குட்கா விற்பனையாளர்கள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்தார்களா? சர்ச்சையால் தி.மு.க. வெளிநடப்பு

அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ்
படக்குறிப்பு,

அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ்

குட்கா எனப்படும் போதைப் பொருளை தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்தவர்களிடமிருந்து மாநில அமைச்சர் ஒருவரும் காவல்துறை அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. வெளிநடப்புச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா எனப்படும் புகையிலை கலந்த போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள முன்னணி குட்கா தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. அந்த சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில், எந்தெந்த அமைச்சர்களுக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாயின.

தமிழகத்தில் குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டு வந்ததாக டைரி குறிப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த டைரியில் உள்ள விவரங்கள் குறித்து கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் பி.ஆர். பாலகிருஷ்ணன் அப்போதைய தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்கள் நேற்று ஊடகங்களில் வெளியாயின.

எம்டிஎம் என்ற அந்த குட்கா நிறுவனத்தின் கூட்டாளிகளில் ஒருவரான மாதவராவ், அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இது குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கோரினார்.

ஆனால், ஊடகங்களில் வந்த தகவல்கள் கூறித்து சபையில் விவாதிக்க அனுமதியில்லையென்றும், இன்று காலையில்தான் இது தொடர்பாக தி.மு.க. மனு அளித்திருப்பதாகவும் உடனே இந்த விவகாரத்தைப் பேச அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து தி.மு.க.வினர் இந்த விவகாரத்தைப் பேச அனுமதிக்கக்கோரினர்.

இந்த அமளி தொடர்ந்தால், தி.மு.கவினரை வெளியேற்ற நேரிடும் என சபாநாயகர் கூறியதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "குட்கா வியாபாரிகள் லஞ்சமாகக் கொடுத்த பணத்தை டைரியில் குறித்து வைத்துள்ளனர். அதில் முதலிடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தற்போதைய காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோரது பெயர்கள் அந்த டைரியில் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 40 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை இது தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதுவரை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறினார்.

"ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சமயத்திலும் வருமான வரித் துறை, விஜய பாஸ்கர் வீட்டிலிருந்து 89 கோடி ரூபாய் கைப்பற்றியது. அப்போது கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களிலும் முதல்வரது பெயர், அமைச்சர் செல்லூர் ராஜுவின் பெயர் ஆகியவை வரிசையாக இருந்தன. இது குறித்தும் இப்போதைய தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

"டிசம்பர் மாதம் 21ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது, இது தொடர்பான ஆவணங்கள் சிக்கி இருக்குமோ என பயந்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் எழுதுகிறார். அதாவது குற்றவாளியே கடிதம் எழுதியிருக்கிறார்" என்றும் ஸ்டாலின் கூறினார்.

"உயிரைக் காப்பாற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய சுகாதாரத் துறை அமைச்சரே உயிரை எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஆனால், முதல்வர் பழனிச்சாமி அதை செய்ய மாட்டார். ஏனென்றால் விஜய பாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் அவரது பெயர்தான் முதலிடத்தில் இருந்தது" எனவும் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பிற செய்திகள் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்