கருணாநிதியின் வைரவிழா: அழைப்பு சர்ச்சை

  • முரளீதரன் காசி விஸ்வநாதன்
  • செய்தியாளர்

நடந்து முடிந்த கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பேசுவதற்கு அழைக்கப்படாதது ஏன் என விவாதம் எழுந்துள்ளது.

படக்குறிப்பு,

சட்டப்பேரவையின் வடிவில் பிரம்மாண்டமான விழா மேடை

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா நிகழ்வுகள் குறித்து திட்டமிட ஆரம்பித்ததிலிருந்தே இந்த விழாவில் பங்கேற்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்வம்காட்டிவந்தது.

கடந்த மே மாத கடைசி வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் அந்த விழாவில் தங்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லையென்று குறிப்பிட்டார்.

தி.மு.க. நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், கருணாநிதியின் பிறந்த நாளன்றும் அதற்கு அடுத்த நாளும்கூட செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் இதே வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதியன்று மாலையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், இடதுசாரிக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களாக அவர்கள் அழைக்கப்படவில்லை.

படக்குறிப்பு,

விழாவிற்கு வருகைதந்த ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்

அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சி, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இந்த விழாவிற்கான அழைப்பிதழே அளிக்கப்படவில்லை.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் கருணாநிதியின் பிறந்த நாள் கூட்டங்கள் நடைபெறும்போது திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சுப. வீரபாண்டியன், திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வாழ்த்துப் பேசும் வகையில் அந்தக் கூட்டங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டன.

ஆனால், இந்த முறை காதர் மொய்தீனைத் தவிர பிற தலைவர்கள் பங்கேற்பாளர்களாக அழைக்கப்படவில்லை.

தேசிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு

"இந்த விழாவை தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் விழாவாக அவர்கள் வடிவமைத்திருந்தார்கள். ஆகவே எங்களை மேடைக்கு அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். நாங்கள்தான் எப்போதும் பேசுகிறோமே. அதனால், வருத்தம் ஒன்றும் இல்லை" என பிபிசியிடம் கூறினார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லா.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இதை வேறுவிதமாகப் பார்க்கிறது. "எங்களை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரையுமே அழைத்திருக்க வேண்டும். அகில இந்திய தலைவர்களுக்கு முன்பாக தமிழகத் தலைவர்கள் பேசுவது, அந்தத் தலைவர்களுக்குப் பெருமையல்ல, கருணாநிதிக்குத்தான் பெருமை" என்று சுட்டிக்காட்டுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

2007ஆம் ஆண்டில் கருணாநிதியின் சட்டப்பேரவை பொன்விழா நடைபெற்றபோது, தேசியத் தலைவர்கள் கலந்துகொண்டாலும் தமிழகத் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பேசியதைச் சுட்டிக்காட்டுகிறார் ரவிகுமார்.

அப்போது, இந்த விழாவிற்கான அழைப்பிதழ் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவிற்கும் அனுப்பப்பட்டது.

தி.மு.கவைப் பொறுத்தவரை, இந்த விழாவில் எந்த அரசியலும் இல்லை என்கிறது.

"காலம் கருதியே பல தலைவர்கள் அழைக்கப்படவில்லை. முதலமைச்சர் நிதீஷ் குமார் போன்றவர்கள் கூட்டம் முடிந்தவுடன் இரவிலேயே புறப்பட வேண்டியிருந்தது. தவிர தமிழக தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் வாழ்த்திப்பேசலாம். ஆகவேதான் அகில இந்தியத் தலைவர்களை மட்டும் இந்த முறை பேச வைக்க முடிவெடுக்கப்பட்டது" என பிபிசியிடம் தெரிவித்தார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

தமிழக தலைவர்கள் தவிர, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தலைவர்களை அழைத்து, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்திருந்தால், அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க விழாவாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மாறியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இது தொடர்பான பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்