டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் தொடரும் ஆதரவு

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறையிலிருந்து வெளிவந்துள்ள நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்துவருவது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image caption டிடிவி தினகரனுடன் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ்

புதன்கிழமையன்று காலையில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனைச் சென்று சந்தித்த நிலையில், அவரைச் சந்தித்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

இருந்தபோதும், இதனால் அ.தி.மு.க. அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளராகப் பதவியேற்ற சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்ற நிலையில், டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு, அவர் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

இந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அறிவித்தனர். ஊடகங்களிடம் பேசிய தினகரனும் தான் கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

மேலும் படிக்க: டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன்

இதற்குப் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஏப்ரல் 22ஆம் தேதி தினகரன் கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பாக பிணையில் விடுவிக்கப்பட்ட தினகரன், தான் கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு பெங்களூர் சென்று சசிகலாவைச் சந்தித்த தினகரன், 60 நாட்கள் கட்சியைக் கண்காணிக்கப்போவதாகத் தெரிவித்தார்.

அவர் பெங்களூர் சென்றபோது அவருடன் அ.தி.மு.கவின் 11 எம்.எல்.ஏக்களும் பெங்களூர் சென்றனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர் அவரது இல்லத்திற்கு வந்தனர்.

ஒட்டுமொத்தமாக நேற்றுவரை 27 பேர் அவரைச் சந்தித்த நிலையில், புதன்கிழமையன்று காலையில் திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ், உசிலம்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ. நீதிபதி, திருத்தணியின் சட்டன்ற உறுப்பினர் நரசிம்மன், மேலூர் தொகுதி உறுப்பினர் பெரியபுள்ளான் ஆகியோர் தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்தனர்.

Image caption தினகரனின் அடையாறு இல்லம்

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டவாரியாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துவருகிறார்.

நேற்று 8 மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த முதலமைச்சர், 10 மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.

இருந்தபோதும், தினகரனை சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பது ஆட்சிக்குப் பாதகமாக அமையாது என அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.

புதன்கிழமையன்று தினகரனச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மானியக் கோரிக்கையின்போது வெட்டுத்தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் அரசை ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க. அரசுக்கு தங்களால் ஆபத்து வராது என அ.தி.மு.கவின் மற்றொரு பிரிவான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோரியபோது, 122 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இவர்கள் தவிர, 12 எம்எல்ஏக்கள் ஓ. பன்னீர்செல்வம் வசம் உள்ளனர்.

இது தொடர்பான பிற செய்திகள்:

60 நாட்கள் கால அவகாசம்: பதுங்கி பாய்வாரா தினகரன்?

டி.டி.வி.தினகரன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்