“ரயில் பெட்டியின் தரையில் படுத்துறங்கினேன்” - இந்திய தடகள மாற்றுத்திறனாளி குமுறல்

  • 13 ஜூன் 2017

இந்திய ரயில்களில் மாற்றுத்திறானிகளுக்கான மோசமான உள்கட்டுமான வசதியை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை சுவர்ன ராஜ் விமர்சித்துள்ளார்.

ரயிலில் பயணம் செய்தபோது, அந்த ரயில் பெட்டியின் தரையில் படுத்துறங்க கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அவருக்கு மேல் படுக்கை வழங்கப்பட்டிருந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் ஒருவர், மேல் படுக்கைக்கு ஏறிசெல்வது முடியாதது. என்னுடன் பயணித்தவர்கள் ரயில் படுக்கைகளை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டனர்" என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றிய விசாரணைக்கு அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால், இந்த பிரச்சனைக்கு கொடுக்கப்படும் "வழக்கமான பதில் தேவையில்லை",."நிரந்தரமான தீர்வுகளே" வேண்டும் என்று சுவர்ன ராஜ் கூறுகிறார்.

இந்த சம்பவம் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவின் மேற்கிலுள்ள நாக்பூர் நகரத்தில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு சுவர்ன ராஜ் பயணம் செய்தார். இந்த பயணத்திற்கு 12 மணிநேரம் எடுத்தது.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak/Getty Images

இவருடைய இந்த ரயில் பயண அனுபவம் தேசிய ஊடகங்களில் வெளிவந்த பிறகு, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள சுவர்ன ராஜ், இது மட்டும் போதாது என்று தெரிவித்திருக்கிறார்.

"என்னுடன் ஒருமுறை பயணம் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் பிரபுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கின்ற பிரச்சனைகளின் உண்மையான அளவை அவர் உணர்வார்" என்று அவர் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தங்குதடையின்றி பயணம் செய்வதற்கான வசதிகள் இந்தியாவின் பல ரயில் நிலைய மேடைகளிலும், ரயில்களிலும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"ரயில் பெட்டியின் தரையில் படுக்க வைத்தது என்பதோ அல்லது 12 மணிநேரம் பயணத்தில் மாற்றித்திறனாளிகளுக்கு உகந்த கழிவறை வசதிகள் இல்லை என்பதோ என்னை பற்றிய பிரச்சனையல்ல. அன்றாடம் என்னை போன்ற ஆயிரக்கணக்கான பயணியர் இத்தகைய பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்கிறார் சுவர்ன ராஜ்.

படத்தின் காப்புரிமை CHANDAN KHANNA/AFP/Getty Images

கீழ்மட்டத்தில் படுக்கை பெற்றிருந்த அவருடன் பயணம் மேற்கொண்டோர் யாரும் தன்னுடன் அதனை மாற்றிக்கொள்ள மறுத்ததில் எமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வழக்கமாக மக்கள் பரிதாபப்பட்டு, தங்களுடைய இருக்கைகளை மாற்றிக்கொள்ள சம்மதிப்பர். ஆனால், இந்த முறை மறுத்துவிட்டனர். எதனால் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்" என்று அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

"மாற்றுத்திறனாளிகள் யாருடைய பரிதாபத்தையும் எதிர்பார்ப்பதில்லை", என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

"நாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவதையே விரும்புகிறோம். உலக நாடுகள் பலவற்றில் நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். எந்தவொரு பாகுபாட்டையும் உணரவில்லை" என்கிறார் அவர்.

பிற சர்வதேச விளையாட்டு போட்டிகளோடு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார்.

இந்தியாவில் 20 மில்லியனுக்கு மேலானோர் உடற்சார் அல்லது கற்றல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். ஆனால், பெரும்பான்மையான பொதுவிடங்களிலும், சேவைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் உள்கட்டுமான வசதிகள் இல்லை.

சென்னையில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னையின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில்

பிற செய்திகள்

ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்- ஓய்ந்ததா சர்ச்சை?

கொள்ளையில் பணம் பறிகொடுத்த முதியவருக்காக குவிந்த நன்கொடை: அசத்திய நெட்டிசன்கள்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்