மஹாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் ரத்து: போராட்டம் வாபஸ்

  • 12 ஜூன் 2017

மஹாராஷ்டிராவில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக மாநில அரசு உறுதியளித்துள்ளதால், விவசாயிகள் தங்களின் போராட்டங்களை தற்காலிகமாக திரும்பப்பெற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை PRESS TRUST OF INDIA
Image caption மஹாராஷ்ராவில் காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை வேண்டியும், கடன்களை ரத்து செய்யக் கோரியும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இருப்பினும் இந்த அறிவிப்பு நாட்டின் நிதிநிலைமையை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மாதிரியான போராட்டம் மத்திய பிரதேசத்திலும் நடைபெற்று வருகிறது; அங்கு போராட்டத்தின்போது போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

முன்னதாக மாநிலத்தின் நிதி நிலை நெருக்கடியில் இருப்பதாக கூறி, விவசாயிகளின் கடன்களை முழுவதுமாக திரும்பப் பெற மறுத்திருந்தார் மஹாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ்.

ஆனால் ஞாயிறன்று அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக "கொள்கை அளவில்" ஒப்புக் கொண்டார்; மேலும் சில குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து தீர்மானிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே விவசாயிகள், தங்களின் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிடுவதாக தெரிவித்தனர்.

"நாங்கள் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி கொள்ள முடிவு செய்துள்ளோம். ஜுலை 25ஆம் தேதிக்குள் திருப்தியான முடிவு எடுக்கப்படவில்லை என்றால் எங்களின் போராட்டம் மீண்டும் தொடரும்" என விவசாய தலைவர் ராஜு ஷெட்டி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ம.பியில் தொடரும் பதற்றம்

இருப்பினும் மத்தியப் பிரதேசத்தில், அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே பதற்ற நிலை தொடர்கிறது.

அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளஹான் விவசாயிகளின் கடன்களை திரும்ப பெறுவது குறித்து கருத்தில் கொள்வதாக உறுதியளித்தார். இருப்பினும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

"விவசாயிகள் கடனிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு முறை கடனை ரத்து செய்வது மட்டும் போதாது; விவசாயிகள் கடனாளியாவதை தடுக்க அவர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் விவசாய கொள்கையில் தீவிர மாற்றங்கள் வர வேண்டும்" என போராட்டக் குழுவின் தலைவர் என்.டி.டிவி வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் தங்களின் கடன்களை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் இக்கோரிக்கையை பிரதானமாக முன் வைத்து டெல்லியிலும் சமீபத்தில் சென்னையிலும் போராட்டங்களை நடத்தினர்.

உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்கனவே விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

தொடரும் விவசாயிகள் போராட்டம் – காரணங்கள் என்ன ?

சென்னையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

இந்திய விவசாயிகளும், கடனும்

விடியலுக்காக காத்திருந்து விடைபெற்ற விவசாயிகள் - ஜந்தர் மந்தர் காட்சிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்