ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்- ஓய்ந்ததா சர்ச்சை?

சர்ச்சைக்குரிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் இன்றுடன் பதவி ஓய்வு பெற்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பதவி ஓய்வு பெறுகிறார் கர்ணன் - ஓய்வு பெறுகிறதா அவரை சூழ்ந்த சர்ச்சை?

அவர் மீது சுமத்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு இன்னும் மேற்கு வங்கப் போலிசாரால் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் கர்ணன் விவகாரம் குறித்து எழும் சில கேள்விகளும் பதில்களும் :

( வழங்குபவர் டில்லி சட்டவிவகாரச் செய்தியாளர் ஜே.வெங்கடேசன்)

1. நீதிபதி கர்ணன் மீதான சிறைத்தண்டனை என்ன ஆகும் ?

அவருக்கு எதிரான தீர்ப்பும் , அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், போலிசாரால் நிறைவேற்றப்படும்வரையோ அல்லது உச்சநீதிமன்றத்தால் திருத்தப்படும்வரையோ, தொடர்ந்து நிலுவையில் இருக்கும்.

இதற்கிடையே, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயிடம், தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இடை நிறுத்துமாறு கோரி நீதிபதி கர்ணன் சமர்ப்பித்த கருணை மனு, சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் முடிவு பொதுவாக அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். இந்திய அரசு இந்த கருணை மனு விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே இதுவரை, இந்த விஷயத்தில் நீதிபதி கர்ணனுக்கு ஏதும் நிவாரணம் இல்லை.

2.இந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து தண்டனையிலிருந்து தப்ப, நீதிபதி கர்ணனுக்கு ஏதேனும் சட்டரீதியான மாற்றுவழிகள் உண்டா ?

மே மாதம் 9ம் தேதி, நீதிபதி கர்ணனை நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்தவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அந்த உத்தரவைப் பிறப்பித்த 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், நீதிபதி கர்ணன் எந்த அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதை விளக்கும் தீர்ப்புரை ஒன்றைத் தரப்போவதாக தெளிவாகவே கூறியது.

ஆனால் இந்த விளக்கமான தீர்ப்பு இன்னும் அந்த 7 நீதிபதிகளால் தரப்படவில்லை.

அந்த 7 நீதிபதிகளில் ஒருவரான, நீதிபதி பினாகி சந்திரபோஸ், மே 27ம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு விளக்கமான தீர்ப்பை அளிக்கவேண்டுமென்றால், இந்த பெஞ்ச் மீண்டும் உருவாக்கப்படவேண்டும் , இந்த விவகாரமே மீண்டும் விசாரிக்கப்படவேண்டும் என்ற சிலர் கருதுகிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், அந்த தண்டனையை இடைநிறுத்தி வைக்கக் கோரி நீதிபதி கர்ணன் போட்ட ரிட் மனுவை, உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒரு ரிட் மனு போட முடியாது என்று அது கூறிவிட்டது. எனவே உச்சநீதிமன்றத்திடமிருந்து நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்காது. குடியரசுத் தலைவர் மட்டும்தான் அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ் தலையிட முடியும்.

அந்தப் பிரிவு, எந்த ஒரு அதிகார அமைப்பு பிறப்பித்த எந்த ஒரு உத்தரவையும் இடைநிறுத்தவோ அல்லது எந்த ஒரு நீதிமன்றம் விதித்த எந்த ஒரு தண்டனையையும் குறைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரங்களை வழங்குகிறது.

ஆனால், புதிரான கேள்வி என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் அந்தத் தண்டனையில் ஒரு சிறு பகுதியையாவது அனுபவிக்காத நிலையில், தண்டனையை இடை நிறுத்தக் கோர முடியுமா என்பதுதான்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உச்ச நீதிமன்றம்

3.நீதிபதி கர்ணன் ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளுடன் சாதாரணமாக ஓய்வு பெற முடியுமா ?

ஜூன் 12ம் தேதி ஓய்வு பெறும், நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தப்ப தலைமறைவாக உள்ள நிலையில், ஓய்வு பெற்றவராகவே கருதப்படுகிறார்.

பணிக்கொடை சட்ட்த்தின்படி ( Gratuity Act) ஓய்வு பெறும் ஒரு அரசு அலுவலருக்கு அவர் ஓய்வு பெறும் நாளன்று இந்த பணிக்கொடை வழங்கப்படவேண்டும்.

அவருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் ஏதும் நிலுவையில் இருந்தால், இந்த விசாரணை நிலுவையில் இருக்கும்வரை, அவரது ஓய்வூதிய சலுகைகளை நிறுத்திவைக்க, ஒரு அதிகாரம் பெற்ற அதிகாரியால் (இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவரால்) உத்தரவு தனியாகப் பிறப்பிக்கப்படவேண்டும்.

அந்த மாதிரியான உத்தரவு ஏதும் இல்லாத நிலையில், நீதிபதி கர்ணன் அவருக்கு அளிக்கப்படவேண்டிய ஓய்வூதியப் பலன்களைப் பெற உரிமையுள்ளவர். ஆனால் இப்போதைய நிலையில், இது குறித்த தெளிவற்ற நிலையே இருக்கிறது. ஏனென்றால், உச்சநீதிமன்றம் இன்னும் விளக்கமான தீர்ப்பைப் பிறப்பிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஓய்வு பெறுகிறதா சர்ச்சை ?

4.உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுகளின் நிலை என்ன ?

நீதிபதி கர்ணன் கல்கத்தாவில் அவரது இல்லத்திலிருந்து பிறப்பித்த உத்தரவுகளுக்கு எந்த வித சக்தியும் இல்லை.

மே மாதம் முதல் தேதி, நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்ட பிப்ரவரி 8ம் தேதிக்குப் பின் நீதிபதி கர்ணன் பிறப்பித்த எல்லா உத்தரவுகளுக்கும் தடை விதித்து, உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எட்டு பேர் , நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என்று இந்திய விமானநிலைய நிர்வாக அமைப்புக்கு நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு உட்பட அவரது எந்த உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறைவேற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

5.ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும் நிலையில் அவரது அதிகாரங்களை இவ்வாறு பறிக்க முடியுமா ?

ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின், நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணி சார்ந்த அதிகாரங்களை உச்சநீதிமன்ற உத்தரவு ஒன்றின் மூலம் பறித்துவிட முடியுமா என்பது குறித்து சட்டத்தில் தெளிவில்லை.

நீதிபதிகள் விசாரணை சட்டம்,1968ன் கீழ் , மூன்று நீதிபதிகள் அடங்கிய ஒரு விசாரிக்கவேண்டும், குற்றச்சாட்டுகள் வரையறுக்கப்படவேண்டும், குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி தனது தரப்பை சொல்ல வாய்ப்பு தரப்படவேண்டும் என்று கூறுகிறது.

அவர் குற்றவாளியென முடிவு செய்யப்பட்டால், அந்த அறிக்கை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, அதை உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும். இதையடுத்து, அந்த நீதிபதியை நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டிப் பதவி நீக்கம் செய்யும் வழிமுறை ( இம்பீச்மெண்ட்) ஒரு தீர்மானம் மூலம் கொண்டுவரப்படவேண்டும். நீதிபதி கர்ணன் விஷயத்தில், உச்சநீதிமன்றம் இந்த நீதிபதிகள் விசாரணை சட்டத்தின் ஷரத்துக்களை பின்பற்றவில்லை. நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மாட்சிமையையும் காக்க அரசியல் சட்டத்தின் 129வது பிரிவின் கீழ் நீதிமன்ற அவமதிப்பு குறித்து தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியிருக்கிறது என்று தோன்றுகிறது.

6. நீதிபதி கர்ணன் தனது தரப்பு வாதமாக எதை முன்வைக்கிறார்?

நீதிபதி கர்ணனைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றம், பிப்ரவரி 8ம் தேதி, அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டிஸ் அனுப்பியபோதே, அவரது தரப்பைக் கேட்காமலே, அவரை குற்றவாளியென முடிவு செய்து, அவர் நீதித்துறை சார்ந்த வேலையை செய்யக்கூடாதென உத்தரவு பிறப்பித்து தண்டனையை தந்துவிட்ட்து.

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டால், குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, அவமதிப்பு செய்தவராகக் கருதப்படுபவர் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அவருக்கு வாய்ப்பு தரப்படவேண்டும்

இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் எதுவும் பதியப்படவில்லை, விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை ஆனாலும், அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் செய்தவராகக் கருதப்படுகிறார்.

தான் எந்த காரணங்களால் தண்டிக்கப்பட்டார் என்பதை நீதிபதி கர்ணன் தெரிந்துகொள்ள விரும்புகிறார். ஆனால், அதற்கு இன்னும் உச்சநீதிமன்றம் பதிலளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்:

எங்கே இருக்கிறார் நீதிபதி கர்ணன்?

நீதிபதி கர்ணன் - ஏன் இத்தனை சர்ச்சைகள்?

சிறை தண்டனையை திரும்பப் பெற கோரி நீதிபதி கர்ணன் மனு

சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரும் நீதிபதி கர்ணனின் மனு நிராகரிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்