பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Image caption அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்

தமிழக அமைச்சர்களின் அலுவலக அறைகள், அரசாங்க அலுவலக கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில், தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவரின் புகைப்படங்கள் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை ஒதுக்கிவைப்பது என கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட முடிவில் உறுதியாக இருப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று திங்கள்கிழமை மூத்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த மறுதினம் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

'ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறி'

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது குறித்தான கேள்விக்கு பதிலளித்த திமுகவின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கும் போது, இது தவறில்லை என்றார்.

அத்தோடு சட்டப்பேரவை கூடும் வரையிலாவது இந்த ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது விமர்சனம் செய்தார்.

அதிமுகவில் மாறுபாடான கருத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது என்று கூறிய மு.க.ஸ்டாலின், அதிமுகவில் இன்னமும் எத்தனை அணிகள் உருவாகும் என்பது தெரியவில்லை என்றார்.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 9 மாவட்ட அதிமுக (அம்மா) அணி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார்.

தலைமைச் செயலகத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற்றாலும் கூட, இது அரசியல் ஆதரவு தொடர்புடைய கூட்டமாக இருக்கக்கூடும் என்றே பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.

அதேபோல இது போன்ற மாவட்ட வாரியான சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள் இன்னமும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று தலைமைச்செயலக வட்டார தகவல்களும் கூறுகின்றன.

டி.டி.வி.தினகரன் - வி.கே. சசிகலா சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யவும், நீங்க சொல்லி கேட்கவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும், அவருக்கு பிறகு துணை பொதுச் செயலாளருக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது என அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறிய பிறகு இந்த கூட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களுக்கு நீக்கம் செய்ய அதிகாரம் கிடையாது என்றும் அப்போது டி.டி.வி.தினகரன் கடுமையான விமர்சனங்களையும் வெளியிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

முக்கியமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய டி.டி.வி.தினகரன், தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்திருந்தார்.

அதன்படி, இன்னமும் 60 நாட்களுக்கு, தமிழக அமைச்சர்கள் தரப்புக்கு தாம் கால அவகாசம் வழங்கப்போவதாகவும் டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.

அப்போது அவர் கூறிய படி, டி.டி.வி.தினகரன் இன்று காலை முதல் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வருகை தரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும், கட்சியின் எதிர்காலம் குறித்தும் அவர் விவாதித்து வருவதாக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இதுவரை அதிமுக (அம்மா) அணியில் உள்ள 24 சட்டமன்ற உறுப்பினர்கள் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உறுதி செய்துள்ளதாகவும் அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

கத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்

கத்தார் அதன் அண்டை நாடுகளுடன் முரண்பட 4 காரணங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்