தமிழக கல்வித் துறையில் தேவை சீர்திருத்தங்களா? அடிப்படை மாற்றங்களா?

  • 9 ஜூன் 2017

தமிழக கல்வித் துறையில் கடந்த சில மாதங்களாக புதிய சீர்திருத்தங்கள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது மேலும் பல அறிவிப்புகளை வெளியிடப்போவதாக மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிச்சாமி புதிய முதலமைச்சராகப் பதவியேற்றபோது செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

உடனடியாக, பள்ளிக் கல்வித் துறையின் செயலராக இருந்த சபீதா மாற்றப்பட்டு, புதிய செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டார்.

புதிய அறிவிப்புகள்

இதற்குப் பிறகு சில நாட்களில், பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

முதலாவதாக, தமிழக அரசுப் பள்ளிக்கூடங்களில் பல ஆண்டுகளாக 11ஆம் வகுப்பு சேர்க்கையின்போது கடைப்பிடிக்கப்படாமல் இருந்த இடஒதுக்கீடு முறையை கண்டிப்பாக, சரியாக கடைப்பிடிக்க வேண்டுமென்ற சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, நடைமுறைப் படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்:

ஆராய்ச்சி மாணவர்களை `பந்தாடுவது' ஏன் ?

மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு

அதன் பிறகு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர்களை அறிவிப்பது ரத்து செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரசு அறிவித்தது.

பின்பு, பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிக்கூடங்கள், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தங்கள் பள்ளிக்கூட மாணவர்கள் முதலிடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக, பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களையே நடத்திவந்தன.

இதனைத் தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டது.

படத்தின் காப்புரிமை PA

2010 - 12 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதுவதால், ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க, 200 மதிப்பெண்களுக்குப் பதிலாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதுமென அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருந்த நிலையில், இந்தப் பாடத்திட்டங்களை படிப்படியாக மாற்றுவதற்கான அறிவிப்பையும் அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கான கலந்தாலோசனை மிக வெளிப்படையாக நடத்தப்பட்டு வருவதும் ஆசிரியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தேவை சீர்திருத்தங்களா? அடிப்படை மாற்றங்களா?

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த சீர்திருத்தங்களை பெரிதும் வரவேற்கிறார் முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான வசந்தி தேவி.

"பள்ளிக்கல்வித் துறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றன. இது ஒரு துவக்கம்தான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் செயலரும் சொல்வது பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்க வேண்டும் என்பதுதான் இலக்கு என பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் குறிப்பிடுகிறார். அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டால் நீண்ட காலமாக பள்ளிக் கல்வித் துறையின் பிரச்சனை குறித்து பேசிவருபவர்களுக்கு திருப்தியாக இருக்கும்" என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், ஆசிரியர்களை அழைத்து பாடத்திட்டம், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனைகளைக் கேட்டிருப்பது ரொம்பவுமே குறிப்பிடத்தக்க விஷயம் என்கிறார் வசந்திதேவி.

இது தவிர, பல கல்வியாளர்களிடம் அரசு தொடர்ந்து செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பேசிவருகிறது. இது நிச்சயம் பலனளிக்கும் என்கிறார் அவர்.

தமிழக கல்வித் துறையில் தற்போது செய்யப்பட்டுவரும் மாற்றங்கள், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்விக்குப் பிந்தைய மிகப் பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்:

கல்வி ஆயுதத்தை கையில் எடுக்கும் ஆப்கானிய சிறுமி

சிறு வயதிலேயே கணினிக் கல்வி

"ஆனால், திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கல்வி முறையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தின. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள், சீர்திருத்தங்களாகவே தென்படுகின்றன" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.

"பள்ளிக்கூட மாணவர்களின் பெரும் அச்சமாக இருப்பது தேர்வுகள்தான். அந்தத் தேர்வு முறையில் மாற்றத்தைக் கொண்டுவராமல் நிஜமான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது" என்கிறார் ரவிக்குமார்.

கல்வித் துறையில் மாற்றங்களை எதிர்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான இலக்குகள் இருக்கின்றன. சிலர், தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதை மாற்றமாக கருதுகிறார்கள். சிலர் குடிமைத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்வதை மாற்றமாகக் கருதுகிறார்கள். ஆனால், மாற்றங்கள் என்பவை மாணவர்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP/Getty Images)
Image caption பள்ளிக்கூடத்தில் தீவிபத்து தடுப்பு ஒத்திகையை பார்வையிடும் பள்ளி மாணவிகள்

பள்ளிக் கட்டமைப்பு மேம்பாடு

ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது என்கிறார் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. "தற்போது செய்யப்பட்டிருக்கும் அறிவிப்புகள், எதுவுமே மாநில அரசிற்கு நிதிச் சுமையை ஏற்படுத்துபவை அல்ல. பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற விஷயங்களிலும் மாநில அரசு தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்" என்கிறார் அவர்.

மேலும் பள்ளிக்கூட ஆசிரியர்களை, கற்பித்தல் தவிர்த்த பிற பணிகள் எதற்கும் பயன்படுத்தக்கூடாது. அதேபோல, குழந்தைகளுக்கு நெருக்கமாக பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும். சந்தையை நோக்கிய பாடத்திட்டம் கூடாது என்கிறார் கஜேந்திரபாபு.

தொடர்புடைய செய்திகள்:

பள்ளிகளுக்கு வரும் பெண்கள் அணியும் ஆடை சர்ச்சை: இலங்கை கல்வி அமைச்சு சுற்றிக்கை

'தினம் ஒரு அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் கல்வித்துறை உயருமா?'

இதற்கிடையில், மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான "நீட்" தேர்வை மத்திய அரசு நடத்திவருகிறது.

இதனை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது.

ஆகவே, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறத்தக்க வகையில் கல்விமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் பெற்றோரிடம் எழுந்து வருகின்றன.

ஆனால், "பல லட்சம் மாணவர்களில், சிலர் மட்டும் நீட் தேர்வை எழுதுகிறார்கள். அவர்களுக்காக, எல்லா மாணவர்களுக்கும் கடினமான பாடத் திட்டத்தை வகுக்கக்கூடாது" என்கிறார் கஜேந்திரபாபு.

சமச்சீர் கல்வியும், சிபிஎஸ்முறையும்

சமச்சீர் கல்வி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களும் அந்தக் கல்வி முறையின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதனால், பல மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் சிபிஎஸ்இ முறைக்கு மாறின. இது மிகப் பெரிய பிரச்சனையாக மாறிவருகிறது; அரசு அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் ரவிக்குமார்.

இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடத்துவதற்கான அனுபவம் இருப்பதில்லை. மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி இந்தி கட்டாயமாக கற்றுத்தரப்படுகிறது. இது பிற்காலத்தில் அரசியல் பிரச்சனையாக உருவெடுக்கலாம். புதிதாக சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை அரசு சிறிது காலத்திற்கு நிறுத்திவைக்க வேண்டும் என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, இந்த மாற்றங்களின் பலன் தெரிந்த பிறகுதான் இதைப் பற்றி பேச முடியும் என்கிறார்.

"அந்த அறிவிப்புகள் எல்லாம் செயல்பாட்டுக்குவந்து, வகுப்பறையில் எவ்வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதுதான் முக்கியம்" என்கிறார் அவர்.

சிபிஎஸ்இயைப் பார்த்து பல மாற்றங்களைக் கொண்டுவருவதுபோலத் தெரிகிறது. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகள் நகர்ப்புறங்களில் மட்டுமே இயங்குகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகள் மலைப் பகுதிகள், வனப் பகுதிகள் என பல்வேறுவிதமான பகுதிகளில், வெவ்வேறுவிதமான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றன. அவற்றை மனதில் வைத்து இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்கிறார் அவர்.

தவிர, பல அறிவிப்புகளை வேகவேகமாக வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். கல்வித் துறையில் மாற்றங்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறார் தங்கம் தென்னரசு.

"தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இரண்டு விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, மேல்தட்டுப் பார்வையில், தமிழகத்தில் உள்ள பாடத்திட்டம் மிக எளிமையானது, மேலோட்டமானது என்ற கருத்து மேல்வர்க்கத்தினரால் முன்வைக்கப்படுகிறது. மற்றொரு பக்கம், இந்த விமர்சனங்களுக்கு அஞ்சி, அரசு தேவையே இல்லாத கடுமையுடன் குழந்தைகளுக்குச் சுமை மிகுந்த பாடத்திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தப் பார்க்கிறது" என்கிறார் குழந்தைகளுக்காகச் செயல்படும் தோழமை அமைப்பின் தேவநேயன்.

ஆனால், தற்போது, பணி நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றில் மிக வெளிப்படையாக இயங்குவது மிக மிக குறிப்பிடத்தக்கது என்கிறார் தேவநேயன்.

தமிழ்நாட்டில், ஆரம்பக் கல்வியில் மாணவர்களைச் சேர்ப்பது 100 சதவீதம் இருந்தாலும், கல்வியின் தரம் மிக மோசமாக இருப்பதாக பிரதம் போன்ற அமைப்புகளின் வருடாந்திர அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

தற்போது தமிழகத்தில் 34 சதவீத குழந்தைகள் தனியார் பள்ளிக்கூடங்களிலும் மீதமிருக்கும் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடங்களிலும் சேர்க்கப்படுகின்றன. கடந்த 2016-17ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24, 129 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பிற செய்திகள்

பிரிட்டனின் ஜனநாயகத் திருவிழா: வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு வைக்காதவர்களின் நாள் எப்படிச் செல்கிறது?

இந்தியா: எருமை இறைச்சி ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு

மூதூர் மாணவிகள் பாலியல் வன்முறை: தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்