வீதியில் `நீதி` வழங்கும் இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தானில், லாகூரில் சைக்கிள் மெக்கானிக் அஷ்ஃபாக் மசீஹ் லஹோர். கிறித்துவரான அவரிடம் ஒரு இஸ்லாமியர் சைக்கிளை பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்தார், சைக்கிளும் பழுது பார்க்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

அதற்கான கூலி ஐம்பது ரூபாய் என்று சொன்னதும் பிரச்சனை எழுந்தது.

ஐம்பது ரூபாய் அதிகம், முப்பது ரூபாய் தான் கொடுப்பேன் என்ற பேரம் வாக்குவாதமாக முற்றியது. பேரத்திற்கு லஹோர் படியவில்லை என்றதும், சைக்கிள் பழுது பார்க்க வந்தவர் `நபி நாயகத்தை லஹோர் அவமானப்படுத்திவிட்டார்` என்று சொல்லி கூச்சலிட்டார்.

கூட்டம் கூடியது, அங்கிருந்த கடைக்காரர் புத்திசாலித்தனமாக காவல்துறைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். அங்கு வந்த காவல்துறையினர் நபிகள் நாயகத்தை அவமானப்படுத்தியதான குற்றச்சாட்டில் அஷ்ஃபாக் மசீஹ் லஹோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காவல்துறையினர் இவ்வாறு செய்யாவிட்டால், மக்கள் கூட்டம் லஹோரை அடித்து துவம்சம் செய்திருப்பார்கள். இப்போது மத நிந்தனை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் லஹோரின் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

படத்தின் காப்புரிமை EPA

லஹோர் மீது தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டாலும் கூட, அவரை வேறு யாராவது கொன்றுவிடுவார்கள்.

வெறும் ஐம்பது ரூபாய் பணத் தகராறில் அஷ்ஃபாக் மசீஹ் லஹோரின் வாழ்க்கையை மாற்றிய அந்த நபர் சுமத்திய குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிக்கப்பட்டாலும்கூட, அவருக்கு எந்தவிதமான தண்டனையும் இல்லை, பிரச்சனையும் இல்லை.

இங்கு இந்தியாவில்…

பாகிஸ்தானில் அஷ்ஃபாக் மசீஹ் லஹோருக்கு இந்த துயரச் சம்பவம் நடந்த அதே தினம், இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்தது.

ரயிலில் பயணித்த நான்கு முஸ்லிம் இளைஞர்களுக்கும், ஒரு இந்து பயணிக்கும் இடையில் நடந்த இருக்கைக்கான தகராறின் முடிவு?

`இவர்கள் போதையில் இருக்கிறார்கள், மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்` என்று இந்துப் பயணி பிற நான்கு பயணிகளின் மீது குற்றச்சாட்டை சுமத்தினார்.

அங்கு கூடிய கும்பல், நான்கு முஸ்லிம் இளைஞர்களையும் அடித்துத் துவைத்துவிட்டனர். நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை என்று கதறிய நால்வரின் கதறலும் கூட்டத்தினரின் காதிலேயே விழவில்லை.

மோசமாக அடிப்பட்ட அந்த நான்கு பேரில் ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் இறந்துவிட்டான்.

படத்தின் காப்புரிமை HAJI ALTAF

ஒரே நாளில் இரு அண்டை நாடுகளில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவங்களின் அடிநாதம் ஒன்றுதான்.

பெரும்பான்மையாக இருப்பவர்கள் சொல்வது, அது தவறாக இருந்தாலும்கூட, அதுவே அம்பலத்தில் ஏறுகிறது.

பாகிஸ்தானில் கடந்த 31 ஆண்டுகளில் 1,050 பேர் மீது மத நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, அதில் 450 பேர் முஸ்லிம்கள், பிற மதத்தை சேர்ந்தவர்கள் 600 பேர்.

பாகிஸ்தானில் மொத்தம் 122 மாவட்டங்கள் இருந்தாலும், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் தான், கடந்த 31 ஆண்டுகளில் இஸ்லாம் மற்றும் நபிகளை நிந்தனை செய்த குற்றச்சாட்டுகளில் 80 சதவிகிதம் பதிவாகியுள்ளது.

அதேபோல், இந்தியாவில் உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தான் பசுவதை தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகம்.

இதில் முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்கள் மீது தான் அதிக அளவு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. ஆனால் தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை PM TEWARI

இந்தியாவில் தலித் அல்லது முஸ்லிம்களை விலக்க வேண்டுமானால் மாட்டை அவமானப்படுத்தியதாக கூறினால் போதும்.

அது போல, பாகிஸ்தானில் யாருடைய முகமாவது பிடிக்கவில்லை என்றால், இஸ்லாமை அவமானப்படுத்தியதாக சொன்னாலே போதும்!

ஒரு நாட்டில் 20 கோடி நீதிபதிகளும், மற்றொரு நாட்டில் 130 கோடி நீதிபதிகளும் இருக்கிறார்கள். விவகாரம் நீதிமன்றத்திற்கே போகவேண்டாம், நீதிபதிகளின் அதிகாரத்தை அங்கு கூடும் மக்களே கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

பிற செய்திகள்:

செளதி அரசின் புதிய வரித் திட்டம்: வெளிநாட்டவர் வெளியேற கவுண்ட் டவுன் துவங்கிவிட்டதா?

வெள்ளை மாளிகையில் `ஈத்` விருந்து வழக்கத்தை நிறுத்திய டிரம்ப்

10 ஆண்டுகளில் 10 கருச்சிதைவுகள்: ஒரு தம்பதியின் துயரம்

சிரியாவில் மீண்டும் ஒரு ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்