பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்; சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரியதால் ஏற்பட்ட அமளியையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கேள்வி நேரம் துவங்கியது. அப்போது, கூவாத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக, சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென்று மு.க. ஸ்டாலின் கோரினார்.

ஆனால், இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை அவையில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

இதற்குப் பிறகு பேசிய தி.மு.கவின் சட்டசபை துணைத் தலைவர் கூவாத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டது குறித்துதான் வழக்கு இருக்கிறது; பணம் கொடுக்கப்பட்டது குறித்து வழக்கு இல்லை. ஆகவே அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்கலாம் என்று கூறினார். ஆனால், இதனை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதுதொடர்பான அமளி சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இதற்குப் பிறகு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதால் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட தி.மு.கவினர் தலைமைச் செயலகத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலின்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "கூவாத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக எம்.எல்.ஏக்களே கூறியிருக்கின்றனர். ஆகவே, பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த அரசைக் கலைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அரசே உத்தரவிட வேண்டுமென நேரமில்லா நேரத்தில் பேச விரும்பினோம். ஆனால், அதற்கு அனுமதிக்காமல் சபாநாயகர் எங்களை வெளியேற்றிவிட்டார்" என்று தெரிவித்தார்.

சாலை மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலினும் பிற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். மறியல் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது, சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அந்த அணியை ஆதரிக்க 6 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டதாக அந்த அணியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு தாவிய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், சூலூர் தொகுதியின் உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் பேசியதாகக் கூறப்படும் காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அதை மறுத்துள்ளனர்.

பிற செய்திகள்

வீடியோவில் இருப்பது நான்தான்; குரல் என்னுடையதல்ல: சரவணன்

லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து

''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''

கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்