மு.க. திட்டமிட்டிருந்தது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளின்போது, தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துகளையும் பரிசுப்பொருட்களையும் பெற்றுக்கொள்ளும் கருணாநிதி, உடல் நலமின்றி இருப்பதால் இந்த ஆண்டு தொண்டர்களைச் சந்திக்க மாட்டார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், நள்ளிரவிலிருந்தே தொண்டர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் முன்பாக கூடி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம், அண்ணா அறிவாலயம் ஆகியவை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

தொண்டர்கள் கருணாநிதியை சந்திக்க அனுமதிக்கப்படாத நிலையில், அவரது குடும்பத்தினர் மட்டும் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா: கட்சியினர் உற்சாகம்

கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் அகில இந்திய அளவில் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சுதாகர் ராவ், மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐயின் தேசியச் செயலர் டி. ராஜா, பிஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஓ பிரையன், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா: சென்னையில் கோலாகலம்

இந்திய அளவில் ட்ரெண்டாகும் கருணாநிதியின் பிறந்தநாள்

அதற்கேற்ற வகையில், இந்தக் கூட்டத்தில் பேசிய பல தலைவர்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கடுமையாக முன்வைத்தனர்.

கருணாநிதி குறித்து பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்ட சீதாராம் யெச்சூரி, சவால்களை சமாளிக்கவும் எதிர்கொள்வும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல, இந்தக் கூட்டத்தில் பேசிய ஒமர் அப்துல்லா, பாரதீய ஜனதா குறித்து கடுமையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பேசும்போது, தேர்தல் வாக்குறுதியாக மதுவிலக்கை கருணாநிதி முன்வைத்ததை நினைவுகூர்ந்தார். கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் தேசியத் தலைவர்கள் பங்கேற்றிருப்பது, அவரது பெருமையைச் சுட்டிக்காட்டுவதாகவும் அடுத்த தேர்தலில் தி.மு.க. வென்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும் நிதீஷ் குமார் குறிப்பிட்டார்.

திருணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், மாநில உரிமைகள் குறித்தும் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் குறித்தும் பேசியதோடு, மாநிலக் கட்சிகள் இணைந்து தில்லியில் ஆட்சியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் சில முக்கிய தருணங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கருணாநிதியின் அரசியல் வாழ்வில் சில முக்கிய தருணங்கள்

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் பேசவந்த ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸும் நரேந்திர மோதியும் ஒரே சித்தாந்தத்தின் மூலம் நாட்டை ஆள முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ், தி.மு.க, திருணமூல் போன்ற கட்சிகள் மக்களின் குரலாக ஒலிக்கும் நிலையில், நரேந்திர மோதி, தான் நினைத்ததை முடிவெடுத்து அறிவிப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், கருணாநிதியின் இடத்தை நிரப்புவது கடினமான பணி என்றும் அந்தப் பணியை நிறைவேற்றும் திசையில் ஸ்டாலின் சரியாகவே செல்வதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் பேச்சை மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மொழிபெயர்த்தார்.

இறுதியாகப் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மருத்துவர்கள் அறிவுரையின் காரணமாக கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்கவில்லையென்று குறிப்பிட்டார். பாரதீய ஜனதா கட்சி தனது வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லையென்று குறிப்பிட்ட அவர், மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்றுபடுவோம் என்றும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தைத் தூண்ட வேண்டாமென்றும் குறிப்பிட்டார்.

அரை நூற்றாண்டு திராவிட ஆட்சியில் தமிழகம்

பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், தேசிய அளவில் அக்கட்சிக்கு எதிரான ஒரு முன்னணியைக் கட்டமைக்கும் ஒரு முயற்சியாக இந்தப் பொதுக்கூட்டம் பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததைப் போலவே பலரும் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒன்றாக இணைந்து முடிவெடுப்பது குறித்தோ, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக சந்திப்பது குறித்தோ யாரும் பேசவில்லை.

"பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு முன்னணியை உருவாக்கும் முயற்சியாக இதைக் கருத முடியாது. ஆனால், அப்படி உருவானால் நல்லது" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார்.

தி.மு.க. அப்படிக் கருதியிருந்தால் தேசிய அளவில் இன்னும் பல தலைவர்களை ஒன்றிணைத்திருக்க வேண்டும். மாநில அளவிலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் போன்ற முற்போக்கு சக்திகளை அழைத்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

கருணாநிதியின் பிறந்த நாளன்று நடக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் அவரது கரகரத்த குரலைக் கேட்க முடியாவிட்டாலும் அங்கு பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பல தலைவர்களும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசியபோதிலும் தொண்டர்கள் புரிந்துகொண்டும், கேட்டுத் தெரிந்துகொண்டும் ஆரவாரங்களை எழுப்பினர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, மு.க. ஸ்டாலின் செயல் தலைவராகப் பதவியேற்ற பிறகு அக்கட்சி ஒருங்கிணைத்த மிகப் பெரிய இந்தக் கூட்டம் இதுவாகும். தேசிய அளவிலான ஒரு முன்னணியை ஒருங்கிணைக்கும் திட்டம் தி.மு.கவிற்கு இருந்ததா என்பது தெளிவாக இல்லாத நிலையில், கட்சித் தலைவரின் பிறந்த நாள் என்ற வகையில் இந்தக் கூட்டம் தி.மு.கவைப் பொறுத்தவரையும், மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரையிலும் குறிப்பிடத்தக்க முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துரையை கேட்கும் கருணாநிதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தனது பிறந்தநாள் வாழ்த்துரைகளை கேட்கும் மு.கருணாநிதி

பிற செய்திகள்

வட கொரியா மீதான தடையை விரிவாக்கியது ஐநா பாதுகாப்பவை

தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம்

''யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறும் ஆபத்து''

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்