தமிழக அரசைக் கலைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஸ்டாலின் மனு

  • 17 ஜூன் 2017

தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக பொறுப்பு ஆளுர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் துரைமுருகன், சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது அபுபக்கர் உள்ளிட்டோருடன் சென்று சந்தித்த மு.க. ஸ்டாலின் அவரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து குறிப்பிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமாக கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டு வாக்களிக்க அழைத்துவரப்பட்டனர் என்ற புகார்களை சபாநாயகர் கருத்தில் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் உல்லாச விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. கோரியதாகவும் ஆனால், சபாநாயகர் அதனை நிராகரித்து ஜனநாயகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சில தொலைக்காட்சிகள் மேற்கொண்ட 'ஸ்டிங் ஆபரேஷனில்' எஸ்.எஸ். சரவணன், கனகராஜ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், பிற சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்க நடந்த குதிரை பேரங்கள் குறித்து கூறியிருப்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, இதனால் சட்டமன்றம் போன்ற அமைப்புகளின் மீதே நம்பிக்கை போய்விடும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆகவே, ஆளுநர் தலையிட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும், மத்திய புலனாய்வு அமைப்பு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும், வருவாய் புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை குதிரை பேரம், தங்க கொள்முதல் குறித்து விசாரிக்க வேண்டுமென தனது மனுவில் ஸ்டாலின் கோரியுள்ளார்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "குதிரை பேரத்தால்தான் இந்த அரசு வெற்றிபெற்றிருக்கிறது. ஆகவே இந்த அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்