சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது

தீ விபத்தில் நாசமான சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image caption கோப்புப் படம்

சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் என்ற மிகப் பெரிய துணிக் கடையில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அதிகாலையில் தீ பிடித்தது. 100க்கணக்கான தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு நாட்களுக்கு மேலாக போராடி, இந்தத் தீயை அணைத்தனர்.

இதற்குப் பிறகு இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவங்கின. சுமார் 122 அடி உயரம் கொண்ட, ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் பிற்பகுதியில் கட்டட இடிபாடுகளைக் கொட்டி, அதன் மீது 'ஜா கட்டர்' எந்திரத்தின் மீது நிறுத்தப்பட்டு இடிக்கும்பணிகள் ஜூன் 2ஆம் தேதி துவங்கின.

கடந்த ஜூன் பத்தாம் தேதியன்று கட்டடத்தின் ஒரு பகுதி, எந்திரத்தின் மீது விழுந்ததில் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதற்குப் பிறகு, கட்டடத்தின் முகப்புப் பகுதி ஜூன் 17ஆம் தேதியன்று இடிந்து விழுந்தது. மீதமிருக்கும் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்த நிலையில், இன்று மாலையில் அந்தக் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது.

Image caption தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டிடம்

முதலில் 4 நாட்களுக்குள் இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 19 நாட்களுக்குப் பிறகுதான் கட்டடத்தை இடிக்க முடிந்துள்ளது.

அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியில் தங்க நகைக் கடையும் செயல்பட்டுவந்தது. அங்கு உள்ள நகைகள் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டகத்தை மீட்கும் பணியும் இடிபாடுகளை அகற்றும் பணியும் இனி துவங்கும்.

கடந்த இருபது நாட்களும் மேலாக, உஸ்மான் சாலையிலும் பாலத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

தொடர்பான செய்திகள்:

தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)

தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியில் தாமதம் ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்