நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூன் 12) இடைக்காலத் தடை விதித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சர்ச்சைக்குரிய நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி

இதையடுத்து அந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு அமைப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் ஜூன் 26 அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த மே 24-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை (ஜூன் 12) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. பந்த், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் நடைமுறைகளை சிபிஎஸ்இ தொடங்கலாம்" என்று குறிப்பிட்டனர்.

 அதேசமயம், "தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு (கவுன்சிலிங்), சேர்க்கை நடைமுறை ஆகியவை உச்ச நீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுக்கு உட்பட்டு தற்போதைய உத்தரவு  பிறப்பிக்கப்படுகிறது" என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். "நீட்" தேர்வு விவகாரம் தொடர்பாக மற்ற மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் எந்த வழக்கையும் விசாரணைக்கு ஏற்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்" என்று உத்தரவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீட் தேர்வெழுதிய மாணவர்கள் (கோப்புப் படம்)

வெவ்வேறு வினாத்தாள்கள் இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர "நீட்" தேர்வுமுறை கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, 2017-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான  "நீட்" தேர்வை கடந்த மே 7-ம்தேதி ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 11.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருந்த வினாக்களும் தமிழ் உள்ளிட்ட பிற மாநிலமொழிகளில் இடம்பெற்ற வினாக்களும் வேறு, வேறாக இருந்தன.

இதனால் இந்தத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறி மாணவர்களில் ஒரு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நீட்" தேர்வு முடிவுகளை ஜூன் 8-ம் தேதி வெளியிட இடைக்காலத்தடை விதித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. 

தொடர்புடைய செய்திகள்:

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு: சர்ச்சை தொடர்கிறது

உள்ளாடைக்கும் அனுமதி மறுப்பு? நீட் தேர்வில் கிளம்பிய சர்ச்சை!

பிபிசியின் பிற செய்திகள்:

இனி சசிகலா அணியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: பன்னீர் செல்வம்

ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்