இந்தியா: எருமை இறைச்சி ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு

இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 11 சதவிகிதம் குறைந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

எருமை

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத ஏற்றுமதியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 11 சதவிகிதம் குறைந்துள்ளது.

உலகில் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்ந்தாலும், அண்மை மாதங்களில், சட்டத்துக்கு புறம்பான மாட்டிறைச்சிக் கூடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் தாக்கம் ஏற்றுமதியில் எதிரொலிக்கிறது.

இந்தியா ஆண்டுதோறும் 4.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மிகப் பெரிய தாக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம் தான், மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அங்கு அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிக அதிக தொகுதிகளை வென்று ஆட்சியமைத்த பாரதீய ஜனதா கட்சி சட்டத்துக்கு புறம்பான மாட்டிறைச்சிக் கூடங்களை மூடியது.

"இந்தியா சர்வதேச அளவில் மாட்டிறைச்சித் தொழிலில் பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்ந்தாலும், இழந்த இடத்தை மீண்டும் பெறுவது சாத்தியமானதுதான்" என்று அகில இந்திய மாமிசம் மற்றும் கால்நடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்

கால்நடை சந்தைகளில், இறைச்சிக் கூடங்களுக்குக் கால்நடைகளை விற்பனை செய்வதற்கு, பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தடைவிதித்தது.

தொடர்புடைய கட்டுரைகள்:

தற்போதைய தேவை என்ன?

இந்தத் தடையை நீக்கவேண்டும் என்று அகில இந்திய மாமிசம் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

"எங்கள் அனைவரின் தொழிலிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் இருந்தும் புதிய ஆர்டர்கள் வரவில்லை, தேவையான அளவு சரக்கு கிடைக்குமா என்பது நிச்சயமாக தெரியாததால் கிடைக்கும் ஆர்டர்களை எடுப்பதிலும் தயக்கம் இருக்கிறது" என்று ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் டி.வி. சபர்வால் கூறுகிறார்.

மாடுகளை கொடுமைப்படுத்துவதை தடுப்பதற்காக, இறைச்சிக்கூடங்கள் மீதான சோதனைகளையும், கட்டுப்பாடுகளையும் அதிகாரிகள் கடுமையாக்கிவிட்டனர். அதன் தாக்கம் தொழிலில் எதிரொலிக்கிறது.

இந்தியாவில் பெரும்பான்மையான இந்துக்கள் மாட்டை வணங்குகின்றனர். சில இடங்களில் பசுவைக் கொல்வது பாவச்செயலாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருந்து பசு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

அரசின் கடுமையான கொள்கைகள் மாட்டிறைச்சி ஏற்றுமதியையும் வணிகத்தையும் பாதிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பசுவதையை தப்பதாக, பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்