மூத்த அரசியல்வாதி இரா.செழியன் காலமானார்

இந்தியாவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், திமுகவின் துவக்க கால உறுப்பினரும், அவசரநிலைச் சட்டத்திற்கு எதிராக போராடியவருமான இரா.செழியன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

இரா செழியன்

பட மூலாதாரம், VIT

படக்குறிப்பு,

கண்ணியமிக்க நாடாளுமன்ற உரைகளை ஆற்றியவர்

அவருக்கு வது 94. சமீப காலமாக அவர் உடல் நலம் குன்றியிருந்தார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரரான இரா.செழியன், மாணவ பருவத்தில் திராவிடர் கழக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர்.

பின்னர் திமுகவில் சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டார்.

இரா.செழியன், முதலில் 1962ல் திமுக சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும், பின்னர் 1967ல் கும்பகோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் தனது தெளிவான, கண்ணியமான உரைகளால் அனைத்து தரப்பு உறுப்பினர்களின் மதிப்பைப் பெற்றவர் செழியன்.

பின்னர் 1978-லி்ருந்து, 1984 வரை , ஜனதாக் கட்சியின் சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செழியன் செயல்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1923 ஏப்ரல் 28ம் தேதி பிறந்தவரான இரா செழியன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் பட்டப் படிப்பு படித்தவர்.

1977க்கும் பின்னர் செழியன் ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

இரா.செழியனின் நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு 'பார்லிமென்ட் ஃபார் தி பீப்பில்' [Parliament for the People] என்கிற பெயரில் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.செழியன், கடந்த 2001 ஆம் ஆண்டு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

எனினும் மக்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து போராடுவேன், மனிதநேயத்தோடு நடத்தப்படும் போராட்டங்களில் பங்குபெறுவேன் என தனது ஓய்வு அறிவிப்பின் போது இரா.செழியன் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து வேலூர் தொழில் நுட்பக் கழகத்தில் ( வி.ஐ.டி) கௌரவ பேராசிரியராக பணியாற்றி வந்தார் இரா.செழியன்.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இரா.செழியனுக்கு இந்த ஆண்டு சென்னையிலும் பாராட்டு விழா நடைபெற்றது.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இரா.செழியனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்த போதிலும், அது பலனளிக்காமல் இன்று காலமானார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :