தொடரும் விவசாயிகள் போராட்டம் – காரணங்கள் என்ன ?

டெல்லியில் 41 நாட்கள் தமிழக விவசாயிகள், விவசாயக்கடன் ரத்து உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து, நூதன முறையில் பல போராட்டங்களை நடத்திய பரபரப்பு ஓரளவு அடங்கியிருக்கும் வேளையில், தற்போது இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் மாநிலமான மஹராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரமாக ஏழு மாவட்ட விவசாயிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், PTI

பாலை தெருக்களில் கொட்டியும், சந்தைகளை மூடியும், சாலைகளில் போராட்டங்களை நடத்தியும், காய்கறி வண்டிகளை தாக்கியும் என தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாயன்று விவசாயிகளுக்கும் போலிஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் தென் இந்தியாவின் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி தங்கள் மிளகாய் செடிகளை கொளுத்தினர்.

விவசாயிகள் தங்கள் விவசாயக் கடன்களை ரத்து செய்ய கோரியும் தங்களின் பயிர்களுக்கு அதிக விலை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பத்து வருடங்களாக கடும் வறட்சி, குறுகி வரும் விவசாய நிலங்கள், குறைந்து வரும் நிலத்தடி நீர் வரத்து, குறைவான உற்பத்தி மற்றும் நவீனமயமாக்கலற்ற செய்முறைகள் ஆகிய காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் விவசாயிகளாக உள்ளனர் ஆனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 15 சதவீதம் தான் விவசாயத்தின் பங்காகும். விவசாய நிலங்களில் அதிகமானோர் வேலை செய்தாலும் உற்பத்தி விகிதம் மிக குறைவாகவே உள்ளது. பயிர் உற்பத்தி பாதிப்பால் அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்

ஆனால் தற்போதைய பிரச்சனை அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ளது.

மஹராஷ்ட்ரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது விவசாயிகள் போராடுவதற்கு காரணம் அதிகப்படியான விளைச்சல். சீரான பருவ மழையால் பயிர்கள் நன்றாக விளைந்துள்ளன. எனவே வெங்காயம், திராட்சை, சோயா பீன்ஸ், சிவப்பு மிளகாய், வெந்தயம் ஆகியவற்றின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில், விவசாயிகளுக்கு அரசாங்கம் அவர்களின் விளைபொருட்களுக்கு வேகமாக பணம் செலுத்தவில்லை

பட மூலாதாரம், Reuters

அதிக விளைச்சல் ஏன் நெருக்கடியை தருகிறது?

சிலர் கடந்த வருடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையே இதற்கு காரணம் என நம்புகின்றனர்.

ஆனால், விவசாயிகள் தங்கள் சொந்தக்காரர்களிடமிருந்தும் சமூக வலைத்தளத்தில் உதவி கோரியும், பூச்சிக்கொல்லி, உரம் மற்றும் வேலையாட்களுக்கான கூலி ஆகியவற்றிற்கான பணத்தை பெற்றதால் அந்த தடை விவசாயிகளை பாதிக்கவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின் கிராமப்புற விவகாரங்கள் மற்றும் விவசாய ஆசிரியரான ஹரிஷ் தாமோதரன் தெரிவிக்கிறார்.

நல்ல மழையால் அதிகப்படியான விளைச்சலை கண்ட போதும் அதை பணம் கொடுத்து வாங்குவதற்கு நல்ல வர்த்தகர்கள் இல்லை என தாமோதரன் தெரிவிக்கிறார்.

ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்பட்ட நிலை, இயல்பு நிலைக்கு மாறிக்கொண்டு வந்தாலும் கிராமங்களில் பிரதானமாக பண வர்த்தனைகளே நடைபெறுவதால், ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் அது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் ஒரு காரணமாக இருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாக தாமோதரன் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய கட்டுரைகள்:

மிகைப்படுத்தப்பட்ட அச்சம்

ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான, மஹராஷ்ட்ராவின் லசான்கன் சந்தையின் முக்கிய வர்த்தகர் ஒருவர், ரூபாய் நோட்டுகளின் தடையால் பயிர்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவது "மிகைப்படுத்தப்படுவதாக" தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters

நல்ல பயிர்கள் நிச்சயமாக உள்ளன சில வர்த்தகர்கள் பணம் கொடுத்தும், செக் கொடுத்தும், இணைய வங்கி வசதியை பயன்படுத்தியும் பயிர்களை வாங்கி கொண்டனர்; நடைபெற்று வரும் போராட்டத்தால் ஆங்காங்கே காய்கறி வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதே இந்த பயிர் தேக்கம் மற்றும் விரயத்திற்கு காரணம் என மனோஜ் குமார் ஜெயின் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் உணவு சேகரிப்பிற்கான போதுமான வசதிகளும், முறைகளும் இல்லாமையே தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகவும் கருதப்படுகிறது

மழை நல்லபடியாக பெய்தால் அது அதிகப்படியான விளைச்சலுக்கும், விலை வீழ்ச்சிக்கும் வித்திடுகிறது.

விளைப் பொருட்களை பயன்பாட்டாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறையில் உள்ள தேக்க நிலையே இதற்கு காரணம் என்றும் இதனால் விவசாயிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று சர்வதேச பொருளதார் தொடர்புகளுக்கான இந்திய கவுன்சிலில் விவசாய நிபுணரக இருக்கும் அஷோக் ஜெயின் தெரிவிக்கிறார்.

எடுத்துக்காட்டாக வெங்காயம், அதில் 85 சதவீதம் நீர் இருப்பதால் நாட்கள் செல்ல செல்ல அது வற்றி போய் எடை குறைந்துவிடும்.

லசான்கனில் வர்த்தகர்கள் விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை வாங்கி அதை பாலித்தீன் கூரை கொண்ட இடத்தில் சேமித்து வைப்பர்; வானிலை சரியாக இருந்தால் 3-5 சதவீத விளைபொருள் வீணாகும் ஆனால் வெயில் அதிகமாக இருந்தால் வெங்காயத்தில் உள்ள நீர் குறைந்து அது எடை குறைந்துவிடும் மேலும் 25-30 சதவீதம் வெங்காயம் வீணாகும்.

நவீன முறையில், வெங்காயம் 4டிகிரி செல்ஷியஸ் உள்ள ஒரு மரப்பெட்டியில் சேமித்து வைக்கப்படும் எனவே அதில் 5 சதவீதத்திற்கும் குறைவான வெங்காயங்கள் வீணாகும். இதற்கான செலவு ஒவ்வொரு மாதமும், ஒரு கிலோ வெங்காயத்திற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவு.

சில்லைறை சந்தையை விளைபொருட்கள் அடைந்தவுடன் அது வாடிக்கையாளர்களை சென்றடைய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு மானியங்களும் வழங்கலாம்.

படக்குறிப்பு,

டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்

எனவே இந்த சேகரிப்பு முறையில் வாடிக்கையாளர்கள், விவசாயிகள், பொருட்களை சேமித்து வைப்பவர்கள் என அனைவரும் பயனடைய வேண்டும் ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் அந்த வசதிகள் இல்லை என டாக்டர் குலாட்டி தெரிவிக்கிறார்.

மோசமான சேமிப்பு வசதி

முதலில், போதுமான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் இந்தியாவில் இல்லை.

உத்தரப்பிரதேசத்தில் உருளைக்கிழங்கை மட்டுமே பெரும்பாலும் சேமிக்கும் குளிர்பதனக் கிடங்குகள் சுமார் 7,000 இருக்கின்றன. இதன் விளைவாக, பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் துரிதமாக வீணாகின்றன. இந்தியா உணவுப் பொருட்களை திறனுடன் சேமிக்கவில்லை என்றால், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டிய அதிக பயிர் விளைச்சலே, அவர்களுக்கு சாபக்கேடாக மாறும்.

இரண்டாவதாக, பயிர்கள் அழிந்து போகும் அல்லது வீணாகிவிடாது என்பதை உறுதிப்படுத்த போதுமான பதப்படுத்தும் வசதிகள் இல்லை.

உதாரணமாக வெங்காயத்தையே எடுத்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தில் இருந்து அதன் நீர்த்தன்மையை நீக்கி, பதப்படுத்துவது, அதன் விலைகளில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான ஒரு வழி. பதப்படுத்தப்பட்ட வெங்காயத்தை பரவலாக கிடைக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தற்போது, இந்தியாவின் 5% க்கும் குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளே பதப்படுத்தப்படுகின்றன.

மூன்றாவதாக, இந்திய விவசாயிகள், கடந்த ஆண்டு அதிக லாபமீட்டிய பயிர்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டு சாகுபடியை திட்டமிடுகிறார்கள்.

சென்ற ஆண்டு ஒரு பயிர் நல்ல விலைக்கு விற்றிருந்தால், இந்த ஆண்டும் அதே நிலை தொடரும் என்ற நம்பிக்கையில் அதே பயிரை அதிக அளவு சாகுபடி செய்கிறார்கள்.

மழை நன்றாக இருந்தால், பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். அது, விலை அசாதாரண வீழ்ச்சியடைய வழிவகுக்கும். இதனால் விலை அதிகரிக்கட்டும் என்று விற்பனை செய்யாமல் விவசாயிகள் காத்திருந்தால், பொருட்கள் வீணாகலாம், விற்பனை மந்தமடையலாம்.

"ஒப்பந்த விவசாயத்தின் மூலம் எதிர்கால விலைகளை நிர்ணயிக்கவேண்டும், கடந்த ஆண்டு விலைகளை அடிப்படையாகக் கொண்டல்ல," என்று டாக்டர் குலாடி கூறுகிறார்.

தீவிர நடவடிக்கைகள்

இந்தியாவின் விவசாய கொள்கைகளுக்கு ஒரு தீவிர மாற்றீடு தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவின் 'பயிர்க் களஞ்சியம்' ஆன பஞ்சாப் மாநிலம் ஒரு சரியான உதாரணம்.

உணவுப் பற்றாக்குறையால் இந்தியா பாதிக்காத நேரத்தில், பயிரிடப்பட்ட விளைநிலங்களில் 80 சதவீதத்தில் அதிக நீர் தேவைப்படும், கோதுமை மற்றும் நெல் போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவை நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

தானியங்கள் உற்பத்தி அதிகரித்து வருவதால், அரசு, சொற்ப விலையில் அரிசி மற்றும் கோதுமை கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளின் லாபம் குறைகிறது.

"அரசின் கொள்கைகள், விவசாயிகளின் தெரிவுகளை சிதைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் விலையுயர்ந்துவரும் காய்கறிகளைப் பயிரிடுவதற்கு பதிலாக , நமக்கு வேண்டாத கோதுமையையே விவசாயிகள் மீண்டும் பயிரிடுகிறார்கள்" என்கிறார் மிஹிர் ஷர்மா. இவர் ரீஸ்டார்ட், த லாஸ்ட் சான்ஸ் ஆஃப் இந்தியன் எகானமி என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

ஆனால் பயிர் கொள்முதல் விலைகளை விரைவாக உயர்த்தி, விவசாயிகளின் துன்பத்தைத் தணிக்கவேண்டியது தான் அரசின் கடமை, தற்போதைய தேவை.

உள்நாட்டில் பயிர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில் உத்திரபிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சியின் அரசு, புத்திசாலித்தனமாக செயல்பட்டு, உருளைக்கிழங்கு கொள்முதல் விலையை உயர்த்தியது; சர்ச்சைக்குள்ளானாலும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்து, விவசாயிகளின் கொதிப்பை அடக்கியது.

அதே கட்சி ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது அது உபரி வெங்காயங்களை வாங்குவதற்கு அதிகமான பணம் கொடுப்பதாக கூறுகிறது. நிறைய விஷயங்கள் மாறினாலும், நிலைமை பெரிதாக மாறவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்