தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 14 ஆம் தேதி கூடுவதாக பேரவை பொறுப்பு செயலர் அறிவித்துள்ளார். மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் அப்போது நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவையை விரைவாக கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கோரி வந்துள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்தோ, ஜி.எஸ்.டி மசோதா தாக்கலாகுமா என்பது போன்ற தகவல்களோ வெளியாகவில்லை.

இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது, ஜி.எஸ்.டி விவகாரம், மாட்டிறைச்சி சர்ச்சை , தமிழக வறட்சி மற்றும் விவசாயிகள் பிரச்சனை, குடிநீர் தட்டுப்பாடு , உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு மசோதா போன்றவை பிரதானமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2017 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம், கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று தொடங்கியது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் தொடங்கிய அந்த கூட்டத்தை தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

பின்னர் 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை குறித்தான விவாதம் அதே மார்ச் மாதம் 20 ஆம் தேதியன்று தொடங்கி, 24 ஆம் தேதியுடன் நிறைவுற்றது.

அந்த கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும் அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுற்றவுடன், மானியக்கோரிக்கை மீதான விவாதங்களை தொடர, சட்டப்பேரவை கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில் அது கால தாமதம் செய்யப்பட்டது.

இதற்காக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டதுடன், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது கூட்டப்படும் சட்டப்பேரவை கூட்டம் ஒரு மாத காலம் வரை நீடிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனேவே இரண்டு அணிகளாக அறிவிக்கப்பட்ட அதிமுக, தற்போது மூன்று அணிகளாக செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்