`என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்': ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் கோரிக்கை

சிறையில் இருந்து விடுதலை கிடைக்காது என்ற நிலையில், தன்னைக் கருணைக் கொலை செய்து, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுமாறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ராஜீ்வ் காந்தி

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், 2014-ஆம் ஆண்டில் தங்களது விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் எடுத்த முடிவை எல்லா அரசியல் தலைவர்களும் ஆதரித்ததாகவும் நீதிமன்றங்களும் அதனைப் பரிந்துரைத்ததாகவும், இருந்தபோதும் அந்த முடிவு நிறுத்திவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாநில அரசின் முடிவை, முன்பிருந்த மத்திய அரசும் தற்போதைய மத்திய அரசும் கடுமையாக எதிர்த்து வருவதாகவும் தங்கள் வாழ்வை சிறைக்குள்ளேயே முடித்துவிட வேண்டுமென விரும்புவதாகவும் ராபர்ட் பயஸ் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த நீண்ட சிறைவாசம் தன்னை மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பத்தையும் தண்டனைக்குள்ளாக்கியிருப்பதாகவும் கடந்த பல ஆண்டுகளாக தன்னைத் தன் குடும்பத்தார் வந்து சந்திக்காத நிலையில், வாழ்வில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.

'சிறைக்குள் வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது'

இனி விடுதலை இல்லை என்ற நிலையில், உயிர்வாழ்வதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ஆகவே தன்னைக் கருணைக் கொலை செய்து உடலை, தன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிடுமாறும் ராபர்ட் பயஸ் தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

கடந்த ஜூன் 11-ஆம் தேதியோடு, தான் சிறைக்குள் வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ராபர்ட் பயஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

"நான் இன்று ராபர்ட் பயஸிடம் பேசினேன். அவருக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். இருந்தும் வாழ முடியவில்லை. ஆகவே இந்த முடிவுக்கு வந்துவிட்டார். இந்தக் கடிதம் சிறைத் துறைக் கண்காணிப்பாளர் மூலம் முதல்வருக்கு அனுப்பப்பட்டது" என பிபிசியிடம் கூறினார் அவரது வழக்கறிஞரான சந்திரசேகர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பேரறிவாளன்

முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்பான செய்திகள்:

'செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம்'- நளினி

ராஜிவ் காந்தி கொலை: பிரியங்காவுடன் சந்திப்பு பற்றி நளினி

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோருகிறது தமிழக அரசு

பேரறிவாளன் மீது தாக்குதல்- அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

இதையும் படிக்கலாம்:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு

`மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்