குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு எத்தனை மதிப்பெண் வழங்கலாம்?

பால் பவுடர், தண்ணீர் பாட்டில், நாப்கின், பழத்துண்டுகள் அடங்கிய டப்பா, குழந்தை விளையாட கொஞ்சம் பொம்மைகள், குழந்தைக்கு இரண்டு மாற்றுத் துணி, குழந்தை என் (ஸ்வாதி)உடையில் வாந்தி எடுத்துவிட்டால் அல்லது சிறுநீர் கழித்துவிட்டால் எனக்கு மாற்று உடை...இவை எல்லாம் எங்கு சென்றாலும் நான் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள்.

படத்தின் காப்புரிமை SWATHI PAUL

என் கணவர் லோகேஷுக்கு அப்படியில்லை. அவர் எப்போதும்போல அவரது செல்போனை எடுத்துக்கொண்டால் போதும்.

குழந்தை பிறந்த பிறகு, ஓர் ஆண் வெளியே செல்ல எந்தவித சிரமமும் இல்லை. ஒரு பெண்ணுக்கு அப்படி இல்லை. இதன் காரணமாகவே, பல நேரங்களில் வெளியே செல்வதற்கு நான் யோசித்ததுண்டு.

நான் குளிப்பதற்கு அல்லது சமையல் செய்யும் நேரத்தில் மட்டும் கணவர் சிறிது நேரம் குழந்தையை பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.

எந்த நேரமும் குழந்தையை சமாதானப்படுத்துவது பெண்ணால் மட்டுமே முடியும் என்று பலர் எண்ணுகிறார்கள்.

ஏன் அப்பாக்களால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாது?

படத்தின் காப்புரிமை SWATHI PAUL

தமிழகத்தில் இருந்து இங்கிலாந்திற்கு வந்து நானும், கணவரும் வேலை செய்தபடியே குழந்தை ஆர்யாம்பிகையை வளர்க்கிறோம். தற்போது அவள் 18 மாதக் குழந்தை. வீட்டில் எனக்கு உதவ என் கணவர் மட்டுமே உள்ளார்.

லோகேஷ் குழந்தைக்கு டைப்பர் மாற்றக் கற்றுக்கொண்ட போது, அவரின் நண்பர்கள் கேலி செய்தார்கள்.

லோகேஷின் நண்பர்கள் சிலர், எந்தக் காலத்திலும் தங்களின் குழந்தைக்கு டைப்பர் மாற்றியதில்லை, துணி மாற்றிவிடவில்லை என்பதை பெருமையாக கூறிக்கொள்கிறார்கள்.

தங்களுக்கு குழந்தையை சமாதானப்படுத்தத் தெரியவில்லை, வளர்க்கத் தெரியவில்லை என்பதை எண்ணி ஏன் ஆண்கள் வெட்கப்படுவதில்லை?

படத்தின் காப்புரிமை SWATHI PAUL

குழந்தை பிறந்த ஐந்தாவது நாள் இரவு நடந்த ஒரு நிகழ்வை தற்போது நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது.

குழந்தையை கையில் வைத்தவாறு என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்.

சிறிது நேரத்தில் விழித்துப் பார்த்தபோது, என் குழந்தை என்னிடம் இல்லை.

என் மாமியார் வைத்திருந்தார்.

குழந்தை என் மடியில் இருந்து விலகி, மெத்தையில் இருந்து தொங்கிக்கொண்டு இருந்தது என்றார்.

என்னை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொன்னார்.

என்னை அறியாமல் அழுகை வந்துவிட்டது.

சிறிது நேரம் கழித்து லோகேஷ் எழுந்தார் . எதற்கு அழுகிறாய் என்று கேட்டார்.

நடந்ததைச் சொன்னவுடன், குழந்தை தற்போது பத்திரமாக இருக்கிறாள்தானே? அழாதே என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் தூங்கிவிட்டார்.

எனக்கு அழுகை வரவும், குற்ற உணர்ச்சி ஏற்படவும் லோகேஷுக்கு குறட்டை வரவும் என்ன காரணம்?

ஒரு குழந்தையை பெற்றுக்கொண்ட நாள் முதல் பெண் என்பவள் குற்றஉணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதாக உனார்கிறேன்.

ஆனால் என் கணவருக்கு அந்தக் குற்ற உணர்ச்சி ஏற்படுவதாகத் தெரியவில்லை.

குழந்தை வளர்ப்பது பெண்களின் பிரதான பொறுப்பாக பார்க்கப்படுகிறது.

கணவர் என்பவர் கொஞ்சம் உதவலாம்.

ஆனால் குழந்தையை பார்த்துக்கொள்ளும் முழுப் பொறுப்பும் எனக்குத்தான் உள்ளது என்ற எண்ணத்தை எனக்கு இந்தச் சமூகம் ஏற்படுத்துகிறது.

என் கணவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள தயாராக இருந்தாலும், சிறிது நேரத்தில் அவரால் அதை சகித்துக் கொள்ளமுடிவதில்லை.

படத்தின் காப்புரிமை SWATHI PAUL

என் குழந்தைக்கு நான் போதுமான அன்பை, உணவை, கல்வியை, நடத்தையை அளிக்கவில்லையா என்று ஒவ்வொரு தருணத்திலும் தாய்மார்கள் எண்ணிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

அந்தப் பொறுப்புகளில் தந்தைகளுக்கு பெருமளவு விலக்கு அளிக்கப்படுவதாக எண்ணுகிறேன்.

வீட்டை தூய்மையாக வைத்திருப்பது, சமையல் செய்வது, குழந்தையை தூங்க வைப்பது என எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நான் என் அலுவலக வேலையைச் செய்த நாட்கள் பல.

மிகவும் களைப்பாக இருக்கும் எனக்கு நானே காபி தயார் செய்து கொண்டு, வேலையைத் தொடங்குவேன்.

மகள் அழும் சத்தம் கேட்டால், படுக்கை அறைக்கு ஓடிச்சென்று அவளை சமாதானப்படுத்துவேன்.

என் கணவர் அருகில் குறட்டையுடன் நன்றாக உறங்கிக்கொண்டு இருப்பார்.

என் கணவருக்கு மட்டுமல்ல பல ஆண்களுக்கும் குழந்தை இரவில் அழுவது ஏன் காதில் விழுவதில்லை?

ஆனால் இந்தக் குழந்தை வளர்ப்பு, தாயாகிவிட்டதால், என் தொழில்முறை வேலையை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் எல்லாம் சேர்த்து உடல் அளவிலும், மனதளவிலும் என்னை மிகவும் தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக மாற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

''என் துப்பட்டாவிற்குள் ஒளியப் பார்க்கும் சமூகம்''

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்த ஆண்கள்

படத்தின் காப்புரிமை SWATHI PAUL

லோகேஷ் மகளை வளர்ப்பதில் ஆரம்ப காலத்தில் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தாலும், தற்போது புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.

குழந்தை வளர்ப்பில்,என் அப்பாவை விட என் கணவர் ஈடுபாட்டுடன் இருப்பதாக உணர்கிறேன்.

என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தில், குழந்தையைப் பார்த்துக்கொள்ள, அவர் இரண்டு வார காலம் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. இந்தியாவில் 15 நாட்கள் என்று தெரிந்துகொண்டேன்.

ஆனால் அரசாங்கம் கூட, குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு மிகச்சிறிய பங்கு இருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு வாரங்கள் மட்டும் விடுமுறை அளித்தால் போதும் என்று எண்ணுவது சரியா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவாக இருந்தாலும், இங்கிலாந்தாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பு பெண்களுக்கான வேலையாகவே பார்க்கப்படுகிறது.

தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை.. தந்தைக்கும் தேவை.

தந்தைகளிடமும் தாய்மை சுரக்கும்தானே?

(இங்கிலாந்தில் வசிக்கும் ஸ்வாதி பால் பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவை)

பிற செய்திகள்:

சினிமா விமர்சனம்: வனமகன்

கத்தார், வளைகுடா நாடுகளுக்கு இடையில் குடும்ப பிரச்சனை: அமெரிக்கா

விஞ்ஞானிகளையே அதிர வைக்கும் 5 ரோபோக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்