`மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்'

  • 21 ஜூன் 2017

அதிகாலையிலேயே களைகட்டியிருக்கிறது தாமரைப்பாக்கம் மாட்டுச் சந்தை. திருவள்ளூர் மாவட்டத்தில், வெங்கல் செல்லும் சாலையில் இருக்கிறது இந்தச் சந்தை.

Image caption வெங்கல் மாட்டுச்சந்தை

முந்தைய நாள் மழை பெய்திருப்பதால், சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தாலும் யாரும் அதை பொருட்படுத்துவதாக இல்லை. விறுவிறுப்பாக விற்பனை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், புதியவர்களைப் பார்த்தவுடன் சுதாரித்துக்கொண்டு, "எதற்காக வந்திருக்கிறீர்கள்? இருக்கும் பிரச்சனை போதாதா?" என்கிறார்கள்.

"மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்த பிறகு எல்லோருக்குமே பயமாக இருக்கிறது" என்கிறார் சந்தையை நடத்தும் கோவிந்தராஜு. "தடைக்குப் பிறகு இந்த வாரம்தான் விற்பனை சற்றுப் பரவாயில்லை" என்கிறார் அவர்.

விவசாயத்திற்காக எருதுகளை வாங்குபவர்கள், வளர்ப்பதற்காக கன்றுகளை வாங்குபவர்கள், பால் கறந்து விற்கும் நோக்கத்தில் பசுக்களை வாங்குபவர்கள், இந்தப் பணிகள் எதற்குமே பயன்படாத மாடுகளை இறைச்சிக்காக வாங்குபவர்கள் என மாட்டுச் சந்தையின் வர்த்தகம் ஒரு தனி உலகம்.

வாரமொரு முறை கூடும் மாட்டுச் சந்தை

தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர, எல்லா மாவட்டங்களிலுமே மாடுகளுக்கான சந்தை ஒவ்வொரு வாரமும் கூடுகிறது. இவற்றில் பொள்ளாச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நடக்கும் சந்தைகள் மிகப் பெரியவை. அவற்றோடு ஒப்பிட்டால் தாமரைப்பாக்கம் சந்தை சிறியதுதான். ஆனால், சந்தை நடக்கும் நாளில் 600க்கும் மேற்பட்ட மாடுகளும் கன்றுகளும் விற்பனைக்காக வந்துபோகின்றன.

ஆனால், மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்த பிறகு, மாடுகளின் வருகை சட்டென 40 சதவீதம் அளவுக்குக் குறைந்து, தற்போது மீண்டுவருவதாகக் கூறுகிறார்கள் இந்த சந்தையை நடத்துபவர்கள்.

Image caption மாடு விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள் மாடு வைத்திருப்பவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்

மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு

மத்திய அரசு கடந்த மே மாதம் 23-ஆம் தேதியன்று, மாடு விற்பனை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. 1960-ஆம் ஆண்டின் கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த விதிகள் அறிவிக்கப்பட்டன. பசு, எருது, கன்றுகள், ஒட்டகம் ஆகிவற்றுக்குப் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த திருத்தத்தில், சந்தைகளில் வாங்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக்கூடாது.

மேலும், மாடுகள் வாங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விற்கக்கூடாது; மாநில எல்லைகளில் இருந்து 25 கி.மீ. தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் அமைக்கப்படக்கூடாது. தவிர, மாட்டை வாங்கியவர் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலி கொடுக்கக்கூடாது என்றும் கூறப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டது. மேகாலயா, கேரளா போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்கள் இதனை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. மேலும், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்த நான்கு வார காலத்திற்கு தடை விதித்தது.

இருந்தபோதும், இந்த அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முழுமையாக மறையவில்லை என்பது இந்த மாட்டுச் சந்தைகளைப் பார்த்தாலே தெரிகிறது.

'தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளது'

தமிழ்நாட்டில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜூன் 20ஆம் தேதியன்று தெரிவித்திருக்கிறார். ஆனால், பால் வற்றிப்போன பசுக்கள் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன என்பது எல்லோருக்குமே தெரிந்த ரகசியம்தான்.

"பொதுவாக மாடுகளை இறைச்சிக்காக விற்க வருகிறார்கள் என்றால் வேறு வழியில்லாமல்தான் விற்க வருகிறார்கள். பால் வற்றிப்போன மாடுகளை வேறு என்ன செய்ய முடியும்? ஒரு சம்சாரியால் எவ்வளவு நாளைக்கு ஒரு மாட்டிற்கு வெறுமனே தீனி போட முடியும்?" என்கிறார் கம்பத்திலிருந்து வந்துள்ள வியாபாரியான சுப்பைய்யா.

அந்தப் பசு மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படாவிட்டால், அவற்றை தெருவில் அவிழ்த்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் உள்ள எந்தச் சந்தைகளிலும் மாடுகளை விற்பதற்கு தடைகளோ, கட்டுப்பாடுகளோ இல்லாவிட்டாலும் காவல்துறையின் கெடுபிடிகள் அதிகமாகியிருப்பதாக இங்கு வரும் வியாபாரிகள் கூறுகிறார்கள். வழக்கமாக மாடுகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளிடம் 50 ரூபாயை பெற்றுக்கொள்ளும் போக்குவரத்து காவல்துறையினர் இந்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகு 100-200 ரூபாய் கேட்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

Image caption மாடு விற்பனை கட்டுப்பாடு: நீடிக்கும் தாக்கம்

கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக வெளிமாநிலங்களிலிருந்து மாடு வாங்குபவர்கள் அச்சத்தின் காரணமாக குறைந்த அளவிலேயே இந்தச் சந்தைக்கு வந்ததால், மாடுகளை வாங்குவதற்கு ஆளில்லாமல் கிடைத்த விலைக்கு விற்க வேண்டியிருந்தது என்கிறார் காவனூரைச் சேர்ந்த குணசேகரன்.

"மாட்டை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்துவிடலாம் என்று ஒருவர் முடிவுசெய்திருந்தார். ஆனால், போன வாரத்திற்கு முந்தைய வாரம் அவர் தன் மாட்டை விற்க பெரும்பாடு படவேண்டியிருந்தது" என்கிறார் அவர்.

கட்டுப்பாடுகள் மாடு வைத்திருப்பவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்

விவசாயிகளைப் பொறுத்தவரை மாடு தங்கத்தைப் போல; அவசரத் தேவைக்கு விற்றுப் பணமாக்கிக் கொள்வார்கள். பிறகு பணம் கிடைக்கும்போது மீண்டும் வாங்கிக் கொள்வார்கள். அப்படியிருக்கும்போது, வாங்கிய மாட்டை 6 மாதங்களுக்குள் விற்கக்கூடாது என்பது மாடு வைத்திருப்பவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் இங்கு வர்த்தகராக இருக்கும் சிராஜ்.

தவிர, இம்மாதிரி மாடுகளை இறைச்சிக்காக விற்கத் தடை விதிப்பது அவற்றுக்கே எதிராக முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு விவசாயியிடம் இருக்கும் 10 மாடுகளில் இரண்டு மாடுகள் மோசமாக இருந்தால், விற்க வேண்டிய சூழல் ஏற்படும்போது அந்த மோசமான இரண்டு மாடுகள்தான் விற்கப்படும். இதனால், நல்ல மாடுகளின் இனம் தொடர்ந்து வளரும் என்கிறார்கள் அவர்கள்.

Image caption 'தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளது'

ஏற்கனவே, தமிழகம் முழுவதும் விற்பனையில் ஏற்பட்ட சரிவால் 100 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மாட்டு வியாபாரிகள் மாநிலச் சங்கத்தினர் கூறியிருக்கின்றனர்.

இந்த தாமரைப்பாக்கம் மாட்டுச் சந்தையில் மட்டும் நம்பி, சந்தையை குத்தகைக்கு எடுத்திருப்பவர், அவரது நிர்வாகி, மாடுகளை விற்பவர்கள், வாங்குபவர்கள், தரகர்கள், வண்டி ஓட்டுபவர்கள் என பலவிதமானவர்கள் வாழ்வை நடத்திவருகின்றனர். இந்த சங்கிலியில் ஏற்படும் சிறு பிரச்சனையும் பெரும் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தொடர்பான செய்திகள்:

மாடுகளை இறைச்சிக்காக விற்க தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

மோதி அரசின் கால்நடை விற்பனை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பும் ஆதரவும்

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

`இறைச்சி விற்பனைக்குத் தடை முஸ்லிம்களுக்கான தடையா?'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்