உத்தரப் பிரதேசத்தில் அமையும் டெல்லியின் 2-ஆவது சர்வதேச விமான நிலையம்

டெல்லியில் விமானப் போக்குவரத்திற்கான தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேசத்தின் ஜீவர் நகரில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லி

செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்த உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.அஷோக் கஜபதி, தற்போது ஆண்டிற்கு 62 மில்லியன் மக்கள் விமானத்தில் பயணம் செய்கின்றனர் அது 2020-ஆம் ஆண்டிற்குள் 91 மில்லியனாகவும், 2024-ஆம் ஆண்டிற்குள் 109 மில்லியனாகவும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்தார்.

எனவே, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகப்படியான அளவாக இது இருப்பதால், 7-10 வருடங்களுக்குள்ளாக டெல்லியின் இரண்டாவது விமான நிலையமாக இந்த விமான நிலையம் அமையவுள்ளது எனவும் அமைச்சர் பி.அஷோக் கஜபதி தெரிவித்துள்ளார்.

இந்த நொய்டா சர்வதேச விமான நிலையம் இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து 72 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ளது.

இந்த விமான நிலையம் 3000 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ளது மேலும் முதல் கட்டமாக 10,000 கோடி செலவில் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கட்டுமானம் அமையும். முதல் கட்டத்தில் ஒரு ரன்வேயும் அடுத்தடுத்த கட்டத்தில் 15-20,000 கோடிகள் செலவில் மூன்று ரன்வேயும் அமையவுள்ளது.

அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்த விமான நிலையத்தால் ஆண்டொன்றிற்கு 30-50 மில்லியன் பயணிகள் பயன் பெறுவார்கள்.

இந்த விமான நிலையம் டெல்லிக்கு மட்டும் பயன்படாமல், உத்தர பிரதேசத்தில் உள்ள மேற்கு நகரங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என மாநில விமானப் போக்குவரத்திற்கான அமைச்சர் ஜயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் நொய்டா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பல தொழிற்சாலைகள் இந்த விமான நிலையம் மூலம் பயன்பெறும் எனவும், அது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜீவர் நகர் வரை மெட்ரோ சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், சாலை மற்றும் ரயில் என அனைத்து மார்க்கமாகவும், விமான நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை செயலர் ஆர்.என்.செளபே தெரிவித்துள்ளார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்