''என் துப்பட்டாவிற்குள் ஒளியப் பார்க்கும் சமூகம்''

  • 20 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை HELEN CAROLINA

திருமணத்திற்கு பிறகு எனக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் பல பிரச்சனைகள்.எனக்கு இல்லை; என்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு.

என் சேலை முந்தானையின் வண்ணம்..

என் குட்டைபாவாடையின் நீளம்..

என் சுடிதாரின் கை அல்லது ஸ்லீவ் இல்லாத மாதிரி..

என் சட்டையின் பாக்கெட்..

நான் உடுத்தும் உடைகளை வைத்து என்னை ஏன் எடைபோடுகிறீர்கள்?

எனக்கு பிடித்தவற்றை அணிவது உங்கள் கண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? என அவர்களை கேட்கவேண்டும் போல இருக்கும்.. ஆனால் எப்போதும் போல மௌனம்தான் என் பதில்..

படத்தின் காப்புரிமை HELEN CAROLINA

நான் பாலூட்டும் தாயாக இருப்பதால், வீட்டில் இருக்கும்போது எளிதாக களையும் சட்டையை நான் அணிவது என் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் தகிக்கும் சூட்டின் இடையே சமையல் வேலை இருக்கும், வீட்டிற்கு யாரவது வருவார்கள், அவர்களை கவனிக்கவேண்டும், என் அலுவலக வேலையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் மனதின் ஆழத்தில் கத்திக்கொண்டே இருக்கும் ஒரு மனுஷியின் குரல், தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் ...

வீட்டுதொலைபேசியின் சத்தத்திற்கு இடையில் என் கைக்குழந்தையின் கதறல் கேட்டவுடன் பால் கொடுக்க சட்டை-பாவாடைதான் எனக்கு வசதியாக உள்ளது.

இதை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. சொன்னால் கேட்கவும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. காதுகளை இறுக்கமுடி அவர்களின் கட்டளைகளை ஏற்க மட்டுமே நான் பணிக்கப்பட்டுள்ளேன்..

இல்லாவிட்டால், நான் ஒரு அடங்காப்பிடாரி, வேலைக்கு போன பெண் என்பதால் அதிகம் பேசுகிறேன், வாயாடி என வசவுகளைக் கேட்கவேண்டியிருக்கும்..

படத்தின் காப்புரிமை HELEN CAROLINA

பாலியல் வன்முறைக்கும் உடைகளுக்கும் என்ன தொடர்பு?

என் நெருங்கிய உறவினர்கள், மிகவும் பழக்கம் இல்லாத உறவினர்கள் என பலர் என் உடைகளை பற்றி கேள்வி கணைகளை தொடுக்கும்போது, எனக்கு ஆதரவாக இருப்பது என் கணவர் பிரவீன் ஜோசப் மட்டுமே..

ஒன்பது ஆண்டுகள்.. பல ஐடி நிறுவனங்களில் வேலை செய்த நான் திருமணத்திற்கு பிறகு, எனது குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டேன்..

திருமணத்திற்குப் பிறகு, என்னுடைய வேலை, என் குடும்பம் என பலவற்றில் இருந்து விலகி வந்துள்ளேன். என்னுடைய உடை தேர்வில் நான் மாற்றம் செய்துகொள்ளவேண்டும் என கட்டாயப்படுத்துவது நியாமா?

படத்தின் காப்புரிமை HELEN CAROLINA

சில சமயம் நான் வீடு திரும்பியவுடன், ஸ்லீவ் இல்லாத உடை மேலே அணிந்திருக்கும் ஷ்ரக் சட்டையை கழற்றினால், என் உறவினர் மோசமாக விமர்சனம் செய்வார்கள்.

எல்லாவற்றையும் விட, அவ்வப்போது ஊடகங்களில் பாலியல் வன்முறை பற்றி செய்தி வந்தால், உடனே என்னிடம் தந்தை என்னிடம் காண்பிப்பார்... ''பார்.. நீ தவறாக உடை அணிந்தால், இது போல பிரச்சனை வரும்,'' என்று அறிவுரை மழை ஆரம்பம் ஆகிவிடும்..

நிர்பயா, ஸ்வாதி கொலை தொடங்கி சென்னை சிறுமி ஹாசினி போன்றவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு காரணம் அவர்களின் உடை அல்ல..

கொலையாளிகளின் வன்மம்தான் காரணம்...

படத்தின் காப்புரிமை HELEN CAROLINA

'என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்''

திருமணத்திற்கு முன்பு நான் ஜீன்ஸ், சுடிதார், குர்தா போன்றவற்றை விரும்பி அணிவேன்.. அப்போது கூட என்னுடைய சில உறவினர் '' எப்போதும் துப்பட்டா அணிந்துகொள்'' என்று கருத்து சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன்...

ஒரு குழந்தை பிறந்தது முதல், பெண் குழந்தைக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வெட்கம் என்பது ஊட்டிவளரக்கப்படுகிறது என்று எண்ணுகிறேன்..

உண்மையில் சமூகம்தான் படிப்படியாக திருந்தவேண்டும்...

என் துப்பட்டாவிற்குள் ஏன் சமூகத்தின் மோசமான கண்கள் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறன?

நான் சுதந்திரமாக எங்கும் சென்றுவர என் ஆடை எனக்கு துணையாக இருக்கவேண்டும்.. என்னை ஒருவர் கவனிப்பில் இருக்க உடை ஒரு தடையாக இருந்தால்?

தொடர்புடைய செய்திகள்:

ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய “புரட்சி” மணப்பெண்

''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''

படத்தின் காப்புரிமை HELEN CAROLINA

புடவை பெண்கள் குடும்பப் பாங்கானவர்களா?

திருமணம், வளைகாப்பு, கோவில் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு நான் கட்டாயம் புடவைதான் அணியவேண்டும்.

அதிலும் திருமண நிகழ்வுகளுக்கு பட்டுப்புடவை மட்டுமே அணியவேண்டும்.. சில பட்டுப்புடவைகள் கனமாகதாக இருக்கும்..

என் குழந்தை, கைப்பையை தூக்கிக்கொள்ள என் கணவர் அல்லது தந்தை என்னுடன் வரவேண்டும் என்ற நிலை இருக்கும்...

புடவை அதிலும் பட்டுப்புடவைதான் ஏன் அணியவேண்டும் என்று காரணம் கேட்டால்.. ட்ரடிஷனலாக தெரியவேண்டுமாம்..நாம் மற்றவர்கள் கண்களில் பவ்யமாக தெரியவேண்டும் என்பதற்காக நம்மை சிரமப்படுத்திக்கொள்வதில் என்ன இருக்கிறது?

படத்தின் காப்புரிமை HELEN CAROLINA

சேலை கட்டிய பெண்கள் குடும்பப் பாங்கானவர்கள் என்றும் நவீன ஆடைகளை அணிந்தவர்கள் மோசமானவர்கள் என்றும் ஒரு பிம்பத்தை இந்தச் சமூகம் கட்டியமைக்கிறது....

என்னுடைய ஒவ்வொரு போராட்டத்திலும் எனக்கு உதவியவர் பிரவீன்....என் உடையைப் பற்றி அவர் ஒருநாளும் விமர்சனம் செய்ததில்லை.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகான போராட்டத்தின் விளைவு… நான் அணியும் உடை பற்றி உறவினர்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர்..

என்னைப் போல பல பெண்களுக்கு திருமணத்திற்கு பின் எல்லாமே மாறிவிடுகிறது. கல்யாணத்திற்கு பிறகு மினி ஸ்கிர்ட் அணியக்கூடாதா?

ஒருவர் தனக்கு பிடித்த வகையில் உடை அணிவதில் மற்றொருவர் தலையிடுவது அநாகரீகம்.

நான் சென்னையில் ஒரு பொட்டிக் (boutique) தொடங்கியுள்ளேன். பெண்களால், பெண்களுக்கு நடத்தப்படும் ஒரு இணைய நிறுவனம் இது..

என்னுடைய வாடிக்கையாளருக்கு உடைகளைப் பரிந்துரைப்பேன்.. அவர்கள் அணியும் விதத்தைப் பரிந்துரைக்கமாட்டேன்!

(சென்னையை சேர்ந்த ஹெலன்கரோலினா பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவை)

பிற செய்திகள்

இந்திய பழங்குடி இனத்தில் தொடரும் குழந்தை திருமணம் (புகைப்படத் தொகுப்பு)

ஊபெர் நிறுவனம் மீது இரண்டாவது முறையாக வழக்கு தொடர்ந்த பெண்

இரான் பெண்கள் புதன்கிழமை தலையில் வெள்ளைத்துணி அணிவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்