குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவு ஏன் ? : ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்

  • 22 ஜூன் 2017
Image caption ஓ பன்னீர்செல்வம் வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவர் நடத்திய ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப்போவதாக அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா பிரிவின் பொருளாளரான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித் ஷா பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு, ஆதரவளிக்கும்படி கேட்டதாகவும் அதனால், ராம்நாத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனது பிரிவு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், ராம்நாத் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், பிஹார் ஆளுனராகவும் சிறப்பாகச் செயல்பட்டவர் என்பதால் ஆதரவளிப்பதாகக் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் தலித் வேட்பாளரையே நிறுத்தக்கூடும் என்ற பேச்சுக்கள் அடிபடும் நிலையில், அதற்கு முன்பாகவே ஆதரவை அறிவிப்பது ஏன் என செய்தியாளர்கள் கேட்டதற்கு சரியான பதிலை ஓ. பன்னீர்செல்வம் அளிக்கவில்லை.

அ.தி.மு.கவில் மொத்தமுள்ள 135 சட்டமன்ற உறுப்பினர்களில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளனர். 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவை தெரிவித்திருந்தனர்.

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 34 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கும் நிலையில், அவர் என்ன நிலைப்பாடை எடுப்பார் என்பது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களில், மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி, தான் பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை என தெரிவித்துவிட்டார்.

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் உறுப்பினரான கருணாஸ் வியாழக்கிழமை காலையில் டிடிவி தினகரனைச் சந்தித்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், சசிகலா யாரை ஆதரிக்கச் சொல்வாரோ அவரையே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கப்போவதாகத் தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்