60 நாட்கள் கால அவகாசம்: பதுங்கி பாய்வாரா தினகரன்?

கவர்னருடன் சந்திப்பு

இன்னும் 60 நாட்களுக்கு ஒதுங்கியிருக்க வி.கே.சசிகலா வழங்கிய அறிவுரையை ஏற்று தாம் காத்திருக்கப்போவதாக டி.டி.வி.தினகரன் இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய டி.டி.வி.தினகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினகரன், தன்னை வழக்கமாக சந்திக்க வரும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினரை சந்திப்பேன் என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

மேலும் கட்சியை பலப்படுத்த அமைச்சர்கள் மேற்கொள்ளும் முயற்சியை தொடர்ந்து கண்காணித்து வருவேன் என்றும், தேவைப்படும் சமயங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர்களை பொறுத்தவரையில், இருக்கும் காலம் வரை பதவியில் இருந்துவிட்டு வீடு திரும்பி விடலாம் என அவர்கள் கருதுவதற்கு வாய்ப்புள்ளது என்றும், தன்னை போன்ற கட்சியின் தொண்டர்களுக்கு கட்சியை காப்பாற்றுவதே நோக்கம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அத்தோடு டில்லியிலிருந்து தான் ஜாமீனில் வெளிவந்த போதிலிருந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சில சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தன்னை கட்சிப்பணியில் தீவிரம் காட்ட கோரினார்கள் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், TWITTER

கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு பிறகும் கட்சியை முழுமையாக ஒன்றிணைக்க தற்போது முயற்சிப்பவர்கள் தவறி விட்டதாகவும் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினார்.

இருந்தபோதும் தற்போது சசிகலாவின் அறிவுரையை ஏற்று மேலும் 60 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்போவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அதே சமயம் தன்னை நீக்கவும், நீங்க கூறவும் கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் கூறிய அவர், சசிகலாவுக்கு பிறகு அந்த அதிகாரம் துணைப் பொதுச்செயலாளருக்கு தான் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்