நீர் சறுக்கல் விளையாட்டில் அசத்தும் சென்னையின் இளைஞர் படை!

  • 22 ஜூன் 2017

இந்தியாவில் தற்போது நீர் சறுக்கில் பங்கு பெறுபவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறார் இந்த கட்டுரையை எழுதிய சுப்ரியா வோரா.

படத்தின் காப்புரிமை RAMMOHAN PARANJAPE
Image caption தென்னிந்தியாவைச் சேர்ந்த சர்ஃபர் சுஹாசினி டமியன்

12 வயது சிறுவன், கடல் அலைகளின் நடுவே அந்த வெள்ளைநிற சர்ஃபிங் பெடலில் நேர்த்தியுடன் சறுக்குகிறான். அதனைக் கண்ட உள்ளூர் கூட்டம் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. முதன்முதலாக நீர் சறுக்கு போட்டியில் வென்ற அச்சிறுவன் மகிழ்ச்சியில் அலைகளில் நடனமாடுகிறான்.

அந்தச் சிறுவன்தான் அகிலன். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தவர்; ஐந்து மாதங்களுக்கு முன்னர் அவரது அண்டை வீட்டினரால் அவருக்கு சர்ஃபிங் எனப்படும் நீர் சறுக்கு அறிமுகமானது. ஆனால் இப்போது நீர் சறுக்குதான் அவனது வாழ்க்கை.

நிலத்தில் அதிகம் பேசாத சிறுவனாக தெரியும் அகிலன் நீரில் அசத்துகிறார். மேலும் பிறக்கும் போதே இம்மாதிரியான விளையாட்டுகளுக்கான திறமை இருப்பதற்கு அகிலன் ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார்.

படத்தின் காப்புரிமை SABAREESH ARUMUGAM
Image caption அகிலனுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் நீர்சறுக்கு அறிமுகமானது

"இந்தியாவில் மூன்று வகையான சர்ஃபர்கள் இருக்கிறார்கள். விடுமுறைக்காக சர்ஃபிங்கில் ஈடுபடுபவர்கள், தங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சர்ஃபிங்கில் ஈடுபடுபவர்கள் மற்றும் இந்த விளையாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதில் வாழ்வாதாரத்தை தேடுபவர்கள்" என்கிறார் நீர்சறுக்கு புகைப்படக் கலைஞரும் மற்றும் இந்திய சர்ஃபிங் சம்மேளனத்தின் துணைத் தலைவருமான ராம்மோகன் பரஞ்ச்பே.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரை நகரமான முல்கியில் உள்ள இந்திய சர்ஃபிங் சம்மேளனம், சர்வதேச சர்ஃபிங் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்மேளனத்தின்படி இந்தியாவின் 7500 கிமீ தூரம் உள்ள கடற்கரையில் 20 சர்ஃபிங் இடங்கள் உள்ளன.

படத்தின் காப்புரிமை RAMMOHAN PARANJAPE
Image caption இந்தியாவின் 7500 கிமீ தூரம் உள்ள கடற்கரையில் 20 சர்ஃபிங் இடங்கள் உள்ளன

பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவது, சர்வதேச நீர் சறுக்கு கூட்டமைப்பால் அங்கீரிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கொண்ட இந்திய நீர் சறுக்கு பள்ளிகளை பட்டியலிடுவது, நாட்டு மக்களிடையே இந்த விளையாட்டை கொண்டுச் சேர்க்க சர்ஃபிங் திருவிழாக்களை நடத்துவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்திய சர்ஃபிங் சம்மேளனம்.

படத்தின் காப்புரிமை RAMMOHAN PARANJAPE
Image caption இஷிதா மால்வியா, இந்தியாவின் முதல் பெண் தொழிற்முறை சர்ஃபர்

இந்தியாவில் தற்போது 8 பெண்கள் உட்பட 60 தொழில்முறை நீர் சறுக்கர்கள் உள்ளனர்.

அதில் சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் சேகர் பிச்சை என்பவரும் அடங்கும்.

"2011ஆம் ஆண்டு நான் இதை தொடங்கினேன், எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் இதை தொடர நான் முடிவு செய்து விட்டேன்" என்கிறார் சேகர் பிச்சை.

இவர் சில மாதங்களிலேயே சர்ஃபிங்கில் கைதேர்ந்தவராகி விட்டார். மேலும் நீர் சறுக்கு, கயாகிங், நின்று கொண்டே துடுப்பு போடுவது என அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெற்று வருகிறார்.

படத்தின் காப்புரிமை RAMMOHAN PARANJAPE
Image caption சேகர் பிச்சை, பாரம்பரிய மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்

கோவலத்தில் உள்ள சர்ஃபிங் பள்ளியில் முழுநேர பயிற்சியாளராகவும், தடகள வீரராகவும் உள்ளார்.

"இந்த விளையாட்டு எனக்கு உத்வேகத்தை தருகிறது. அதே நேரம், பொருளாதார ரீதியாகவும் எனக்கு பலனளிக்கிறது. மீன்பிடி தொழிலைக்காட்டிலும் இதில் நன்றாக வருமானம் வருகிறது. எனது குடும்பமும் ஏற்றுக் கொண்டது. எனது சகோதரர்களும் இந்த விளையாட்டை தீவிரமாக பயின்று வருகின்றனர்", என்கிறார் சேகர்.

இவர் இந்தியாவின் சார்பில் பல போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சர்பிஃபிங் சாமி என்று அழைக்கப்படும் ஜாக் ஹெப்னர், இந்திய கடற்கரையில் 1976ஆம் ஆண்டிலிருந்து நீர் சறுக்கில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கர்நாடக மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

1990களில் ஐந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு நாடு முழுவதும் தாம் நீர் சறுக்கில் ஈடுபட்டதாகவும், அச்சமயத்தில் தாங்கள்தான் அதில் ஈடுபட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டில் மந்த்ரா சர்ஃப் கிளப் என்ற பள்ளி முல்கியில் உள்ள ஹெப்னெர் ஆசிரமத்தின் பகுதியாக மாறியது. அதுதான் இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ சர்ஃபிங் பள்ளி.

படத்தின் காப்புரிமை Image copyrightRAMMOHAN PARANJAPE
Image caption தான்வி ஜகதீஷ்

இந்த பள்ளியைச் சேர்ந்த 17 வயது தான்வி ஜகதீஷ் என்ற மாணவி, ஃபிஜி ஸ்டாண்டப் பெடல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கு கொண்டார் மேலும் அமெரிக்காவின் கரோலினா கோப்பையையிலும் பங்கு பெற்றார்.

படத்தின் காப்புரிமை RAMMOHAN PARANJAPE
Image caption அனீஷா நாயக்

16 வயதாகும் அனீஷா நாயக், பெண்கள் என்றால் நீச்சல் பயிற்சிதான் மேற்கொள்ள வேண்டும் என்பதை முறியடிக்கவே நீர் சறுக்கில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

கடந்த வருடம், 129 ஆவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில், 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் நீர் சறுக்கு போட்டியை சேர்த்து கொள்ளவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இளைஞர்களை கவர முடியும் என கமிட்டி கருதுகிறது. மேலும் சர்வதேச சர்ஃபிங் கூட்டமைப்பு இதன் மூலம் இந்த விளையாட்டில் ஆர்வத்தை அதிகரிக்க முடியும் என நம்புகிறது.

இந்தியாவில் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்:

'கருணைக் கொலை செய்துவிடுங்கள்': ராபர்ட் பயஸ் கோரிக்கை

ஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது?

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரை பற்றிய ஐந்து விஷயங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்