தங்குவதற்கு வீடில்லாமல் பணியில் எப்படி தொடர்வது? கொச்சி மெட்ரோவில் பணிபுரியும் திருநங்கைகள் ஆதங்கம்

கேரள மாநிலம், கொச்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில் பணியமர்த்தப்பட்ட திருநங்கைகளில் சிலர், தங்களுக்கு தங்குவதற்கு வீடு கிடைக்கவில்லையென பணியில் இருந்து விலகிவருவதாக செய்திகள் தெரிவித்த நிலையில், பணியில் எஞ்சியிருப்போர் அரசு தாங்கள் குடியிருக்க வீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள் (கோப்புப் படம்)
படக்குறிப்பு,

கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள் (கோப்புப் படம்)

இது குறித்து பிபிசி தமிழிடம் கொச்சி மெட்ரோ ரயில் சேவையில் பணிபுரியும் திருநங்கையான அம்ரிதா கூறுகையில், '' கொச்சி மெட்ரோ ரயில் சேவையில் பணியமர்த்தப்பட்ட திருநங்கைகள் தனியார் விடுதியில் தங்கி வந்தோம். எங்களுக்கு சம்பளமே 9000 ரூபாய்தான். ஆனால், விடுதியில் ஒருநாள் தங்குவதற்கு 400 முதல் 600 ரூபாய் செலவாகிறது'' என்று தெரிவித்தார்.

''எங்களுக்கு தரப்படும் குறைவான சம்பளத்தில், நாங்கள் எவ்வாறு விடுதிக்கு பணம் தரமுடியும்?'' என்று வினவிய அம்ரிதா, மேலும் தெரிவிக்கையில், ''எங்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பணி வழங்கியது. ஆனால், எங்களின் நலனை உத்தேசித்து நாங்கள் குடியிருக்க கேரள அரசு வீடு வழங்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.

'பணியில் தொடர்வது அரசின் கையில்தான் உள்ளது'

''தற்போது ஒரு கிறிஸ்துவ அமைப்பின் மூலம் எங்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு வீடு கிடைத்துள்ளது. மெட்ரோ சேவையில் பணிபுரியும் 4 திருநங்கைகள் சேர்ந்து ஒரு வாடகை வீடு பார்த்தோம். அங்கு 25,000 ரூபாய் முன்பணம் மற்றும் 8000 ரூபாய் வாடகை கேட்கிறார்கள். இதனையும் நாங்கள் உத்தேசித்து வருகிறோம். ஆனால், நாங்கள் பணியில் தொடர்வது அரசின் கையிலேதான் இருக்கிறது'' என்று அம்ரிதா பிபிசி தமிழிடம் கூறினார்.

படக்குறிப்பு,

தங்குவதற்கு வீடில்லாமல் பணியில் எப்படி தொடர்வது? கொச்சி மெட்ரோயில் சேவை பணிபுரியும் திருநங்கைகள் ஆதங்கம்

எங்களுக்கு தேவையான சலுகைகளையும், வசதிகளையும் அரசு செய்து தந்தால்தான் நாங்கள் பிரச்சனை இன்றி பணியில் தொடர முடியும் என்று தெரிவித்த அம்ரிதா, தமிழகத்தில் வழங்குவதை போன்று கேரள அரசு திருநங்கைகளுக்கு வீட்டு வசதிகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்ரிதா எடுத்துரைத்தார்.

திருநங்கைகளின் நலனுக்கான 10 கோடி ரூபாய் பணம் என்ன ஆனது?

மேலும், திருநங்கைகளின் நலனுக்காக கேரள அரசு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 10 கோடி ரூபாய் பணம் என்ன ஆனது என்று அம்ரிதா கேள்வி எழுப்பினார்.

எங்களின் கோரிக்கை தொடர்பாக இன்று திங்கள்கிழமை நடந்த சந்திப்பில் பணியைவிட்டு விலக்கியவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். உணவு வழங்குவதற்கு கேன்டீன் வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

எங்களில் சிலர் பணியில் இருந்து விலகியதால் சில மலையாள ஊடகங்கள் எங்களை தொடர்பு கொண்டன. இப்பேட்டிகள் வெளிவந்ததால்தான் தற்போது எங்களின் கோரிக்கைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது என்று அம்ரிதா மேலும் குறிப்பிட்டார். இதனால்தான் தற்போது எங்களுக்கு தங்குவதற்கு வீடு கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில், பாலின ரீதியான பாகுபாட்டை எதிர்த்து போராடும் நோக்கில் 23 திருநங்கைகள் நியமிக்கப்பட்டனர்.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் செயல்பாடு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இத்திருநங்கைகள் பயண சீட்டு முகவர்களாகவும், துப்புரவு பணியாளர்களாகவும் நியமிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்